மகாராஷ்டிரா: இன்றைய நவீன உலகில் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக அதிக அளவிலான ஆன்லைன் மோசடிகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாகூரைச் சேர்ந்த எம்பிஏ பட்டதாரி ஒருவர் 23 லட்சத்தை ஆன்லைன் மோசடியில் இழந்துள்ளார். என்ன நடந்தது என்று இங்கே பார்க்கலாம்!
குற்றவாளி தான் ஒரு ஆன்லைன் ஆலோசகர் எனக் கூறி ஏமாற்றி, அந்த மாணவரிடம் டெலிகிராமில் நவம்பர் 17ஆம் தேதி 2023 அன்று மெசேஜ் செய்துள்ளார். மேலும் அந்த குற்றவாளி தான் வெஸ்ட் பெங்காலில் உள்ள ஹூக்ளியில் இருந்து பேசுவதாகவும், கிரிப்டோகரென்சியில் முதலீடு செய்தால் நல்ல வருமானத்தைத் தருவதாக அந்த நபர் மாணவரிடம் ஆசை வார்த்தை காட்டியுள்ளார்.

இதை நம்பி அந்த மாணவரும் முதலில் ஆயிரம் ரூபாயை அந்த நபரிடம் கொடுத்துள்ளார். அதன் பிறகு அந்த குற்றவாளி உண்மை என்பது போல் நடித்துக் காட்ட 1400 ரூபாயாக அந்த மாணவரிடம் திருப்பித் தந்துள்ளார். குற்றவாளியின் இந்த தந்திரத்தை உணராத மாணவர் மீண்டும் 23 லட்சத்தை அந்த மோசடி நபருக்கு பேங்க் அக்கவுண்ட் வழியாக டெபாசிட் செய்துள்ளார்.
23 லட்சம் பணத்தை டெபாசிட் செய்த பிறகு சிறிது நேரத்தில் அதிகமான லாபம் கிடைக்கும் என்று அந்த மாணவரை ஏமாற்றியுள்ளார். ஆனால் அதன் பிறகு எந்த ஒரு அழைப்பும் அந்த நபரிடம் இருந்து வராத நிலையில் தனக்கு விபூதி அடிக்கப்பட்டதை உணர்ந்த அந்த மாணவர், காவல் நிலையத்தை அணுகியுள்ளார்.
அந்த மாணவர் அளித்த புகாரின் பெயரில் இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போல் ஒரு சம்பவம் பெங்களூரைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் 29 வயதான பெண்ணுக்கு நடந்துள்ளது. ஏப்ரல் 3 ஆம் தேதி அந்த பெண்ணுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. மோசடி கும்பல் தாங்கள் FedEx கொரியரில் இருந்து அழைத்திருப்பதாகவும், தாங்கள் CBI அதிகாரிகள் என்றும், அந்தப் பெண்ணிற்கு தாய்லாந்தில் இருந்து கொரியர் மூலம் 140 கிராம் போதைப்பொருள் வந்துள்ளதாகவும் தெரிவித்தனர். இதனை உண்மை என நம்பி அந்தப் பெண்ணும் அவர்களிடம் தொடர்ந்து பேசியுள்ளார். அதன் பிறகு அந்த மோசடி கும்பல் இந்த விஷயம் பற்றி யாருக்கும் தெரிவிக்க வேண்டாம் என்று அந்த பெண்ணிடம் கூறியுள்ளனர். அவ்வாறு நடந்து கொண்டால் தான் இந்த வழக்குகளில் இருந்து தப்பிக்க முடியும் என்றும் அந்த பெண்ணிடம் தெரிவித்துள்ளனர். அதனை உண்மை என நம்பி அந்தப் பெண்ணும் அவர்கள் சொல்வதற்கு ஏற்றவாறு நடந்துள்ளார். பிறகு அந்த மோசடி கும்பல், அந்த பெண்ணிடம் skype ஆப்பை டவுன்லோடு செய்யும் படி வலியுறுத்தியுள்ளனர். அதன் பிறகு போதைப் பொருள் சோதனை என்ற பெயரில் அந்த பெண்ணின் ஆடைகளை கழற்றுமாறு வலியுறுத்தியுள்ளனர். அவரது நிர்வாண வீடியோ பதிவுகளை அந்த பெண்ணிடமே பிறகு மிரட்ட பயன்படுத்தி உள்ளனர். இதனால் அந்த பெண் பயந்து அவர்கள் சொல்வதை கேட்டுள்ளார். அந்த கும்பல் ரூபாய் 15 லட்சம் பணம் அனுப்பும் படி மிரட்டியுள்ளனர். இதனால் அந்த பெண் அவர்கள் கூறியவாறு ரூ.15 லட்சம் தொகையை அனுப்பியுள்ளார் அதற்குப் பிறகும் அவர்கள் நிறுத்தாமல் 10 லட்சம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். இதனை அடுத்து அந்தப் பெண் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார்.
எனவே, இது போன்ற முதலீடு தொடர்பான மோசடிகள் அதிகரிப்பதை தவிர்க்க முதலீட்டாளர்கள் தகவல் அறிந்து மற்றும் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் என்பதை எடுத்துக்காட்டுகிறது இந்த சம்பவம்.


Click it and Unblock the Notifications