வங்கிகளில் வழங்கப்படும் கடன்களிலேயே அதிக வட்டிக்கொண்ட கடன் என்றால் அது கிரெடிட் கார்ட் கடன் தான். சில வங்கிகள் கிரெடிட் கார்டு கடன்களுக்கு ஆண்டுக்கு 45 சதவீதம் வரை வட்டி வசூலிக்கின்றன. இந்த ஒரு காரணத்தினால் கிரெடிட் கார்டு பெறுபவர்கள் அதை பார்த்து பார்த்து செலவு செய்வார்கள்.
ஆனால் ஒரு நபர் ரூ.85 லட்சம் மதிப்பிலான புதிய BMW காரை வாங்க தன்னுடைய 2 பிரீமியம் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தியிருக்கிறார். 85 லட்சம் மதிப்புள்ள காரை வாங்க வேண்டும் என்றால் அதற்கு முன்கூட்டியே சேமிக்கலாம் அல்லது வங்கிகளில் கடன் பெறலாம். ஆனால் இந்த நபரோ வித்தியாசமான முறையில் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி கார் வாங்கியுள்ளார்.

தான் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி கார் வாங்கிய வித்தியாசமான அனுபவத்தை அவர் ரெட்டிட் தளத்தில் பகிர்ந்திருக்கிறார். "ICICI Emeralde Private Metal கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி BMW கார் வாங்கியிருக்கிறேன் - எனது அனுபவம்" என்ற தலைப்பில் ஒரு போஸ்டை பகிர்ந்துள்ளார். அதில் அந்த நபர், "காரின் விலையில் 60 சதவீதமான ரூ. 51 லட்சத்தை ICICI Emeralde Private Metal எனும் கிரெடிட் கார்டு மூலம் செலுத்தியதாகவும், மீதமுள்ள ரூ.34 லட்சத்தை அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் எனும் கிரெடிட் கார்டு மூலம் செலுத்தியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த தொகையை செலுத்தும் முன்பே அவர் தன்னுடைய சார்ட்டட் அக்கவுண்டன்ட் மூலம் வங்கியின் ரிலேஷன்ஷிப் மேனேஜருக்கு தகவல் தெரிவித்ததாகவும், ஆரம்பத்தில் ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு மூலம் ரூ.51 லட்சம் செலுத்த முயன்ற போது அந்தப் பரிவர்த்தனை நிராகரிக்கப்பட்டது. பின்னர் வங்கியின் ஊழியர்களை தொடர்புகொண்டு பரிவர்த்தனையை உறுதி செய்த பிறகு அனுமதி வழங்கப்பட்டது. ஒட்டுமொத்த செயல்முறையில் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்டை விட ICICI Emeralde Private Metal சுமூகமான அனுபவத்தை தந்தது. கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தியதற்காக கார் டீலர்ஷிப் தரப்பில் 1 சதவீத கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் ஐசிஐசிஐ பேங்க் தன்னை கையாண்ட விதம் குறித்து அந்த நபர் அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார். பெரிய தொகையை செலுத்துவதற்காக வங்கிக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்தும் அதிக கேள்விகள் கேட்கப்பட்டதாகவும், இந்த நடைமுறையை இன்னும் எளிமைப்படுத்தினால் நன்றாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
அதேபோல அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கடந்த காலங்களில் தனக்கு வழங்கிய கிரெடிட் லிமிட்டை அதிகரித்ததாகவும், ஐசிஐசிஐ பேங்க் கூடுதலாக எந்த கிரெடிட் லிமிட்டும் வழங்கவில்லை என்றும் பதிவிட்டிருந்தார்.
அவருடைய பதிவுக்கு இணையவாசிகள் தொடர்ந்து கமெண்ட் செய்து வந்தனர். கிரெடிட் கார்டை வைத்து கார் வாங்கும் அளவுக்கு அவர் அப்படி என்ன வேலை செய்கிறார் என்பதை தெரிந்து கொள்வதில் இணையவாசிகளுக்கு இருந்த ஆர்வத்தை கமெண்ட் செக்ஷனில் பார்க்க முடிந்தது.
அதில் ஒரு பயனர் நானும் புதிதாக கார் வாங்க திட்டமிட்டு இருக்கிறேன். முழு தொகையும் கிரெடிட் கார்டில் செலுத்த டீலர் சம்மதிப்பாரா? கூடுதல் கட்டணத்தை யார் ஏற்றுக் கொள்ள வேண்டும்? என்ற விவரங்களை கேட்டிருந்தார்.
மற்றொரு பயனர் யாரெல்லாம் கிரெடிட் கார்டில் கார் வாங்கப் போகிறீர்கள்? இதற்கு கேஷ் பேக்காக மாருதி பலேனோ இலவசமாகக் கிடைக்குமா? என்று கிண்டல் அடித்திருந்தார். மற்றொரு நபர் கிரெடிட் கார்டை வைத்து கார் வாங்கும் நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்? உங்களுக்கு அதிகபட்ச கிரெடிட் லிமிட் என்ன? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.


Click it and Unblock the Notifications
