சென்னை: இந்தியா முழுவதுமே தற்போது ஜிஎஸ்டி வரியில் கொண்டுவரப்பட இருக்கும் சீர்திருத்தம் குறித்து தான் அனைவரும் பேசி வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய சுதந்திர தின உரையில் தீபாவளி பண்டிகைக்குள் மிகப்பெரிய ஒரு ஜிஎஸ்டி சீர்திருத்தம் வரப்போகிறது, இதன் மூலம் பல்வேறு பொருட்களின் விலை குறைய போகிறது என்ற நற்செய்தியை வெளியிட்டார்.
ஜிஎஸ்டி சீர்த்திருத்தம்: மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் தற்போது நான்கு விகிதங்களாக ஜிஎஸ்டி வரி பிடித்தம் செய்யப்படும் நிலையில் அதனை 5 மற்றும் 18 % என இரண்டு விகிதங்களாக மட்டுமே மாற்ற வேண்டும் என ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு பரிந்துரை செய்திருப்பதாக தெரிவித்தது. மத்திய அரசின் இந்த பரிந்துரையை ஏற்று ஜிஎஸ்டி கவுன்சில் ஜிஎஸ்டி வரிநடைமுறையில் பெரிய சீர்திருத்தங்களை கொண்டு வருவதற்கு தயாராகி வருகிறது.

இனி 5%, 18% வரி மட்டுமே: அந்த வகையில் தற்போது விதிக்கப்பட்டு வரும் 12 மற்றும் 28% ஜிஎஸ்டி வரி முற்றிலுமாக நீக்கப்படும் . இந்த 12 மற்றும் 28% வரிவிதிப்புக்குள் இருக்கக்கூடிய பொருட்கள் 5% வரி விதிப்பு அல்லது 18 % வரி விதிப்புக்குள் கொண்டு வரப்படும். இவ்வாறு வரும்போது பல்வேறு பொருட்களின் விலை குறையும். மத்திய அரசு 28% ஜிஎஸ்டி வரி விதிப்புக்குள் இருக்கும் 90 சதவீத பொருட்கள் 18 % வரி விதிப்பின் கீழ் கொண்டுவரப்படும் என்றும் 12% வரி விதிப்பின் கீழ் இருக்கக்கூடிய 95 சதவீத பொருட்கள் 5%த வரி விதிப்பின் கீழ் கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்திருக்கிறது.
பல பொருட்கள் விலை குறையும்:மக்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பெரும்பாலான பொருட்கள் 5% வரிவிதிப்பின் கீழ் வந்துவிடும் இதனால் அந்த பொருட்களின் விலை பெருமளவு குறையும். மத்திய அரசின் இந்த வரி சீர்திருத்தம் மூலம் நாட்டில் மக்களிடையே பொருட்களை நுகரும் போக்கு அதிகரிக்கும். இந்த ஜிஎஸ்டி சீர்த்திருத்தம் எந்தெந்த பொருட்களின் விலையை குறைக்கும் என்பதை தற்போது விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

என்னென்ன விலை குறையும்: நாம் வீட்டில் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய டூத் பேஸ்ட், குடை, தையல் இயந்திரம், பிரஷர் குக்கர், சிறிய அளவிலான வாஷிங் மெஷின் உள்ளிட்டவற்றின் விலை குறையும். சைக்கிள் ,ரெடிமேடு ஆடைகள், காலணிகள் ,மருந்து, டைல்ஸ், விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் கருவிகள் உள்ளிட்டவற்றின் விலை குறையும்.
போன் விலை குறையுமா: மொபைல் போன் மற்றும் கணினி உள்ளிட்டவற்றின் விலையும் குறையும் . தேங்காய் எண்ணெய் , பிராசஸ் செய்யப்பட்ட உணவுகள், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகள் ,குழந்தைகள் பள்ளிகளில் பயன்படுத்தும் நோட்டு புத்தகம் , ஜாமென்ட்ரி பாக்ஸ், பேனா, பென்சில் உள்ளிட்டவற்றின் விலையும் கணிசமாக குறையும். டிவி ,ஏசி, பிரிட்ஜ் ,வாஷிங் மெஷின் ,ஆர்ஓ, கட்டுமான துறையில் பயன்படுத்தக்கூடிய ரெடி டு மிக்ஸ் கான்கிரீட் , சிமெண்ட் உள்ளிட்டவை 18 சதவீத ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரப்படும். இதன் மூலம் அவற்றின் விலையும் குறையும்.
வாகனங்களின் விலை குறையுமா?: சிறிய அளவிலான கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரி விகிதமும் 28%இல் இருந்து 18%க்குள் வரப்போகிறது. எனவே இவற்றின் விலையும் கணிசமான அளவு குறையும். அதேபோல காப்பீடு திட்டங்களுக்கு தற்போது பிரீமியம் தொகைக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டியும் குறைக்கப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
என்னென்ன விலை உயரும் : அதே வேளையில் மதுபானங்கள் ,புகையிலை பொருட்கள் , சூதாட்டம் உள்ளிட்டவற்றுக்கான வரி 40 சதவீதமாக இருக்கும் என்பதால் அவற்றின் விலை அதிகரிக்கும். பெட்ரோலியம் வெளியிட பொருட்கள் ஜிஎஸ்டி வரி வரம்புகள் கொண்டுவரப்படவில்லை எனவே அதன் விலையில் எந்த மாற்றமும் இருக்காது.


Click it and Unblock the Notifications