சென்னை: இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் தனது முதல் இடத்தை தக்கவைத்துக்கொள்ள கௌதம் அதானி உடன் தொடர்ந்து போராடி வரும் முகேஷ் அம்பானி ரீடைல் துறையில் புது புது பிராண்டுகளை உருவாக்குவது மட்டும் அல்லாமல் தொடர்ந்து புதிய வர்த்தகத்திலும் இறங்கி வருகிறார்.
அந்த வகையில் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் சில்லறை விற்பனை பிரிவான ரிலையன்ஸ் ரீடைல், புதிதாக குவிக் காமர்ஸ் துறையில் இறங்கி பெரும் வர்த்தகத்தைக் கைப்பற்றும் இலக்குடன் களமிறங்கியுள்ளது.

அதாவது ரிலையன்ஸ் ரீடைல் தளத்தில் ஆர்டர் செய்யும் பொருட்களை ஒரு மணி நேரத்திற்குள் டோர் டெலிவரி செய்யும் சேவையை அறிமுகப்படுத்த உள்ளது. தற்போது, Blinkit, Swiggy Instamart, Zepto போன்ற நிறுவனங்கள் 10 நிமிடங்களுக்குள் டெலிவரி செய்து வரும் வேளையில் முதற்கட்ட முயற்சியாக 1 மணிநேர டெலிவரியை முக்கிய இலக்காகக் கொண்டு உள்ளது.
கொரோனா காலத்தில் ஜியோமார்ட் ஆப் மூலம் ஹோம் டெலிவரி சேவையை அளித்து வந்த நிலையில், இதை ஜியோமார்ட் எக்ஸ்பிரஸ் என்று குவிக் டெலிவரி சேவையாக மெருகேற்றியது. ஆனால் இதற்கு போதிய வரவேற்பு கிடைக்காத காரணத்தால் கடந்த ஆண்டு ஜியோமார்ட் எக்ஸ்பிரஸ் என்ற குவிக் டெலிவரி சேவையை ரிலையன்ஸ் ரீடைல் மொத்தமாக நிறுத்தியது.
இந்த நிலையில் தற்போது நாட்டின் முக்கிய வர்த்தக பகுதியான மும்பை மற்றும் நவி மும்பை பகுதிகளில் மட்டும் மளிகைப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் (FMCG) ஆகியவற்றை உடனடியாக டெலிவரி செய்யும் சோதனை முயற்சியை ரிலையன்ஸ் ரீடைல் தொடங்கியுள்ளது. இதன் மூலம் ஒரு மணி நேரத்திற்குள் பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஜியோமார்ட் மொபைல் செயலியில் இந்த குவிக் டெலிவரி சேவை "ஹைபர்லோகல் டெலிவரி" என்ற பெயரில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை வெற்றி ஆகும் பட்சத்தில் கூடுதல் கடைகள் இணைக்கப்பட்டு, சேவை அளிக்கும் பகுதிகளை விரிவாக்கம் செய்யவும், டெலிவரி நேரத்தை 30-45 நிமிடங்களாகக் குறைக்கவும் ரிலையன்ஸ் இலக்கு வைத்துள்ளது.
ஆனால் ரிலையன்ஸ்-ன் ஹைபர்லோகல் டெலிவரி சேவை Blinkit, Swiggy Instamart, Zepto போன்ற ஜாம்பவான்களை ஓரம்கட்ட முடியுமா என்றால் கட்டாயும் வாய்ப்பில்லை. Blinkit பெருநகரங்களைத் தாண்டி சிறு நகரங்களுக்குச் செல்கிறது, Zepto 3.6 பில்லியன் டாலர் மதிப்பிலான நிறுவனமாக இருந்துகொண்டு, 50 பில்லியன் டாலர் நிறுவனமாக உயர இலக்கு நிர்ணயம் செய்து வருகிறது. இப்படியிருக்கும் சூழ்நிலையில் அம்பானி வராரு கதறவிட போறாரு செட் ஆகாது.
இதேபோல் ரிலையன்ஸ் தனது ஹைபர்லோகல் டெலிவரி சேவையை மார்கெட்டிங் செய்ய பெரும் தொகையைச் செலவிட வேண்டும். உதாரணமாகக் குவிக் காமர்ஸ் சேவைக்கு டெலிவரி கட்டணம் இல்லை என ரிலையன்ஸ் அறிவித்தாலும் தாமதம் காரணமாக மக்கள் தொடர்ந்து Blinkit, Swiggy Instamart, Zepto-வை தான் நாடுவார்கள்.
ரிலையன்ஸ் ரீடைல் கையில் ஏற்கனவே டன்சோ நிறுவனத்தில் முதலீடு செய்து பங்குகளை வைத்துள்ளது, இந்த நிறுவனத்தை மொத்தமாகக் கைப்பற்றி விரிவாக்கம் செய்தால் Blinkit, Swiggy Instamart, Zepto ஆகியவற்றுடன் போட்டிப்போட வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications