சண்டிகர்: ஒரு பெரிய நிறுவனத்தில் நல்ல ஊதியத்துடன் ஒரு வேலை, வாழ்க்கை செட்டில் ஆகிவிட்டது என பலர் அந்த வேலையை தக்க வைத்துக் கொள்வதில் தான் தீவிரமாக இருப்போம். ஆனால் இந்த நபர் அந்த வேலையை விடுத்து தன்னுடைய லட்சியத்தை நோக்கி புறப்பட்டார் தற்போது இவர் பல கோடி மதிப்புள்ள பீட்சா நிறுவனத்தின் சொந்தக்காரராக இருக்கிறார்.
சனம் கபூர் ஒரு சராசரி இந்தியர், ஹெச்சிஎல் நிறுவனத்தில் வேலை செய்து வந்தவர். தன்னுடைய வேலையில் நல்ல ஊதியம் கிடைத்தாலும் அதில் மன நிம்மதி கிடைக்கவில்லை. வாழ்க்கையில் ஏதேனும் ஒன்றை சாதிக்க வேண்டும் என விரும்பிய அவர் சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என முடிவு செய்தார். அந்த காலகட்டத்தில் அவருக்கு மிகவும் பிடித்த உணவு பீட்சா. எனவே பீட்சாவை அடிப்படையாகக் கொண்ட ஒரு தொழிலை உருவாக்க வேண்டும் என முடிவுக்கு வந்தார். தைரியமாக தன்னுடைய வேலையை கைவிட்ட அவர் பீட்சா தொழிலில் இறங்கினார்.

ஆரம்பத்தில் அவருக்காக முதலீடு செய்வதற்கு யாருமே முன்வரவில்லை. அவர் எடுத்த 90% முயற்சிகள் தோல்வியில் தான் முடிந்தன. தன்னிடம் இருந்த ஒரு சிறிய தொகையை வைத்து சண்டிகரில் ஒரு பீட்சா கடையினை தொடங்கினார். அப்போது டாமினோஸ் பீட்சா, பீட்சா ஹட் உள்ளிட்டவை இந்திய சந்தையின் புகழ்பெற்ற பீட்சா நிறுவனங்களாக இருந்தன. எனவே சனம் கபூரின் லாபினோஸ் பெரிய போட்டியை எதிர்கொண்டது.
ஆரம்ப கட்டத்தில் தொழிலை நடத்துவது மிகவும் சிரமமாக இருந்தது, எனவே மற்ற பெரிய நிறுவனங்களுக்கு போட்டியாக இருக்க வேண்டும் மக்களையும் தன்னுடைய பிராண்டினை நோக்கி ஈர்க்க வேண்டும் என்பதற்காக சனம் கபூர் சிங்கிள் சிலைஸ் பீட்சாக்களை அறிமுகம் செய்தார். இதில் ஒவ்வொரு சிலைஸிலும் ஒவ்வொரு விதமான ஃப்ளேவர்களை அவர் அறிமுகப்படுத்தினார்.
குறைவான விலையில் பலவிதமான ருசிகளை அனுபவிக்கும் வாய்ப்பாக மக்கள் இதனை கருதினர். எனவே லாபினோஸ் பீட்சாவை நோக்கி மக்கள் படையெடுக்க ஆரம்பித்தனர். அதுமட்டுமின்றி இந்தியர்களின் ருசி தேவைகளுக்கு ஏற்ப பீட்சாவில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தார். மேலும் தன்னுடைய நிறுவனத்தில் புதிதாக பீட்சா தயாரித்து விற்பனை செய்வதை அவர் முதன்மையாகக் கொண்டிருந்தார்.
தரமான மற்றும் புதிதாக செய்து தரக்கூடிய பீட்சாக்கள் பல்வேறு வாடிக்கையாளர்களை இவரது கடைக்கு திரும்பத் திரும்ப வரவழைத்தது. 2017 ஆம் ஆண்டு 100 கடைகளுடன் செயல்பட்டு வந்த லாபினோஸ் தற்போது 600 கடைகளுடன் செயல்பட்டு வருகிறது. ஆண்டுக்கு 1000 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி வருகிறது. லண்டனில் கூட இந்த நிறுவனம் ஒரு கிளையை திறந்துள்ளது. கூடிய விரைவில் ஆஸ்திரேலியா, கனடா, துபாயிலும் கடைகளை திறக்க இருக்கிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications