தமிழகத்தின் முக்கிய முட்டை உற்பத்தி மையமாக நாமக்கல் இருந்து வருகிறது. நாமக்கல்லில் இருந்து முட்டை பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. புரோட்டின் ரிச் உணவு என்பதால் பலரும் தங்கள் டயட்களில் முட்டையைச் சேர்த்து கொள்கின்றனர். இந்நிலையில் ஓமன் நாட்டில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய அனுமதிகள் வழங்கப்படுவதும் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் நாமக்கல் மற்றும் தமிழகத்தின் பிற முக்கிய பகுதிகளில் உள்ள கோழி பண்ணை தொழிலாளர்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
சமீபத்தில் கத்தார் நாடும் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் முட்டைகள் மீது எடை கட்டுப்பாடுகளை விதித்தது. அதாவது கத்தார் நாட்டில் அவர்கள் விதித்த வரம்புக்குள் முட்டையின் எடை இருக்க வேண்டும் என்பதே இந்த புதிய விதி.

திமுக எம்பி-யான கே.ஆர்.என்.ராஜேஷ் குமார் ராஜ்யசபாவில் கோழி பண்ணை தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் இந்த பிரச்சனை குறித்து தெரிவித்தார். இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதியை தொடங்க ஓமன் மற்றும் கத்தார் அதிகாரிகளிடம் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அதோடு கோழி பண்ணை தொழிலாளர்கள் மற்றும் முட்டை ஏற்றுமதியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விவாதிக்கவும், ஓமன் மற்றும் கதார் தூதரகங்களுடன் சந்திப்புகளை ஏற்படுத்தவும் கோரிக்கை வைத்ததாக தெரிவித்துள்ளார்.
நாமக்கல்லில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் முட்டைகளை இறக்குமதி செய்யும் முக்கிய நாடுகளாக ஓமன் மற்றும் கத்தார் உள்ளன. இந்நிலையில் இந்த இரு நாடுகளின் நடவடிக்கையின் காரணமாக முட்டை ஏற்றுமதி வர்த்தகம் வெகுவாக குறைந்துள்ளதாக நாமக்கல் ஏற்றுமதியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஓமன் நாட்டில் முட்டை இறக்குமதிக்கான அனுமதி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் நாமக்கல் முட்டை ஏற்றுமதியாளர்கள் ஜூன் மாதம் முதலே கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். அதன் பிறகு பல்வேறு சந்திப்புகளின் காரணமாக ஓமன் செப்டம்பர் மாதம் இறக்குமதியை மீண்டும் தொடங்கியது. ஆனால் குறிப்பிட்டு சில அனுமதிகள் மட்டுமே வழங்கப்பட்டது. இந்நிலையில் செவ்வாயன்று ஓமன் மீண்டும் இந்திய முட்டைகளை இறக்குமதி செய்வதற்கான புதிய அனுமதிகளை வழங்குவதை நிறுத்தியுள்ளது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் தரவுகளின்படி ஓமன், கத்தார், துபாய், அபுதாபி, மஸ்கட், மாலத்தீவு, இலங்கை உட்பட பல்வேறு நாடுகளுக்கும் 11.4 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன இதில் ஓமன் நாட்டுக்கு மட்டும் 50 சதவீத முட்டை ஏற்றுமதி செய்யப்படுகிறது. இருப்பினும் ஜூன் மாதத்திற்குள் இந்த எண்ணிக்கை வெறும் 2.6 கோடியாக சரிந்துள்ளது. ஜூன் மாதத்தில் இருந்து இந்த எண்ணிக்கை ஒரு கோடிக்கும் கீழ் குறைந்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது நாமக்கல் கோழிப்பண்ணை தொழிலாளர்களுக்கு கவலையாக மாறியுள்ளது.


Click it and Unblock the Notifications