ஒரு தொழிலை தொடங்கி அதனை வெற்றிகரமாக நடத்துவது என்பது மலையை கட்டி இழுப்பதற்கு சமம். டாடா, இந்துஜா போன்ற சில நிறுவனங்கள் பல தலைமுறைகளை கடந்து தங்களது வர்த்தகத்தை வெற்றிகரமாக நடத்தி வருகின்றன.
ஆனால் பெரும்பாலான நிறுவனங்களின் வர்த்தகம் சில தலைமுறைகளை கூட தாண்ட முடியாமல் முடிவுக்கு வந்து விடுகின்றன. ஆனால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 40 தலைமுறையினர் 1,445 ஆண்டுகளாக ஒரு நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர். இந்த நிறுவனம் நம்ம நாட்டில் இல்லை உழைப்பாளிகளுக்கு பெயர் பெற்ற ஜப்பானில் உள்ளது.

கொரியாவின் பிரபலமான கட்டிட நிபுணர் ஷிகெமிட்சு கொங்கோ, கோயில் கட்டுமானங்களுக்கு பெயர் பெற்றவர். இவரை பற்றி கேள்விப்பட்ட ஜப்பான் இளவரசர் ஷோடோகு தனது நாட்டில் புத்த கோயில் கட்டுவதற்காக கொங்கோவை அழைத்து வந்தார். கோயில் பணிகள் என்றாலே நீண்ட காலம் எடுக்கும் என்பதால் ஷிகெமிடசு கொங்கோ குடும்பத்துடன் ஜப்பானில் செட்டிலானார். அவர் தொடங்கிய கட்டுமான நிறுவனம்தான் கொங்கோ குமி.
ஜப்பானில் ஒசாகாவை தலைமையிடமாக கொண்டு 14 நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஒரு குடும்பம் நடத்தும் கட்டுமான நிறுவனமாக இருந்தது. சுமார் 40 தலைமுறையினர் அந்த நிறுவனத்தை நடத்தி வந்தனர்.
இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானை உலுக்கிய இரண்டு அணுகுண்டு தாக்குதல்கள் மற்றும் இயற்கை பேரழிவுகளை கண்டு உலகின் மிகப்பெரிய பழமையான நிறுவனமாக விளங்கியது. 1445 ஆண்டு கால கொங்கோ குமி நிறுவன வரலாற்றுக்கு மருமகன்களின் வரவும் பெரிய உதவியாக இருந்தது.
ஜப்பானில் குடும்ப தொழிலில் மருமகன்கள் சேர்ந்தவுடன் மனைவி குடும்ப பெயரை ஏற்றுக் கொள்ளும் வழக்கம் இருந்தது. ஜப்பானிய குடும்பங்களை போலவே கொங்கோ குடும்பத்திலும் மருமகன்களும் குடும்ப உறுப்பினர்களாகி கொங்கோ குடும்ப பெயரை ஏற்றுக் கொண்டனர். ஒரு தலைமுறையில் ஆண் வாரிசு இல்லை என்றாலும் அதே பெயரில் தொழிலை நடத்துவதற்கு இது வழி வகுத்தது. மகன்கள் அல்லது மகள்கள் மூலம் இந்த நிறுவனம் தொடர்ந்து இயங்கியது.
16ம் நூற்றாண்டிலிருந்து ஒசாகா கோட்டை போன்ற பல நன்கு அறியப்பட்ட கட்டிடங்களை கொங்கோ குமி நிறுவனம் நிர்மாணித்துள்ளது. கோட்டைகள், கோயில்கள் மற்றும் பாரம்பரிய தளங்களாக வகைப்படுத்தப்பட்ட பிற கட்டமைப்புகளை வடிவமைக்கிறது, கட்டுகிறது, மீட்டமைக்கிறது மற்றும் பழுது பார்க்கிறது.
இந்நிறுவனம் பாரம்பரிய கட்டிடக்கலையில் கவனம் செலுத்தியிருந்தாலும், பெரிய கட்டுமான நிறுவனங்களின் போட்டி விளைவாக 2006 ஜனவரியில் தகமாட்சு கட்டுமான குழுவிடம் கை மாறியது.
கொங்கோ குமி நிறுவனம் கை மாறுவதற்கு முன் அந்நிறுவனத்தில் 100 பேர் மட்டுமே பணியில் இருந்தனர். 2005 நிலவரப்படி, புத்த கோயில் கட்டுவதில் இந்நிறுவனத்தின் ஆண்டு வருமானம் சுமார் ரூ.600 கோடியாக இருந்தது. இந்நிறுவனத்தின் கடைசி தலைவர் 41வது கொங்கோவான மசகாசு கொங்கோ. 2023 பிப்ரவரி நிலவரப்படி, கொங்கோ குமி நிறுவனம் தகமாட்சு கன்ஸ்ட்ரக்ஷன் குழுமத்துக்கு சொந்தமான ஒரு நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications