இன்று சர்வதேச பெண்கள் தினத்தை (மார்ச் 8) முன்னிட்டு இந்தியாவில் பல நிறுவனங்கள் பெண்களுக்கு Menstrual Cycle காலத்தில் 2 முதல் 3 நாள் விடுமுறை அறிவித்துள்ளது, முக்கியமான மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.
இதேவேளையில் பெண்களைக் கௌரவிக்கும் விதமாகவும், பெண்களைப் போற்றும் விதமாகவும், பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக் கழகம் பெண் பயணிகளுக்கு இலவச பேருந்து பயணத்தை வழங்குவதாகத் தெரிவித்தது.
அனைத்து மாநில அரசுகளும் வியக்கும் வகையில் பெண்கள் தினத்தை ஒருபடி மேலே சென்று தெலுங்கானா அரசு மார்ச் 8 அன்று மாநில அரசின் கீழ் வேலை செய்யும் பெண் பணியாளர்களுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது.
ஆனால் இதைவிடச் சிறப்பான அறிவிப்பைக் கேரள அரசு அறிவித்துள்ளது.
இந்திய வளர்ச்சி
இந்தியாவின் வளர்ச்சியில் ஆண்களை விடப் பெண்களின் பங்கு அதிகமாக இருந்தாலும், பெண்கள் முழுமையாக நேரடி வர்த்தகச் சந்தைக்கு வருவது இல்லை. பெரு நகரங்களில் வேலைவாய்ப்பு, வர்த்தகம் ஆகியவற்றில் பெண்களின் பங்கீடு உயர்ந்தாலும், 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களில் இதன் வேகம் குறைவாகவே உள்ளது.
பெண்கள்
இதை ஊக்குவிக்கும் வகையில் பெண்களை வர்த்தகச் சந்தைக்குள் கொண்டு வரவும், அவர்களை வருமானம் ஈட்டும் நபராக மாற்ற வேண்டும் என்பதற்காகக் கடன்களுக்கான வரம்பை அதிகரித்து அசத்தியுள்ளது.
50 லட்சம் கடன்
கேரள மாநிலத் தொழில் வளர்ச்சிக் கழகத்தின் (KSIDC) 'வீ-மிஷன் கேரளா' திட்டத்தின் கீழ் பெண்களுக்கான கடன் வரம்பை ரூ. 25 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாக உயர்த்துவது உட்படப் பெண் தொழில்முனைவோரை ஆதரிப்பதற்கான முக்கியத் திட்டங்களைச் சர்வதேச மகளிர் தினத்தன்று கேரள அரசு வெளியிட்டது.
5 சதவீத வட்டி
இது மட்டும் அல்லாமல் இந்த 50 லட்சம் ரூபாய்க் கடனுக்கு வருகிற ஏப்ரல் 1 முதல் வெறும் 5 சதவீத வட்டியில் அளிக்கப்பட உள்ளது.
தொழில்துறை மற்றும் வர்த்தகத் துறை சார்பில் புதன்கிழமை நடைபெற்ற பெண் தொழில்முனைவோர் கூட்டத்தில் இந்த முடிவை அறிவித்தார் தொழில்துறை அமைச்சர் பி.ராஜீவ்.
வர்த்தக விரிவாக்கம்
கேரள மாநிலத் தொழில் வளர்ச்சிக் கழகத்தின் 'வி-மிஷன் கேரளா' திட்டத்தின் கீழ் பெண் தொழில்முனைவோருக்குக் கடன் தொகையை இரட்டிப்பாக்குக உயர்த்தியுள்ளது மூலம் தங்கள் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யப் பெரிய அளவில் உதவும் எனக் கேரள மாநில தொழில்துறை அமைச்சர் பி.ராஜீவ் தெரிவித்தார்.
தள்ளுபடி காலம் நீட்டிப்பு
மேலும், பெண் தொழில்முனைவோரை அடையாளம் கண்டு, ஆதரவளித்து, ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட இந்தத் திட்டத்தின் கீழ் உள்ள தள்ளுபடி காலம் அதாவது moratorium period, தற்போது ஆறு மாதங்களாக உள்ளது, இதை ஓராண்டாக உயர்த்தப்படும் என்று அமைச்சர் ராஜீவ் கூறினார்.
மகளிர் கூட்டுறவுச் சங்கங்கள்
இதேபோல் மகளிர் கூட்டுறவுச் சங்கங்களுக்கு 5 லட்சம் ரூபாய் கூட்டு மானியம் அளிக்கப்பட உள்ளதாகவும் ராஜீவ் அறிவித்துள்ளார். இந்தப் புதிய கடன் சேவை ஏப்ரலில் செயல்படத் தொடங்கும் கூட்டுறவுச் சங்கங்களுக்கும் அல்லது ஏற்கனவே இருக்கும் மகளிர் கூட்டுறவுச் சங்கங்கள் தங்களது தொழிலை நவீனமயமாக்கல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்காகவும் வழங்கப்படும் என்று கேரள தொழில்துறை மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
இன்குபேஷன் மையம்
மேலும் ஏப்ரல் 1, 2023 முதல் பெண் தொழில் முனைவோர் கோழிக்கோட்டில் உள்ள இன்குபேஷன் மையத்தில் 50 சதவீத வாடகை கொடுத்து வசதிகளைப் பெறலாம் என்றும் அமைச்சர் ராஜீவ் கூறினார்.


Click it and Unblock the Notifications