பெங்களூரு: இந்திய ஸ்டார்ட்அப் சந்தையில் கொடிக்கட்டி பறந்த ஒரு நிறுவனம் இன்று கடும் நிதி நெருக்கடியில் சிக்கிக் கொண்டு தவித்து வருகிறது பைஜூஸ் நிறுவனம். சிஇஓ ராஜினாமா செய்த பின்பு பல போராத்திற்கு பின்பு தன் ஊழியர்களுக்கு சம்பளமே கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கும் கட்டமைப்பை மாற்றி அமைத்துள்ளது பைஜூஸ் நிர்வாகம். இந்தியாவின் புகழ்பெற்ற டிஜிட்டல் கல்வி சேவை தளமான பைஜூஸ் வேகமாக வளர்ந்து வந்தது. குறிப்பாக கொரோனா பெருந்தொற்று மற்றும் அதற்குப் பிந்தைய காலத்தில் பைஜூஸ் நிறுவனம் அசுர வளர்ச்சியை பெற்றது.

ஆனால் கடந்த சில மாதங்களாகவே பைஜூஸ் நிறுவனம் கடும் வீழ்ச்சியில் இருக்கிறது. ஊழியர்களுக்கு சம்பளம் கூட கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. பைஜூஸ் நிறுவனர் தான் திவால் ஆகிவிட்டதாக அறிவிப்பு வெளியிட்டார். இந்த நிலையில் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கும் முறையில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது பைஜூஸ் நிறுவனம் .
பைஜூஸ் கடந்த ஜனவரி மாதம் முதலே ஊழியர்களுக்கு முறையாக ஊதியம் வழங்கவில்லை. பலர் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர். தற்போது பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு சரியான தேதியில் ஊதியம் வழங்கவில்லை. இந்த நிலையில் புதிய கொள்கை ஒன்றை பைஜூஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
விற்பனை பிரிவு மற்றும் எக்ஸாம் பிரிபரேஷன் பிரிவை சேர்ந்த ஊழியர்களுக்கு இனி வருவாய் இணைக்கப்பட்ட சம்பளம் என்ற நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது வாராந்திர வருவாய் அடிப்படையில் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
ஏப்ரல் 24ஆம் தேதி முதல் இது நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்படி விற்பனை பிரதிநிதிகள் அந்த வாரத்தில் எவ்வளவு விற்பனை விகிதத்தை காட்டுகிறார்களோ அதற்கு ஏற்ப அவர்களது வருவாயானது இருக்கும். அதாவது வாராந்திர விற்பனை விகிதத்தில் 50% என்ற முறைப்படி இனி சம்பளம் வழங்கப்படும் என்றும் வாரந்தோறும் இந்த ஊதியம் வழங்கப்பட்டு விடும் என்றும் நிறுவனம் கூறியுள்ளது .
இதனால் பைஜூஸ் நிறுவனம் விற்பனை பிரிவில் இருக்கக்கூடிய ஊழியர்களுக்கு வழங்கப்படும் அடிப்படை ஊதியத்தை தற்போதைக்கு நிறுத்தி வைத்துள்ளது. வாராந்திர வருவாய் அடிப்படையில் சம்பளம் வழங்க இருப்பதால் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக பைஜூஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வாரத்தில் விற்பனை எதுவும் பெற்று தராத ஊழியர்களுக்கு எந்த சம்பளமும் கிடைக்காது என்றும் பைஜூஸ் கூறியுள்ளது.
ஒரு தனிப்பட்ட நபர் எப்படி நிறுவனத்திற்கு வருவாயை கொண்டு வருகிறார் என்பதையும், அந்த குழுவில் அந்த நபரின் பதவி என்ன, ஒவ்வொரு குழுவிலும் உள்ள விற்பனை பிரதிநிதிகள் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஊதிய விகிதமானது நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
இந்த வருவாய் அடிப்படையிலான ஊதியம் என்ற நடைமுறை விற்பனை பிரதிநிதிகளுக்கு வாராந்திர ஊதியத்தை வழங்கி விடும் என்றாலும், தங்களுக்கு மாதாந்திர ஊதியத்தில் கிடைத்த மற்ற சலுகைகள் இதில் கிடைக்காது என கவலை தெரிவிக்கின்றனர் ஊழியர்கள்.
செயல்பாடு அடிப்படையிலான வருவாய் என்பது தங்களுக்கு மேலும் அழுத்தத்தை கொடுப்பதாகவும் ஒரு நிச்சயமற்ற நிலையை உருவாக்கி இருப்பதாகவும் பைஜூஸ் நிறுவனத்தின் விற்பனை பிரிவில் இருக்கக்கூடிய ஊழியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications