டெல்லி: இந்தியாவில் கோடிக்கணக்கான மக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம். இந்த ஜிஎஸ்டி வரி சீர்திருத்தத்தின் மூலம் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்களின் விலை குறையும் என்ற நம்பிக்கையை மத்திய அரசு நம் மனதில் விதைத்திருக்கிறது.
ஜிஎஸ்டி கூட்டம்: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நாளை மற்றும் நாளை மறுதினம் நடைபெற இருக்கிறது. இந்தியாவில் 5, 12, 18, 28 என நான்கு விகிதங்களில் ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்படுகிறது. இந்த வரி விகிதங்களை 5 மற்றும் 18 என இரண்டாக குறைக்க மத்திய அரசு பரிந்துரை செய்திருக்கிறது. மேலும் புகையிலை, மதுபானம் உள்ளிட்டவற்றுக்கு 40 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கலாம் என பரிந்துரை செய்துள்ளது. மத்திய அரசின் இந்த ஜிஎஸ்டி வரி சீர்திருத்த முறைக்கு ஜிஎஸ்டி கவுன்சிலிங் அமைச்சர்கள் குழு ஏற்கனவே ஒப்புதல் தந்துவிட்டது .

இரண்டு நாட்கள் கூட்டம்: மிக முக்கியமான ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் நாளை மற்றும் நாளை மறுதினம் நடைபெற இருக்கிறது. காலை 11 மணிக்கு தொடங்கக்கூடிய இந்த கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பல்வேறு மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் கலந்து கொண்டு இந்த வரி சீர்த்திருத்த முறைகள் குறித்து முக்கியமான ஆலோசனை நடத்த இருக்கின்றனர். இந்த கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரி சீர்திருத்த முடிவை அரசு ஏன் எடுத்தது, இதனால் ஏற்பட போகும் தாக்கங்கள் என்ன என்பது குறித்து விரிவாக எடுத்துரைக்க இருக்கிறார் .
வரி சீர்த்திருத்தம்: இதனை அடுத்து மாநில அரசுகளின் நிதி அமைச்சர்கள் தங்கள் தரப்பு வாதங்களை முன் வைப்பார்கள். இந்த வரி சீர்திருத்தம் என்பது அரசுக்கு வரக்கூடிய வருவாயில் பெரிய அளவிலான மாற்றத்தை ஏற்படுத்தும், அந்த வரி வருவாய் குறைவை அரசு எப்படி கையாள போகிறது என்பன உள்ளிட்ட விவரங்களும் இந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட இருக்கிறது.

வாகனத்துறை: தற்போது சிறிய ரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு 28% ஜிஎஸ்டி விதிக்கப்படும் நிலையில் அதனை 18 சதவீதமாக குறைக்க பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது . இவ்வாறு சிறிய ரக கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறையும்போது இவற்றின் விலையும் 10 சதவீதம் வரை குறையும் .
அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் : மக்கள் தங்கள் வீடுகளில் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பெரும்பாலான பொருட்களின் விலை குறையும் என நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது. ஏனெனில் அரசு 5 மற்றும் 18 என இரண்டு ஜிஎஸ்டி விகிதங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என பரிந்துரை செய்திருக்கிறது. இதன் காரணமாக 12 சதவீத ஜிஎஸ்டி வரி விகிதத்தின் கீழ் இருக்கக்கூடிய பெரும்பாலான பொருட்கள் 5 சதவீத ஜிஎஸ்டிக்குள் வந்துவிடும் .அதேபோல 28% வரி விதிப்பின் கீழ் இருக்கக்கூடிய பெரும்பாலான பொருட்கள் 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழ் வந்துவிடும். நாம் வீட்டில் பயன்படுத்தக்கூடிய பேஸ்டு தொடங்கி வாஷிங் மெஷின் ,ஏசி , குக்கர் என பல பொருட்களின் விலை குறையும்.
வேளாண் துறை: விவசாயிகளை பொறுத்த வரை தற்போது டிராக்டர்களுக்கு 12% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது இது 5% ஜிஎஸ்டிக்குள் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல வேளாண்மையில் பயன்படுத்தப்படும் பல்வேறு கருவிகளுக்கான ஜிஎஸ்டி வரியும் 5 சதவீதமாக குறைக்கப்படும் என்பதால் அவற்றின் விலை குறையும்.
சிகரெட் விலை உயரும்: புகையிலையான சிகரெட், பீடி, குட்கா ,பான் மசாலா ஆகியவற்றுக்கு 40% ஜிஎஸ்டி விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் விலை உயர போகிறது. அதே போல ஆடம்பர பைக்குகள், கார்களின் ஜிஎஸ்டியும் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது எனவே இவற்றின் விலை உயர வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications