Byjus ஒரு காலத்தில் உலகமே வியந்து பார்த்த ஒரு இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனத்தை, தற்போது அய்யோபாவம் எனப் பார்க்கும் நிலைக்கு வந்துள்ளது. பெரும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள எட்டெக் நிறுவனமான பைஜூஸ் குழுமம், கடன் சுமையில் இருந்து வெளியேற வரவும், நிறுவனத்தை லாபகரமானதாக மாற்றவும் தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.
இந்த நிலையில் பைஜூஸ் 2023ல் அதன் முக்கியத் துணை நிறுவனமான ஆகாஷ் கல்வி நிறுவனத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட்சன் கெம்ப்னர் கேப்பிட்டல் மேனேஜ்மென்ட் வைத்திருந்த முடியாத கடன் பத்திரங்களை மணிப்பால் கல்வி மற்றும் மருத்துவக் குழுமத் தலைவர் ரஞ்சன் பாய் சுமார் ரூ.1,400 கோடி முதலீடு செய்து கைப்பற்றினார்.

தற்போது இந்த 300 மில்லியன் டாலர் மதிப்பிலான NCD முதலீட்டை பங்குகளாக மாற்றிக்கொள்ள ஆகாஷ் கல்வி நிறுவனத்தின் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் வாயிலாக ரஞ்சன் பாய் சுமார் 40 சதவீத ஆகாஷ் பங்குகளின் முழு உரிமையைப் பெறுகிறார்.
Byjus நிறுவனத்தில் Aakash Institute மிகவும் முக்கியமானது, காரணம் இந்த நிறுவனத்தின் மீது எவ்விதமான கடனும் இல்லை. 2021ல் 950 மில்லியன் டாலர் மதிப்புக்கு Aakash Institute-ஐ பைஜூஸ்-ன் பைஜூ ரவிந்திரன் வாங்கினார். ஆனால் இப்போது இதன் மதிப்பு 750 மில்லியன் டாலராக மதிப்பீட்டில் ரஞ்சன் பாய் உடனான பங்கு பரிமாற்றம் நடந்துள்ளது.
இந்த நிலையில் தற்போது Aakash Institute நிறுவனத்தில் ரஞ்சன் பாய் 40 சதவீதம் என்ற அதிகப் பங்கு இருப்புடன் இருக்கும் முதலீட்டாளராக உள்ளார், இவரைத் தொடர்ந்து பைஜூ ரவிந்திரன் தனிப்பட்ட முறையில் 16 சதவீத பங்குகளையும், பைஜூஸ் தாய் நிறுவனமான திங்க் & லர்ன் 26 சதவீத பங்குகளையும் வைத்துள்ளது. இறுதியாகச் சவுத்ரிஸ் மற்றும் பிளாக்ஸ்டோன் இணைந்து 18 சதவீத பங்குகளை வைத்துள்ளனர்.
இதன் மூலம் பைஜூஸ் நிறுவனத்தின் Crown Jewel ஆக விளங்கும் ஆகாஷ் நிறுவனத்தை இனி மணிப்பால் கல்வி நிறுவனம் ஆளப்போகிறது. இதனால் பைஜூ ரவிந்திரன் ஆதிக்கம் குறையத் துவங்கியுள்ளது, ஏற்கனவே பைஜூஸ் பங்குகள் அதிகளவில் அடமானத்திலும், பிற முதலீட்டாளரிடமும் உள்ளதால் பைஜூ ரவிந்திரன் ஆதிக்கம் தொடர்ந்து சரிய வாய்ப்பு உள்ளது, இதேவேளையில் நிலைமையும் மாறலாம்.
பைஜூஸ் நிறுவனம் தற்போது மிகப்பெரிய மறுசீரமைப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது, இதில் செலவுகள் குறைந்து லாபத்திற்குத் திரும்பினால் பைஜூ ரவிந்திரன் மீண்டும் ஆதிக்க நிலையை அடையலாம். ஆனால் இந்நிறுவனத்தின் நிதிநிலை சிறப்பாக இல்லை என்பது கவலை அளிக்கும் விஷயமாக உள்ளது.
இந்தியாவில் அனைத்து நிறுவனங்களும் 2024 ஆம் நிதியாண்டின் காலாண்டு முடிவுகளை வெளியிட்டு வரும் வேளையில் பைஜூஸ் 22 மாத தாமதத்திற்குப் பின்பு 2022 ஆம் நிதியாண்டின் முடிவுகள் கார்ப்பரேட் விவகாரத் துறை அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளது.
2021 ஆம் நிதியாண்டில் பைஜூஸ் 2428 கோடி ரூபாயை வருவாயாகப் பெற்ற நிலையில் 2022 ஆம் நிதியாண்டில் 118 சதவீத உயர்வுடன் 5,298 கோடி ரூபாய் வருவாய் பெற்றுள்ளது. இதே காலகட்டத்தில் நஷ்டத்தின் அளவு 4564 கோடி ரூபாயில் இருந்து 8245 கோடி ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications