ஆப்கானிஸ்தானின் மெகா கோடீஸ்வரர் மிர்வாய்ஸ் அஸிஸி (Mirwais Azizi), இவரை ஆப்கானிஸ்தானின் முகேஷ் அம்பானி என்று அழைக்கின்றனர். 1962ல் ஆப்கானிஸ்தானின் லக்மனில் அஸிஸி பஷ்டூன்களின் குடும்பத்தில் பிறந்தார். காபூல் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை முடித்தார். 1988ல் மிர்வாய்ஸ் துபாய் சென்றது, இது அவரது வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.
1989ல் துபாயில் வணிகத்தை தொடங்கி இன்று மிர்வாய்ஸ் அஸிஸியின் வர்த்தக குழுமம், ரியல் எஸ்டேட், வங்கி, முதலீடு மற்றும் விருந்தோம்பல் துறையில் முன்னணியில் உள்ளது.

மிர்வாய்ஸ் அஸிஸி ஆப்கானிஸ்தானின் மிகப்பெரிய வர்த்தக வங்கியான ஆஸிஸி வங்கியின் தலைவராக உள்ளார். மிர்வாய்ஸ் 2006ல் 75 லட்சம் டாலர் பங்கு மூலதனத்துடன் ஆஸிஸி வங்கியை தொடங்கினார். இன்று அந்த வங்கியின் பங்கு மூலதனம் 8 கோடி டாலராக உள்ளது. 2007ல் அஸிஸி டெவல்ப்மெண்ட்ஸ் நிறுவனத்தை நிறுவினார். தற்போது இஸ்லாமிய பேங்க் ஆஃப் ஆப்கானிஸ்தான் என்று அழைக்கப்படும் பக்தர் வங்கியும் மிர்வாய்ஸ் அஸிஸிக்கு சொந்தமானது.
அஸிஸி டெவல்ப்மெண்ட்ஸ் நிறுவனம் தற்போது துபாய் முழுவதுமாக மொத்தம் 4,500 கோடி ஐக்கிய அரபு அமீரக திர்ஹாம் மதிப்பிலான 200 திட்டங்களை நடத்தி வருகிறது.
மிர்வாய்ஸ் அஸிஸியின் பெட்ரோலிய வர்த்தக பிரிவான ஆஸிஸி கோடக் குழுமம் 10 நாடுகளில் வர்த்தகம் செய்து வருகிறது. மிர்வாய்ஸ் அஸிஸி இந்த வர்த்தகத்தை 8 கோடி அமெரிக்க டாலர் முதலீட்டில் தொடங்கினார். ஆப்கானிஸ்தானில் விற்கப்படும் பெட்ரோலிய பொருட்களில் 80 சதவீதம் மிர்வாய்ஸ் அஸிஸி நிறுவனம் கையாள்கிறது.
2018 மார்ச் மாதத்தில் வெளியான மத்திய கிழக்கில் அரேபிய வணிகத்தின் 100 ஊக்கமளிக்கும் தலைவர்கள் பட்டியலில் மிர்வாய்ஸ் அஸிஸி பெயரும் இடம் பெற்று இருந்தது. மிர்வாய்ஸ் அஸிஸியின் மனைவியின் பெயர் பரிகுல்.
மிர்வாய்ஸ் அஸிஸி-பரிகுல் தம்பதியினருக்கு மொத்தம் 7 குழந்தைகள் உள்ளனர். என்னதான் ஆப்கானிஸ்தானின் அம்பானி என்று அழைக்கப்பட்டாலும் மிர்வாய்ஸ் அஸிஸியின் சொத்து மதிப்பு, முகேஷ் அம்பானி, அதானி மற்றும் டாடா ஆகியோரை காட்டிலும் மிகவும் குறைவுதான். மிர்வாய்ஸ் அஸிஸியின் சொத்து மதிப்பு குறித்த உறுதியான தகவல் தெரியவில்லை. இருப்பினும் தோராயமாக மிர்வாய்ஸின் சொத்து மதிப்பு ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications