தீபாவளி கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகப் பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ பங்குச்சந்தை நவம்பர் 12 அன்று ஒரு மணி நேரச் சிறப்பு முஹுரத் வர்த்தகத்தை நடத்துவதாக அறிவித்துள்ளது. இந்தச் சிறப்புப் பங்குச்சந்தை வர்த்தகம் மாலை 6 மணிக்குத் தொடங்கி இரவு 7:15 மணிக்கு முடிவடையும், இதில் 15 நிமிடம் முந்தைய வர்த்தக அமர்வுகளுக்காக ஒதுக்கப்பட்டு உள்ளது.
தீபாவளி பண்டிகை வெறும் பண்டிகை மட்டும் அல்லாமல் இந்தியாவில் பெரும் பகுதி மக்களுக்குச் சிறப்பான முதலீட்டுக் காலமாகவும் விளங்குகிறது. இதனைப் பறைசாற்றும் வகையில் மும்பை பங்குச்சந்தை ஒவ்வொரு வருடமும் முஹுரத் வர்த்தகம் என்ற பெயரில் சிறப்பு வர்த்தகத்தை நடத்தும். தீபாவளி பண்டிகையின் போது தங்கம் விற்பனையும் அதிகமாக இருக்கும்.
இந்த முஹுரத் வர்த்தகம் புதிய இந்து நாட்காட்டி ஆண்டின் தொடக்கத்தைக் குறிக்கின்றன, இது சம்வத் என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் நல்ல நேரத்தில் வர்த்தகம் நடத்துவது பங்குதாரர்களுக்குத் தங்களுடைய செல்வச் செழிப்பையும் மற்றும் நிதியை வளர்ச்சிக்குக் கொண்டு செல்லும் வரும் என்று நம்பப்படுகிறது.
இதனாலேயே முஹுரத் வர்த்தகத்தின் போது செயல்படுத்தப்படும் அனைத்து வர்த்தகங்களும் ஒரே நாளில் செட்டில் செய்யப்படும். இந்த முஹுரத் வர்த்தகம் இந்து மதத்தில் இருக்கும் முதலீட்டாளர்களுக்கு, குறிப்பாக வட இந்திய முதலீட்டாளர்களுக்கு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
தீபாவளி பண்டிகை என்பது எந்தவொரு புதிய முயற்சியையும் தொடங்க ஒரு நல்ல நேரமாகக் கருதப்படுகிறது. இந்தச் சிறப்பு வர்த்தகத்தின் போது முதலீடு செய்வது மூலம் முதலீட்டாளர்கள் ஆண்டு முழுவதும் லாபம் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

இதற்காக வரும் நவம்பர் 12 ஞாயிற்றுக்கிழமை அன்று, வழக்கமான வர்த்தகம் மூடப்படும். ஆனால் சிறப்பு வர்த்தகத்திற்காகப் பங்குச்சந்தை வர்த்தகம் மாலை 6 மணிக்குத் தொடங்கி இரவு 7:15 மணி வரை திறக்கப்பட உள்ளது. கடந்த 10 சிறப்பு முஹுரத் வர்த்தகம் வர்த்தக நாளில் 10ல் 7 முறை உயர்வுடன் முடிவடைந்துள்ளது. இதேபோல் கடந்த 10 ஆண்டுகளில் முதலீட்டாளர்களின் முதலீட்டுப் பணம் பெரிய அளவில் உயர்ந்துள்ளது.
2022ல் முஹுரத் வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இரண்டும் தலா 0.88 சதவிகிதம் அதிகரித்தன, அதே நேரத்தில் 2021 இல், இரண்டு அளவுகோல்களும் தலா 0.49 சதவிகிதம் உயர்ந்தன. எனவே விருப்பம் இருப்பின் நீங்களும் தீபாவளி தினத்தில் முதலீடு செய்து செல்வச் செழிப்புப் பெருக்கும் இறைவன் அருளைப் பெறுங்கள்.


Click it and Unblock the Notifications