இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்து தளமான ரயில்வே துறை கடந்த 10 வருடத்தில் வேகமாக வளர்ச்சி அடைந்து வருவது மட்டும் அல்லாமல் அதன் பயண வேகம், தரம், வாடிக்கையாளர் சேவை ஆகியவை பெரிய அளவில் மேம்பட்டு வருகிறது.
இவை அனைத்திற்கும் மகுடமாக இந்தியாவில் பல முக்கிய வழித்தடத்தில் புல்லட் ரயில் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தும் பணிகள் நடந்து வரும் நிலையில் தற்போது முக்கியமான வழித்தட திட்டத்தை நாட்டின் முன்னணி கட்டுமான நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
புல்லட் ரயில் திட்டம்
இந்தியாவின் முக்கியப் புல்லட் ரயில் திட்டமாக கூறப்படும் மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில் (MAHSR) திட்டத்திற்கான 116 கிமீ அதிவேக பேலஸ்ட்லெஸ் டிராக் (ballastless track) அமைப்பதற்கான திட்டத்தை L&T கட்டுமானத்தின் ரயில்வே கட்டுமான பிரிவு NHSRCL அமைப்பிடம் இருந்து பெற்றுள்ளது.
L&T கன்ஸ்ட்ரக்ஷன்
இதுக்குறித்து எல் அண்ட் டி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்திய புல்லட் ரயில் திட்டத்திற்கான ஒரு பெரிய ஒப்பந்தத்தை எல் அண்ட் டி கட்டுமான பிரிவு வென்றுள்ளதாக வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தைத் தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (NHSRCL) அமைப்பில் இருந்து L&T கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனம் பெற்றுள்ளது.
பேலஸ்ட்லெஸ் டிராக்
இத்திட்டம் வெற்றிகரமாகக் கட்டி முடிக்கப்படும் நிலையில் அதிநவீன புல்லட் ரயில் தொழில்நுட்பத்தின் உதவியுடன் சுமார் 320 கிலோமீட்டர் வேகத்தில் ரயிலை இயக்க முடியும். இந்த அதிவேக ரயில்களை இயக்க இந்தியாவில் பயன்படுத்தும் சாதாரண ரயில்வே டிராக் போதாது ballastless track - பேலஸ்ட்லெஸ் டிராக் எனப்படும் அதிநவீன டிராக் வேண்டும்.
5000 கோடி ரூபாய்
இந்த முக்கியமான திட்டத்தைத் தான் எல் அண்ட் டி கைப்பற்றியுள்ளது. தற்போது வெளியாகி உள்ள தகவல்கள் படி இத்திட்டத்தின் மதிப்பு 2500 முதல் 5000 கோடி ரூபாயாக இருக்கும் எனத் தெரிகிறது.
ஜப்பான் Shinkansen
மேலும் இத்திட்டத்தில் ஜப்பான் நாட்டின் அதிவேக ரயில் சேவை தளமான Shinkansen track technology பயன்படுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது. புல்லட் ரயில் எனப்படும் அதிகவேக ரயில்களை இயக்குவதிலும், நிர்வாகம் செய்வதிலும், மேம்பட்ட தொழில்நுட்பத்தை வைத்திருக்கும் முன்னணி நாடுகளில் ஜப்பான் முதன்மையானது.


Click it and Unblock the Notifications