மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் பெண்களுக்கு என பிரத்யேக அறிவிப்புகளை வெளியிட்டார்.
பெண்கள் முன்னேற்றத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிப்பதாக சுட்டிக்காட்டிய நிர்மலா சீதாராமன் முத்தலாக் தடை, பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம், பிரதமர் ஆவாஸ் யோஜனா உள்ளிட்டவற்றை பட்டியலிட்டார்.

குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் பெண்கள் உயர்கல்வி பயிலும் விகிதம் 28% அதிகரித்துள்ளது என பெருமிதம் தெரிவித்தார்.
பெண்களை லட்சாதிபதியாக மாற்றும் திட்டம்: மத்திய அரசு ஏற்கனவே லாக்பதி தீதி என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் 2 கோடி பெண்களை லட்சாதிபதியாக மாற்றுவது என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இதனை 3 கோடியாக உயர்த்தி நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சுய உதவிக் குழுக்களுக்கு முன்னுரிமை: மத்திய அரசு எப்போதுமே சுய உதவிக்குழுக்கள் மூலம் கிராமப்புற பெண்கள் முன்னேறுவதை ஊக்குவிக்கிறது. அந்த வகையில் 9 கோடி பெண்களை உறுப்பினர்களாக கொண்ட 83 லட்சம் சுய உதவிக்குழுக்கள் கிராமங்களில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளன என அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
அதிகளவில் STEM பாடங்களில் பயிலும் மாணவிகள்: பெண்கள் என்றால் ஆசிரியர் , வங்கி பணிகளுக்கு செல்ல வேண்டும் என்ற மனநிலை மாறியுள்ளது. இப்போது நாட்டில் STEM என குறிப்பிடப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் சார்ந்த பாடங்களில் மேற்கல்வி பயில்பவர்களில் 43% மாணவிகள். இது உலகிலேயே அதிகம் என்றும் இதன் மூலம் பணியிடங்களில் பெண்களின் பங்கு அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
பிரதமர் ஆவாஸ் யோஜனா: பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பிரதமர் ஆவாஸ் யோஜனா மூலம் 70% வீடுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என நிதி அமைச்சர் தனது பட்ஜெட் உரையில் குறிப்பிட்டார்.
பெண் குழந்தைகளுக்கு புற்றுநோய் தடுப்பூசி: உலகளவில் பெண்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பது கர்ப்பப்பை வாய் புற்றுநோய். இதனை தடுக்க 9 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகளுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் இந்த நோயின் அச்சுறுத்தல் நீடிக்கும் நிலையில், கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுக்க 9 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு தடுப்பூசி போடப்படும் என அறிவித்தார்.
மருத்துவ காப்பீடு: மத்திய அரசு ஆயுஷ்மாச்ன் பாரத் திட்டம் மூலம் மக்களுக்கு மருத்துவ காப்பீட்டினை வழங்கி வருகிறது. அந்த வகையில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் அங்கன்வாடி பனியாளர்களுக்கும் மருத்துவ காப்பீடு விரிவுபடுத்தப்படும் என அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications