தற்போதைய தொழில்நுட்ப உலகில் ஆன்லைன் மூலமே அனைத்து பணிகளையும் முடிக்கும் வசதி வந்துவிட்டது.
ஆனால் அதே நேரத்தில் எந்த அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்து உள்ளதோ அதே அளவுக்கு ஆபத்தும் வளர்ந்து உள்ளது என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆன்லைனில் பண பரிவர்த்தனை செய்யும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதும் இல்லை எனில் நமது வங்கி கணக்கில் உள்ள மொத்த பணமும் மோசடி செய்யும் அபாயம் இருக்கிறது என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஆன்லைனில் எலக்ட்ரிக் பில் செலுத்திய ஒருவருடைய வங்கி கணக்கிலிருந்து 2.14 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எலக்ட்ரிக் பில்
மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த ஒருவர் தன்னுடைய வீட்டின் எலக்ட்ரிக் பில்லை உடனடியாக செலுத்த வேண்டும் என்றும் இல்லையெனில் அடுத்த நாள் அவரது மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் மின்சார வாரியத்தில் இருந்து தொலைபேசியில் ஒரு குறுஞ்செய்தி வந்தது.
செயலி இன்ஸ்டால்
இதனை அடுத்து அவர் அந்த குறுஞ்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்த மொபைல் எண்ணை தொடர்பு கொண்டபோது மறுபுறம் பேசிய நபர் தாங்கள் மின்சார அலுவலகத்தில் இருந்து பேசுவதாகவும் தாங்கள் அனுப்பும் செயலியை உடனடியாக இன்ஸ்டால் செய்து அதில் எலக்ட்ரிக் பில்லை கட்ட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
ரூ.2.14 லட்சம் மோசடி
இதனை நம்பிய அந்த மகாராஷ்டிரா நபர் அவர் கூறிய லிங்கை கிளிக் செய்து செயலியையும் இன்ஸ்டால் செய்துள்ளார். அதன் பிறகு எலக்ட்ரிக் பில்லை அதில் செலுத்துமாறு அந்த நபர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, தனது வங்கி கணக்கில் இருந்து எலக்ட்ரிக் பில்லை செலுத்திய அடுத்த நிமிடம் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூபாய் 2.14 லட்சம் மோசடி செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
போலீசில் புகார்
இதனையடுத்து அந்த நபரை மீண்டும் மொபைல் போனில் தொடர்பு கொள்ள முயன்றபோது மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. பின்னர் அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இது போன்ற ஆன்லைன் மோசடி செய்பவர்களை சைபர் கிரைம் போலீசாரே கண்டுபிடிப்பது மிகவும் கடினம் என்பதால் அறிமுகமில்லாத நபரிடமிருந்து அழைப்பு மற்றும் லிங்க்குகளை உதாசீனப் படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதிகாரபூர்வ இணையதளம்
எலக்ட்ரிக் பில், தொலைபேசி பில் ஆகியவற்றை ஆன்லைனில் செலுத்த வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட அதிகாரபூர்வ இணையதளம் அல்லது செயலியின் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும். இதற்காக மின்சார வாரியமோ அல்லது தொலைபேசி அலுவலக ஊழியர்களோ எந்தவிதமான லிங்கையும் அனுப்ப மாட்டார்கள் என்பதையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும்.


Click it and Unblock the Notifications