பிப்ரவரி 1ஆம் தேதி வெளியாக உள்ள மத்திய பட்ஜெட் இந்திய பொருளாதாரம் மற்றும் முதலீட்டாளர்களுக்கு பெரும் சவாலாக மாறலாம் என்று பொருளாதார நிபுணரும் ஸ்கைமேன் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் நிறுவனர் கே.ராஜேஷ் தனது எக்ஸ் பதிவில் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கடந்த பத்து ஆண்டுகளில் மத்திய அரசு மக்கள் மத்தியில் சேமிப்பை ஊக்கப்படுத்தாமல் செலவழிப்பை மட்டும் தூண்டும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்று தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார். சாமானியர்களின் வரி சுமையை குறைக்க பல்வேறு துறைகளிலிருந்து வந்த கோரிக்கைகளை அரசு புறக்கணிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் பரவலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய வரி அமைப்பின் சவால்கள்
இந்திய அரசின் வரி முறை சேமிப்பு மற்றும் முதலீட்டை தடுக்கும் வகையில் உள்ளது என்று ராஜேஷ் வலியுறுத்துகிறார். செக்யூரிட்டீஸ் டிரான்ஸாக்ஷன் டாக்ஸ் (எஸ்டிடி) மற்றும் லாங் டேர்ம் கேபிடல் கெயின்ஸ் (எல்டிசிஜி) வரிகள் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FII) மற்றும் ரீடைல் முதலீட்டாளர்களுக்கு பெரும் தடையாக இருப்பதாக அவர் கூறுகிறார்.
மேலும் இவை முதலீடு செய்வதற்கான ஊக்கத்தை குறைத்து, பொருளாதார வளர்ச்சியை பாதிக்கின்றன. அரசு சாமானியர்களின் கோரிக்கைகளை கேட்காமல் இருப்பது பொருளாதாரத்தின் அடித்தளத்தை பலவீனப்படுத்தும் என்றும் ராஜேஷ் எச்சரிக்கிறார்.
அரசின் வருவாய் ஆதாரங்கள்
அரசு பல்வேறு கட்டங்களில் வரி வசூலிப்பதால் மக்களின் நிதி சுமை அதிகரிக்கிறது. முதலீடு செய்யும் போது எஸ்டிடி, லாபம் ஈட்டும் போது எல்டிசிஜி அல்லது எஸ்டிசிஜி, செலவழிக்கும் போது ஜிஎஸ்டி, டிவிடெண்ட் போன்ற வெகுமதிகள் கிடைக்கும் போது வருமான வரி என பல்வேறு வழிகளில் வருவாய் ஈட்டுகிறது.
இந்த பல்வகை வரி முறை சிக்கலானதாக இருப்பதால், சாமானியர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.
ஃப்ளாட் வரி முறை
இந்தியாவின் வரி அமைப்பை எளிமைப்படுத்த ஃப்ளாட் வரி முறையை அமல்படுத்தலாம் என்று ராஜேஷ் தனது பதிவில் பரிந்துரைத்துள்ளார். வருமான வரிக்கு 10 சதவீதம் ஃப்ளாட் வரி முறையை அமல்படுத்தி எவ்விதமான விதிவிலக்குகள் இல்லாமல் அமல்படுத்துவது, ஜிஎஸ்டியை 10 சதவீதம் ஃப்ளாட் ஆக மாற்றுவது, எல்டிசிஜி மற்றும் எஸ்டிடி போன்ற வரிகளை ரத்து செய்வது போன்ற முடிவுகளை எடுக்க முடியாதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த பட்ஜெட் இந்திய பொருளாதாரத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரி சீர்திருத்தங்கள் இல்லாத நிலையில், முதலீடு குறைந்து வளர்ச்சி தடைபடலாம் என்பதால் மத்திய அரசு வரி தளர்வுகள் தொடர்பான முக்கியமான முடிவுகளை இந்த பட்ஜெட்டில் எடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Click it and Unblock the Notifications