இந்தியாவின் மீண்டும் ஐபிஓ மோகம் நிறுவனங்கள் மத்தியில் வெடித்துள்ளது, கிட்டதட்ட 10க்கும் அதிகமாக இந்திய ஸ்டார்ட்அப் யூனிகார்ன் நிறுவனங்கள் ஐபிஓ வெளியிடும் திட்டத்தில் இறங்கியுள்ளது.
இதில் முதலாவதாகச் சோமேட்டோ ஐபிஓ வெளியிட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது, இதைத் தொடர்ந்து பேடிஎம் நிறுவனம் சுமார் 2.2 பில்லியன் டாலர் மதிப்பிலான ஐபிஓ திட்ட விண்ணப்பத்தைச் செபியிடம் இன்று சமர்ப்பித்துள்ளது.

இந்த அட்டகாசமான சூழ்நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமம் ஆக விளங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது எண்ணெய் வர்த்தகப் பிரிவான ரிலையன்ஸ் O2C நிறுவனத்தை, ரீடைல் வர்த்தகப் பிரிவான ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தையும் ஐபிஓ வெளியிடத் திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த இரண்டு நிறுவனத்தில் கட்டாயம் ஒரு நிறுவனம் நடப்பு நிதியாண்டில் வெளியிட அதிக வாய்ப்பு இருப்பதாக வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கடந்த ஒரு வருடமாகத் தனது கிளை நிறுவனங்களை ஐபிஓ வெளியிடத் திட்டமிட்டு வருகிறது. இதற்காகப் பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வங்கிகளிடம் கூட்டணி வைத்துள்ளது.
முதல் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தான் ஐபிஓ வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ரிலையன்ஸ் O2C மற்றும் ரிலையன்ஸ் ரீடைல் ஐபிஓ வெளியிட முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தரப்பில் எவ்விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.


Click it and Unblock the Notifications