இந்தியாவில் சரக்கு மற்றும் சேவைகள் வரி (GST) விதிப்பில் அதிகபட்ச வரி விகிதம் தற்போதைய 40 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாக உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 2026 ஏப்ரல் 1 முதல், இழப்பீட்டு உப வரி அதாவது Compensation Cess விதிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு முடிகிறது.
இதனால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட ஜிஎஸ்டி வரி விதிப்பின் அதிகப்பட்ச வரி அளவை உயர்ந்தும் முடிவு எடுக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

ஜிஎஸ்டி வரி விகித உயர்வு: 2017 ஜூலை முதல் அமலுக்கு வந்த ஜிஎஸ்டி வரி முறையில், மாநிலங்களுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுகட்டுவதற்காக Cess வரி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த Cess வரி, ஆடம்பர மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருள்களுக்கு (sin and luxury goods) 28 சதவீத ஜிஎஸ்டி வரிக்கு மேல் கூடுதலாக விதிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, SUV கார்களுக்கு 28% ஜிஎஸ்டி மற்றும் 22% Cess சேர்த்து மொத்த வரி 50% ஆக இதுநாள் வரையில் வசூலிக்கப்படுகிறது.
ஆனால், இந்த Cess வரி 2026 மார்ச் 31-ஐ தாண்டி தொடர முடியாது என்று சட்டம் கூறுகிறது. இதனால், இதே அளவு வருவாயை பராமரிக்க, ஜிஎஸ்டி வரி விகிதத்தை உயர்த்த வேண்டிய நிலை உள்ளது. தற்போது, ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் அதிகபட்ச வரி விகிதம் 40% ஆக உள்ளது, செஸ் வரி இருக்கும் காரணத்தால் இதுநாள் வரையில் 40 சதவீதம் அளவிலான வரியை எந்த பொருட்களுக்கும் மத்திய அரசு விதிக்கவில்லை. செஸ் நீக்கப்பட்டால் ஜிஎஸ்டி வரியை 60% வரையில் உயர்த்துவதற்கு மத்திய ஜிஎஸ்டி சட்டத்தில் (CGST Act) திருத்தம் தேவைப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
செஸ் வரி: Cess என்பது ஜிஎஸ்டி வரிக்கு மேல் விதிக்கப்படும் கூடுதல் வரியாகும். இது பின்வரும் பொருள்களுக்கு விதிக்கப்படுகிறது:
SUV கார்கள்: 28% ஜிஎஸ்டி + 22% செஸ் வரி = மொத்தம் 50% வரி.
புகையிலை பொருட்கள்: புகையிலை வகைகளைப் பொறுத்து 55-60% வரை மொத்த வரி.
குளிர்பானங்கள்: 28% ஜிஎஸ்டி + 12% செஸ் வரி = மொத்தம் 40% வரி.
இந்த செஸ் வரி, பொருளின் மதிப்பின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது, மேலும் இது எப்போதும் ஜிஎஸ்டி விகிதத்துடன் நேரடியாக கூட்டப்படுவதில்லை. 2026-க்கு பிறகு இந்த செஸ் வரி நீக்கப்படுவதால், இதே அளவு வருவாயை பெற அரசு ஒற்றை வரி விகிதத்தை (single GST rate) உயர்த்த வேண்டும்.
தமிழ்நாட்டுக்கு என்ன பாதிப்பு?: தமிழ்நாடு, இந்தியாவின் மிகப்பெரிய ஜிஎஸ்டி வருவாய் அளிக்கும் மாநிலங்களில் ஒன்றாக உள்ளது. சென்னை, கோயம்புத்தூர், மதுரை போன்ற பெரு நகரங்களில் ஆடம்பர கார்கள், குளிர்பானங்கள் மற்றும் புகையிலை பொருள்களின் நுகர்வு கணிசமாக உள்ளது. இந்த மாற்றத்தின் மூலம் ஏற்படும் பாதிப்பு இந்தியா முழுவதும் எதிரொலிக்கும்.
ஜிஎஸ்டி விகிதம் 60% வரையில் உயர்த்தினால் பல பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதனால் மக்களுக்கு கூடுதல் செலவுகளை ஏற்படுத்தலாம். மத்திய அரசு தனது வரி வருவாய் அளவீட்டை கட்டுக்குள் வைக்க முக்கியமான பொருட்கள் மீது வரியை உயர்த்த வாய்ப்பு உள்ளது.
எடுத்துக்காட்டாக, ஒரு SUV காரின் விலை தற்போது 50% வரி சுமையுடன் உள்ளது. செஸ் வரி நீக்கப்பட்டு, ஜிஎஸ்டி 50% அல்லது அதற்கு மேல் உயர்ந்தால், வாகனங்களின் விலைகள் உயரலாம். இது தமிழ்நாட்டின் ஆட்டோமொபைல் விற்பனை மற்றும் உற்பத்தி துறையை பாதிக்கலாம். மறுபுறம், சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் (MSME) இந்த மாற்றத்தால் மறைமுகமாக பாதிக்கப்படலாம்.
அடுத்து என்ன?: இந்த மாற்றத்தை அமல்படுத்த, ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளிக்க வேண்டும். மேலும், மத்திய ஜிஎஸ்டி சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும். இது நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு, 2026 நிதி ஆண்டுக்கு முன் அமலுக்கு வரலாம்.


Click it and Unblock the Notifications