ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஞாயிற்றுக்கிழமை 2022-23 ஆம் நிதியாண்டுக்கான வருடாந்திர அறிக்கையை வெளியிட்டு உள்ளது. இந்த அறிக்கையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் அடுத்த டார்கெட் என்ன, எந்த துறையில் அதிகம் கவனம் போன்றவற்றை விளக்கியுள்ளது. இதோடு முக்கியமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாகம் முகேஷ் அம்பானி சம்பளம் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டு உள்ளது.
இதேவேளையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் தலைவர் முகேஷ் அம்பானி 2029 ஆம் ஆண்டு வரையில் இக்குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக அடுத்த ஐந்தாண்டு காலம் தொடர பங்குதாரரின் ஒப்புதலுக்கு நிர்வாக குழு சமர்ப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முகேஷ் அம்பானி 2008-09 நிதியாண்டில் அதாவது ஏப்ரல் 2008 முதல் மார்ச் 2009 வரையிலான காலக்கட்டம் முதல் 2019-20 நிதியாண்டு வரையில் வருடாந்திர ஊதியமாக 15 கோடி ரூபாயை பெற்று வந்தார். பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நிறுவனத்தை நிர்வாகம் செய்யும் தலைவருக்கு 15 கோடி ரூபாய் சம்பளம் ஓகே தான்..
ஆனால 2020-21 முதல் அதாவது கொரோனா தொற்று காலத்தில் இருந்து நிறுவனமும் அதன் அனைத்து வணிகங்களும் தங்களுடைய இயல்பான வருவாய்த் திறனுக்கு முழுமையாகத் திரும்பும் வரை, முகேஷ் அம்பானி எந்த சம்பளத்தையும் வாங்க வேண்டாம் என முடிவு செய்தார்.
இதன் மூலம் முகேஷ் அம்பானி 2020-21 ஆம் நிதியாண்டில் சம்பளம் அல்லது லாப அடிப்படையிலான கமிஷன், போனஸ், இதர சலுகைகள் என எதுவும் வழங்கப்படவில்லை என்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக குழு தனது வருடாந்திர அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் முகேஷ் அம்பானி வணிக ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களின் போது மனைவி மற்றும் உதவியாளர்களுக்கு பயணம், போர்டிங் மற்றும் தங்கும் செலவுகள் மற்றும் நிறுவனத்தின் வணிகத்தில் பயன்படுத்த கார்களை வழங்குதல் உள்ளிட்ட செலவுகளை ரிலையன்ஸ் நிர்வாகம் முகேஷ் அம்பானிக்கு வழங்குகிறது.

இதோடு முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு பாதுகாப்புக்கான பணத்தையும் ரிலையன்ஸ் நிர்வாகம் வழங்கும். இந்த நிலையில் 2022-23 ஆம் நிதியாண்டுக்கும் முகேஷ் அம்பானி எவ்விதமான சம்பளத்தையும் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முகேஷ் அம்பானி சம்பளம் வாங்கவில்லை என்றாலும் அவருடைய 15 கோடி ரூபாய் சம்பளத்தை காட்டிலும் 100 மடங்கு அதிக பணத்தை பங்குகளுக்கு அளிக்கப்படும் டிவிடென்ட் வாயிலாக பெறுகிறார். முகேஷ் அம்பானி குடும்பம் தான் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் பெரும் முதலீட்டாளராக உள்ளார்.
இதன் மூலம் முகேஷ் அம்பானி ஜீரோ ரூபாயை சம்பளமாக பெற்றாலும் ஒவ்வொரு வருடமும் அதிக பணத்தை சம்பாதித்து பணக்காரராக உள்ளார்.


Click it and Unblock the Notifications