மும்பை: இந்தியாவில் ஐந்தாண்டு காலமாக தடை செய்யப்பட்டிருந்த ஷீன் (Shein) ஃபேஷன் செயலி மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம் சீனாவின் ஷீன் செயலியை இந்தியாவில் மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வந்திருக்கிறது.
சீனாவை தலைமை இடமாகக் கொண்ட ஷீன் நிறுவனம் இந்தியாவில் ஷீன் இந்தியா என்ற பெயரில் ஒரு ஃபேஷன் செயலியை நடத்திவந்தது. இந்த செயலி வாயிலாக நாம் துணிமணிகள் உள்ளிட்டவற்றை ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா மற்றும் சீனா இடையே எல்லையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இந்த செயலிக்கு இந்திய அரசு தடை விதித்தது.

கிட்டத்தட்ட ஐந்து ஆண்டு காலம் தடை செய்யப்பட்டிருந்த இந்த செயலி (APP)தற்போது மீண்டும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தை நடத்தி வரக்கூடிய அவருடைய மகள் ஈஷா அம்பானி ஷீன் இந்தியா செயலியை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வந்திருக்கிறார். ரிலையன்ஸ் நிறுவனம் இந்த நிறுவனத்தில் கணிசமான பங்குகளைப் பெற்று மீண்டும் இதனை செயல்பாட்டுக்கு கொண்டு வந்திருக்கிறது.
ஆசியாவின் மிகப்பெரிய சில்லறை வணிக சந்தையான இந்தியாவில் ஷீன் நிறுவனம் இதன் மூலம் மீண்டும் கால் பதித்துள்ளது. ஷீன் நிறுவனம் இந்திய பயனாளர்களின் தகவல்கள் மற்றும் இந்தியாவில் இந்த செயலியின் செயல்பாடுகள் தொடர்பான தரவுகள் அனைத்தையும் இந்தியாவில் மட்டுமே சேமிக்க வேண்டும், சீனாவிடம் பகிரப்படாது என்றும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்த கடுமையான ஒப்பந்தத்தின் கீழ் தான் ஷீன் இந்தியா செயலி மீண்டும் செயல்பாட்டுக்கு வந்திருக்கிறது. இந்தியாவில் ரிலையன்ஸ் நிறுவனம் இ-காமர்ஸ் பிரிவில் வலுவான நிறுவனமாக மாறுவதற்கு திட்டமிட்டு வருகிறது. மிந்த்ரா, மீஷோ உள்ளிட்ட செயலிகளின் போட்டியை எதிர்கொள்ள ஈஷா அம்பானி வெளிநாடுகளை சேர்ந்த பல பிராண்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவற்றை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறார்.
அந்த வகையில் தான் தற்போது சீனாவின் ஷீன் செயலியை மீண்டும் இந்தியாவில் பயன்பாட்டுக்கு கொண்டு வந்திருக்கிறார். கடந்த 2012ஆம் ஆண்டு சீனாவில் தொடங்கப்பட்டதுதான் ஷீன் என்ற நிறுவனம். தற்போது இது சிங்கப்பூரை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. மேற்கத்திய ஆடைகளை குறைந்த விலையில் விற்பனை செய்வதில் புகழ்பெற்றது இந்த செயலி. ஆனால் 2020 ஆம் ஆண்டு மத்திய அரசு டிக்டாக் உள்ளிட்ட செயலிகளோடு ஷீன் செயலிக்கும் தடை விதித்தது.
இதில் 199 ரூபாயிலிருந்து துணிமணிகள் விற்பனைக்கு வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் கட்டமாக இந்த செயலி டெல்லி ,மும்பை, பெங்களூர் ஆகிய நகரங்களில் மட்டுமே பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது, எதிர்வரும் நாட்களில் நாடு முழுவதும் இது பயன்பாட்டுக்கு வரும் என சொல்லப்பட்டு இருக்கிறது. உள்ளூரை சேர்ந்த உற்பத்தியாளர்களிடமிருந்து துணிகளை வாங்கி இது விற்பனை செய்யும் என கூறப்படுகிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications