இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் நிறுவனம் 2026 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டு முடிவுகளை வெளியிட்டு இருக்கிறது. சர்வதேச அளவில் ஐடி துறை மந்தமாக இருக்கக்கூடிய சூழலில் இந்தியாவின் முன்னணி நிறுவனமான டிசிஎஸ் நிறுவனம் ஜூலை 10ஆம் தேதி தன்னுடைய 2026 ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது.
டிசிஎஸ் காலாண்டு முடிவு: இதன்படி கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் டிசிஎஸ் நிறுவனத்தின் லாபம் 12,040 கோடி ரூபாயாக இருந்த நிலையில் இந்த ஆண்டு அது 12,760 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. வரி உள்ளிட்டவைகளை செலுத்திய பிறகு டிசிஎஸ் நிறுவனத்தின் லாபம் 12,250 கோடி ரூபாயாக தான் இருக்கும் என பல தரகு நிறுவனங்களும் கணிப்பு வெளியிட்டிருந்த நிலையில் அதனை விட அதிக லாபம் ஈட்டி இருக்கிறது டிசிஎஸ் .

வருமானம் உயர்ந்ததா?: டிசிஎஸ் நிறுவனத்தின் செயல்பாடுகள் மூலம் கிடைத்த வருமானம் என்பது 1.3% உயர்ந்து இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இந்த நிறுவனத்திற்கு தன்னுடைய செயல்பாடுகள் மூலம் 62,613 கோடி ரூபாய் வருமானம் கிடைத்தது அது இந்த ஆண்டு 63,437 கோடி என உயர்ந்திருக்கிறது . இது தவிர டிசிஎஸ் நிறுவனம் 2025 -26 நிதியாண்டில் தங்கள் நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு ஒவ்வொரு பங்குக்கும் தலா 11 ரூபாய் ஈவுத்தொகையாக வழங்கப்படும் என தெரிவித்திருக்கிறது.
ஈவுத்தொகை அறிவிப்பு: இந்த இடைக்கால ஈவுத்தொகை ஆகஸ்ட் 4ஆம் தேதி அன்று பங்குதாரர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் இதற்கான ரெக்கார்ட் தேதியாக ஜூலை 16 கருத்தில் கொள்ளப்படும் என்றும் அறிவித்திருக்கிறது. டிசிஎஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரியான கீர்த்தி வாசன் மேக்ரோ பொருளாதார சூழல் மற்றும் பல்வேறு நாடுகளுக்கு இடையிலான போர் பதற்றம் ஐடி துறைக்கான தேவையை குறைத்து இருக்கிறது. இருந்தாலும் மற்ற புதிய துறைகளில் சேவைகள் அதிகரித்ததே நிறுவனத்தின் லாபம் அதிகமாக காரணமாக இருந்திருக்கிறது எனக் கூறியிருக்கிறார்.
பங்கு மதிப்பு என்ன?: செயற்கை நுண்ணறிவு துறை சார்ந்த பல்வேறு மாற்றங்களை இந்த காலாண்டில் நிறுவனம் கண்டிருக்கிறது என்றும் அவர் கூறியிருக்கிறார். டிசிஎஸ் நிறுவன காலாண்டு முடிவுகள் வெளியாக இருக்கக்கூடிய நிலையில் ஜூலை 10ஆம் தேதி அன்று இந்திய பங்குச்சந்தையில் டிசிஎஸ் நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 0.4 சதவீதம் உயர்ந்து 3,397 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமானது.
ஒப்பந்தங்களின் மதிப்பு எவ்வளவு?: டிசிஎஸ் நிறுவனத்தின் தன் வசம் தற்போது 9.4 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஒப்பந்தங்களை வைத்திருக்கிறது இது முந்தைய காலாண்டில் 12 . 12 பில்லியன் டாலர்களாக இருந்தது. அதாவது நிறுவனத்திடம் இருக்கும் ஒப்பந்தங்களின் மதிப்பு என்பது குறைந்துள்ளது. டிசிஎஸ் நிறுவனம் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் புதிதாக 6,071 ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு தந்திருப்பதாக தெரிவித்திருக்கிறது. இதன் மூலம் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 6,13,069 என உயர்ந்திருக்கிறது. தற்போது 1,14,000 ஊழியர்கள் நவீன செயற்கை நுண்ணறிவு திறன்களில் கைதேர்ந்தவர்களாக இருக்கின்றனர் என அந்த நிறுவனம் கூறி இருக்கிறது.


Click it and Unblock the Notifications