2005ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான அரசு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு தரும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தது. கிராமப்புறங்களில் வசிக்கக்கூடிய மக்களுக்கு ஓராண்டுக்கு குறைந்தபட்ச வேலையையும் குறைந்தபட்ச வருமானத்தையும் உறுதியளிக்க கூடிய ஒரு திட்டமாக இது இருந்தது.
கிராமங்களில் குளம் வெட்டுவது, ஏரி சீரமைப்பது உள்ளிட்ட பணிகளில் மக்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஈடுபடுத்தப்பட்டார்கள். ஏராளமான கிராம மக்கள் குறிப்பாக கல்வி அறிவு குறைவாக உள்ளவர்களுகு இந்த திட்டம் பெரிதும் உதவியது. இதன்படி குறைந்தபட்சம் ஆண்டுக்கு 100 நாட்களாவது வேலை வழங்கப்பட்டு அவர்களுக்கு வருமானம் உறுதி செய்யப்பட்டது.

இந்த சூழலில் 20 ஆண்டுகளாக செயல்பட்ட இந்த திட்டத்தை மோடி தலைமையிலான அரசு மாற்றி அமைத்திருக்கிறது. மத்திய அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை Viksit Bharat-Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin) என பெயர் மாற்றம் செய்திருக்கிறது. இது தவிர இந்த திட்டத்திலும் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது. இந்த இன்று முதல் தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களிலும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளா்ச்சியடைந்த நாடாக மாற்றும் தொலைநோக்குப் பார்வையுடன், கிராமப்புற மேம்பாட்டு கட்டமைப்பை மறுசீரமைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த திட்டத்தை கொண்டு வந்திருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதன் மூலம் இனி இது மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டம் என அழைக்கப்படாது, அதற்கு மாற்றாக விபி-ஜி ராம் ஜி சட்டம்(VB-G RAM G) என அழைக்கப்படும்.

இது நாள் வரை 100 நாளாக இருந்த வேலை நாட்கள் இந்த புதிய சட்டத்தின் கீழ் தற்போது 125 நாள்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்காக 2026-27 நிதியாண்டில் ரூ. 95,692.31 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.தமிழ்நாட்டில் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக தமிழக அரசு ரிசா்வ் வங்கியில் புதிய கணக்கை தொடங்கி உள்ளது. இந்த திட்டத்துக்காக தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.7,957.57 கோடி ஒதுக்கியுள்ளது.
அரசு அறிவிப்பின்படி, இந்த திட்டத்தில் பயனாளிகளுக்கான ஊதிய உயர்த்தப்பட்டுள்ளது. எந்தவொரு மாநிலத்திலும் தினக்கூலி ரூ.300-க்கு குறைவாக இருக்காத வகையில் மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் இந்த திட்டத்தின் கீழ் ஒரு நாளை வேலைக்கு ரூ.345 ஊதியமாக கிடைக்கும். இந்தியாவிலேயே அதிகபட்சமாக சிக்கிமில் ரூ. 450 வரை உயர்த்தப்பட்டுள்ளது. பழைய திட்டத்தில் ஓராண்டுக்கு 100 நாட்கள் வேலைக்கு உத்தரவாதம் இருந்த நிலையில் அது தற்போது 125 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பழைய திட்டத்தில் கிராமத்தின் தேவைக்கேற்ப வேலைகள் வழங்கப்பட்டன. ஆனால் இதில் உள்கட்டமைப்புத் தேவைகளின் அடிப்படையில் முன்கூட்டியே திட்டங்கள் தயாரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் வேலை வழங்கப்படும். செயற்கைக்கோள் படங்கள் மற்றும் டிஜிட்டல் கருவிகள் மூலம் கிராமப்புற திட்டங்கள் அடையாளம் காணப்பட்டு, அவை எப்படி செயல்படுத்தப்படுகின்றன என்பது தொழில்நுட்பம் மூலம் கண்காணிக்கப்படும்.
முன்பை போல இல்லாமல் சாலைகள், நீர்ப்பாசன வசதிகள் மற்றும் நீர் சேமிப்புத் திட்டங்கள் போன்ற நீண்ட காலம் பயன்படும் சொத்துக்களை உருவாக்குவதில் இந்த திட்டத்தில் அதிக கவனம் செலுத்தப்படும்.இந்த மாற்றத்தின் மூலம், கிராம மக்கள் இப்போது ஆண்டுக்கு 125 நாட்கள் வேலைக்கான சட்டப்பூர்வ உத்தரவாதத்தை பெறுவார்கள். இருப்பினும், வேலை கோரும் முறை மற்றும் திட்டமிடலில் டிஜிட்டல் முறைகள் கொண்டு வரப்பட்டுள்ளதால், பயனாளிகள் புதிய நடைமுறைகளுக்கு ஏற்ப மாற வேண்டியிருக்கும்.


Click it and Unblock the Notifications

