பெய்ஜிங், சீனா: ஒரு காலத்தில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த குழந்தை பேறுக்கு கட்டுப்பாடு விதித்த சீனா தற்போது குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க முடியாமல் திண்டாடி வருகிறது. இந்நிலையில் சீன இளம்பெண்கள் பலரும் திருமணத்தை வெறுக்கிறார்கள் என ஒரு ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.
சீனாவில் ஏற்கனவே குழந்தை பிறப்பு விகிதம் சரிவடைந்து வரும் நிலையில் பெரும்பாலான இளம் பெண்கள் திருமணம் வேண்டாம் என்ற மனநிலையில் இருப்பது தெரியவந்துள்ளது. 1988 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை சீனாவில் குழந்தை பிறப்பு விகிதம் 68% வரை குறைந்திருக்கிறது. இந்த நிலையில் சீன அரசு தம்பதிகள் குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

சீன அரசாங்கம் திருமணம் ஆன தம்பதிகள் அதிக எண்ணிக்கையில் குழந்தைகளை பெற்றுக் கொள்ளும்போது அவர்களுக்கு பல்வேறு நிதி உதவிகளையும் பல்வேறு நலத்திட்டங்களையும் அறிவித்துள்ளது .மேலும் சிங்கிளாக இருப்பவர்கள் குழந்தைகளை தத்து எடுத்துக் கொள்வது, மேலும் தங்களுடைய கருமுட்டைகளை பாதுகாத்து வைப்பது உள்ளிட்டவற்றுக்கு தடை விதித்துள்ளது.
இந்த சூழலில் சீனாவை சேர்ந்த பெண்கள் பலரும் திருமணம் செய்வதை திருமணத்திற்கு தாங்கள் தயாராக இல்லை என கூறுகிறார்கள். 2013 ஆம் ஆண்டிலிருந்து 2020 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சீனாவில் திருமணங்கள் நடைபெறும் விகிதம் 40% வரை சரிவடைந்திருக்கிறது. குறிப்பாக 2024 ஆம் ஆண்டில் இது பெரும் அளவில் குறைந்திருப்பதாக சீன அரசாங்கமே புள்ளிவிவரம் வெளியிட்டுள்ளது.
கலாச்சார நடைமுறைகள் , குடும்ப கட்டமைப்புகள், பொருளாதார அழுத்தங்கள் ஆகிய காரணங்களால் இளம்பெண்கள் மத்தியில் திருமணத்திற்கு எதிரான மனநிலை ஏற்பட்டுள்ளது. திருமணம் தங்களுடைய சுதந்திரத்தை பறிப்பதாகவும் தங்கள் மீது ஒரு கடமையாக திணிக்கப்படுவதாகவும் ஆய்வு ஒன்றில் பல பெண்கள் பதில் அளித்துள்ளார்களாம்.
திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற முடிவு தங்களுடைய தனிப்பட்ட முடிவாக இருக்க வேண்டுமே தவிர சமூக அழுத்தங்களாலும் அரசின் அழுத்தங்களாலும் அது நடைபெறக்கூடாது என எண்ணுகிறார்கள். குறிப்பாக நகர்ப்புறங்களை சேர்ந்த படித்த இளம் பெண்கள் மத்தியில் திருமணத்திற்கு எதிரான ஒரு மனநிலையும் குழந்தை பேறு மற்றும் குழந்தை வளர்ப்பதற்கு எதிரான ஒரு மனநிலையும் அதிகரித்து வருவதாக அங்கே இருக்கக்கூடிய ஆய்வாளர்கள் பலரும் கூறுகின்றனர்.
பெரும்பாலான பெண்கள் குழந்தை பிறந்த பிறகு தங்களுடைய வேலை மற்றும் தங்களுடைய வாழ்க்கை இலட்சியங்களை நோக்கி பயணம் செய்ய முடியாமல் தவிக்கின்றனர். சீனாவை சேர்ந்த 60% ஆண்கள் குழந்தைகளை வளர்ப்பது பெண்களின் பொறுப்பு தான் என கூறுகின்றனர். இந்த மனநிலையும் பெண்கள் திருமணத்தை வெறுக்க காரணமாகிவிட்டது.
கால போக்கிற்கு ஏற்ப பெண்களின் சமூக பார்வை மாறி வரும் நிலையில் அதற்கேற்ற மாற்றம் சீன ஆண்கள் மத்தியில் ஏற்படவில்லை. சீனாவில் தற்போது ஆண் மற்றும் பெண் விகிதம் அதாவது 109 ஆண்களுக்கு 100 பெண்கள் என்ற நிலையை எட்டி இருக்கிறதாம். இது வருங்காலத்தில் மேலும் இடைவெளியை சந்திக்கும் என்றும் சீன மக்கள் தொகைக்கு பெருமளவில் பிரச்சினை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் திருமணம் வேண்டாம் சிங்கிளாகவே இருந்துவிடுகிறோம் என்ற மனநிலை பெண்களுக்கு ஏற்பட்டுள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications