ஒரு சலவைக்கடைக்காரரிடம் மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் தேவேந்திர பத்னாவிஸின் உதவியாளர் எனக் கூறி ரூ.15 லட்சத்தை மோசடி செய்த விவகாரத்தில் இரண்டு பேரை மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட கிரண் பாட்டீல் போலி உதவியாளர் என நாடகமாடியுள்ளார், இவருடன் சுஹாஸ் மாஹாதிக் என்பவரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவ்விருவரும் மல்லேஷ் கல்லூரி என்பவரிடம் வந்து அவர் வசிக்கும் பகுதியை குடிசை மாற்றுவாரியத்தின் கீழ் சீரமைக்கப் போவதாக கூறியுள்ளனர். இதை நம்பி அவர்களிடம் ரூ.15 லட்சத்தை மல்லேஷ் கல்லூரி தந்து ஏமாந்துள்ளார்.

இதனிடையே தகுதியான நபர்களின் பட்டியலில் இருந்து மல்லேஷ் கல்லூரியை தகுதி நீக்கம் செய்யக் கோரி தோபி காட் குடியிருப்பாளர்கள் சங்கத்தின் தலைவர், பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்துள்ளதாக மல்லேஷ் கல்லூரிக்கு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து மல்லேஷ் கல்லூரி, மகாதிக்கை அணுகி உதவியை நாடினார். சாகர் பங்களாவில் உள்ள ஒரு நபரை தனக்குத் தெரியும் என்று மகாதிக் கல்லூரியிடம் கூறினார் - சாகர் பங்களா என்பது மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் அதிகாரப்பூர்வ இல்லம்.
மகாதிக் கூறியது போல், மல்லேஷ் கல்லூரி தனது ஆவணங்களை அவரது வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பினார். இதன் பின்னர் மல்லேஷ் கல்லூரிக்கு தேவையானவை செய்து தரப்படும் என்று உறுதியளித்தார். ஆனால் இதற்காக அவர் ரூ. 35 லட்சத்தை அதிகாரிக்கு செலுத்த வேண்டும்.
இந்த நிலையில் மகாதிக் கடந்த வாரம் விதான் பவன் அருகே மல்லேஷ் கல்லூரிக்கு போன் செய்து, மகாராஷ்டிரா மாநிலம் என்று எழுதி வைத்திருந்த அடையாள அட்டையை கழுத்தில் நீல நிற ரிப்பன் அணிந்திருந்த 'அதிகாரி' பாட்டீலுக்கு அறிமுகப்படுத்தினார். அப்போது மல்லேஷ் கல்லூரியின் வேலையைச் செய்வதற்கு 35 லட்சம் ரூபாயை பாட்டீல் கேட்டார்.
மறுநாள், மல்லேஷ் கல்லூரி மகாதிக்கிடம், தனது சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ரூ. 10 முதல் 12 லட்சம் மட்டுமே செலுத்த முடியும் என்று கூறினார். இதற்கு பாட்டீலிடம் பேசிவிட்டு திரும்பி வருகிறேன் என்று மகாதிக் அவரிடம் கூறினார். பின்னர், அவர் விதான் பவன் அருகே மல்லேஷ் கல்லூரியை வரச் சொன்னார்.
மல்லேஷ் கல்லூரியும் அவரது சமூகத்தைச் சேர்ந்த சிலரும் தெற்கு மும்பையில் உள்ள ஏர் இந்தியா கட்டடம் அருகே சென்று மகாதிக்கிடம் ரூ.15 லட்சம் கொடுத்தனர்.
இதைத் தொடர்ந்து அங்கு வந்த பாட்டீல் மகாதிக்கிடம் தரப்பட்ட பணத்தை வாங்கிக் கொண்டு சென்றார். இரண்டு மணி நேரத்துக்குள் மல்லேஷ் கல்லூரிக்குத் தேவையான ஆவணத்தை தயார் செய்து தருவதாக பாட்டீல் கூறி விட்டு சென்றுள்ளார். ஆனால், நீண்ட நேரம் காத்திருந்தும், பாட்டீல் வரவில்லை. அவரை மொபைல் போனில் தொடர்பு கொள்ள முயன்றபோது போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.
மறுநாள் மகாதிக்கை அழைத்துக் கொண்டு மல்லேஷ் கல்லூரியும் அவரது சமூகத்தினரும் சாகர் பங்களாவுக்குச் சென்றனர். அங்கு அவர்கள் கிரண் பாட்டீலைப் பற்றி விசாரித்தனர். ஆனால் அந்தப் பெயரைக் கொண்ட யாரும் அங்கு வேலை செய்யவில்லை என்று அங்கிருந்த ஊழியர்கள் அவர்களிடம் கூறிவிட்டனர்.
அப்போதுதான் தாம் ஏமாற்றப்பட்டதை மல்லேஷ் கல்லூரியும் அவரது சமூகத்தினரும் உணர்ந்தனர். இதையடுத்து அவர்கள் மரைன் டிரைவ் காவல் நிலையத்தில் இந்த மோசடி பற்றி புகார் அளித்தனர். புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீஸார், தாணே மாவட்டத்தில் உள்ள டிட்வாலாவில் பாட்டீலை பிடித்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையின் போது, பாட்டீல் மோசடியில் மகாதிக்கின் பங்கை அம்பலப்படுத்தினார். மகாதிக்கையும் போலீஸார் இதனால் கைது செய்தனர். இருவர் மீதும் இந்திய தண்டனைச் சட்டத்தின் படி ஆள்மாறாட்டம், அரசு ஊழியர்போல் நடித்தல், ஏமாற்றுதல் போன்ற குற்றங்களுக்காக வழக்குகளை பதிந்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications