பிரபல வீடியோகான் நிறுவனத்தின் தலைவர் வேணுகோபால் தூத் திவாலானதாக அறிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடன் மோசடி வழக்கில் அவர் மீது திவால் எடுக்கப்பட்டுள்ளது.
எஸ்பிஐ வங்கிக்கு செலுத்த வேண்டிய 12,668 கோடி ரூபாய் கடனை வீடியோகான் நிறுவனத்தின் தலைவர் வேணுகோபால் தூத் செலுத்த தவறி இருந்தார். இது தொடர்பாக எஸ்பிஐ வங்கி தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் வேணுகோபால் தூத்தை திவாலானவராக அறிவித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த திவால் நடவடிக்கைகளை கவனிப்பதற்காக ஆஷிஷ் நாராயண் என்பவர் திவால் ட்ரஸ்டியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

வீடியோகான் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் மற்றும் வீடியோகான் டெலிகம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் பெற்ற கடன்களுக்கு, வேணுகோபால் தூத் தனிப்பட்ட முறையில் உத்தரவாதம் அளித்திருந்தார். அந்த நிறுவனங்கள் கடனைத் திருப்பி செலுத்த தவறியதால், எஸ்பிஐ வங்கி, தூத்தின் மீது தனிப்பட்ட திவால் நடவடிக்கையை தொடங்கியது.
செப்டம்பர் 30 நிலவரப்படி, வட்டி மற்றும் அபராத தொகை உள்பட எஸ்பிஐ வங்கிக்கு இவர் செலுத்த வேண்டிய மொத்த தொகை 12,668.06 கோடி ரூபாய் ஆகும். முன்னதாக கடந்த ஏப்ரல் மாதமே வேணுகோபால் தூத் சிலிகுரியில் உள்ள ஒரு ரியல் எஸ்டேட் ,மேம்பாட்டு திட்டத்தில் தனக்கு பணம் கிடைக்கும் என்றும் அதன் மூலம் 36 மாதங்களில் 600 கோடி ரூபாயை திருப்ப தருவதாகவும் ஒரு திட்டத்தை முன்மொழிந்தார்.
ஆனால் திவால் விதிகளின்படி தீர்வு நிபுணருடன் கலந்தாலோசிக்காமல் இந்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என கூறி எஸ்பிஐ இதனை நிராகரித்து விட்டது. இந்நிலையில் தான் எஸ்பிஐ மீண்டும் ஒரு மனுவை தாக்கல் செய்து திவால் நடவடிக்கைகளுக்கு வித்திட்டுள்ளது. இதன்படி வேணுகோபால் தூத் தனது சொத்துக்கள் மற்றும் நிதிநிலை குறித்த விவரங்களை 7 நாட்களுக்குள் திவால் ட்ரஸ்டியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
திவால் ட்ரஸ்ட், கடன் வழங்கியவர்கள் மற்றும் திவால் தீர்வு அறிக்கைகளை 90 நாட்களுக்குள் NCLT மற்றும் கடன் வழங்குபவர்களின் குழுவிற்கு ஒரு ஆரம்ப அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அது மட்டுமிலாமல் வேணுகோபால் தூத்தின் அனைத்து சொத்துக்களும் திவால் ட்ரஸ்டியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டு, திவால் சட்ட விதிகளின்படி நிர்வகிக்கப்பட்டு, கடனாளிகளுக்கு பிரித்து வழங்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவானது, திவாலா சட்டம் பிரிவு 138-ன் கீழ் தூத் விடுவிக்கப்படும் வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடியோ கான் நிறுவன தலைவரான வேணுகோபால் தூத், 2022ஆம் ஆண்டு ஐசிஐசிஐ வங்கி கடன் மோசடி வழக்கில் சிபிஐ-ஆல் கைது செய்யப்பட்டார், 2023இல் ஜாமீனில் வெளிவந்தார்.


Click it and Unblock the Notifications

