மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஆயுள் காப்பீட்டு நிறுவனமான LIC-ல் தனது பங்கு இருப்பில் இருந்து சுமார் 5 சதவீத பங்குகளை நடப்பு நிதியாண்டில் விற்பனை செய்யும் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளதாக பிசினஸ் லைன் தகவலை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு 2022 மே மாதம் LIC-யின் ஐபிஓ வெளியீட்டின் மூலம் அரசு ரூ.21,000 கோடி திரட்டியது. இந்திய பங்குச்சந்தையில் இது மிகப்பெரிய IPO-வாகும். இந்த ஐபிஓ-வில் மத்திய அரசு சுமார் 3.5 சதவீத பங்குகளை விற்றது.
LIC-ல் 96.5 சதவிகித பங்குகள் மத்திய அரசின் கையில் இருக்கும் வேளையில், தற்போதைய பங்கு விலையைப் பொறுத்தவரை, அதிக மதிப்பீட்டைப் பெற அரசு பொதுப் பங்கு வெளியீடு (FPO), தகுதியுள்ள நிறுவனங்களின் வைப்பு (QIP) வாயிலாக பங்குகளை விற்பனை செய்து நிதி திரட்ட பரிசீலித்து வருகிறது.

2023 டிசம்பர் 20 அன்று, மத்திய நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரத் துறை, LIC-க்கு ஒரு முறை சலுகை அளித்து, இதன் படி பட்டியலிடப்பட்ட தேதியிலிருந்து 10 ஆண்டுகளுக்குள் 25 சதவீத பங்குகளை பொது சந்தையில் விற்பனை செய்யக் கால அவகாசம் அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, செப்டம்பர் 14, 2024 அன்று பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான SEBI, எல்ஐசி நிறுவனத்திற்குப் பட்டியலிடப்பட்ட தேதியிலிருந்து 5 ஆண்டுகளுக்குள் (மே 16, 2027 வரை) 10 சதவீத பங்குகளை பொது சந்தையில் விற்க மூன்று ஆண்டுகள் கால அவகாசம் அளிக்கப்பட்டது.
இந்த நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் அதிகபட்ச வருவாயைப் பெறும் வகையில் மத்திய அரசு தனது எல்ஐசி பங்கு இருப்பை பகுதி பகுதியாக விற்பனை செய்யும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதில் ஒரு பகுதி தான் நடப்பு நிதியாண்டில் விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வர்த்தகத்தில் எல்ஐசி பங்குகள் சுமார் 4.12 சதவீதம் வளர்ச்சி அடைந்து ஒரு பங்கு விலை 1,124 ரூபாயாக உள்ளது. இதேபோல் கடந்த ஒரு மாதத்தில் 10.92 சதவீதமும், 2024 ஆம் ஆண்டில் 30.89 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது.
ஆயுள் காப்பீட்டுத் துறையில் முடிசூடா மன்னாக இருக்கும் எல்ஐசி புதிதாக ஹெல்த் இன்சூரன்ஸ் துறைக்குள் நுழையவுள்ளதாகத் சில மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. இந்த பங்கு விற்பனை மூலம் கிடைக்கும பணத்தை இத்துறைக்குள் நுழைய பயன்படுத்தப்படலாம்.
இந்தியாவில் கோவிட் தொற்று-க்கு பிறகு மக்கள் மத்தியில் ஹெல்த் இன்சூரன்ஸ் குறித்த விழிப்புணர்வு போதுமானதாக இருக்கிறது. இதேபோல் ஹெல்த் இன்சூரன்ஸ் கிளைம் செயல்முறையிலும் பல மாற்றங்கள், பல திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளது.
இந்த சாதகமான சூழ்நிலையில் எல்ஐசி ஹெல்த் இன்சூரன்ஸ் துறைக்குள் நுழைய, சந்தையில் இருக்கும் நிறுவனங்களைக் கையகப்படுத்துதல் மூலம் இத்துறையில் இறங்கும் வாய்ப்புகளை ஆராய்ந்து வருவதாக LIC தலைவர் சித்தார்த மோஹந்தி மே மாதம் தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து ஜூன் மாதம் LIC நிர்வாகம் தனக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் வணிகக் கட்டிடங்களை விற்பனை செய்து சுமார் 6-7 பில்லியன் டாலர் அதாவது, ரூ.50,000 முதல் ரூ.60,000 கோடி வரையிலான நிதியை திரட்ட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.


Click it and Unblock the Notifications