2023 மார்ச் 31ஆம் தேதியுடன் நடப்பு நிதியாண்டு முடிவடைய உள்ளது. ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் துவங்க உள்ள புதிய நிதியாண்டில் வருமான வரி சார்ந்த பல்வேறு மாற்றங்கள் வருகிறது.
இந்த மாற்றத்தின் மூலம் அனைத்து தரப்பினரும், தங்களுடைய முதலீடுகளை மறுசீரமைப்பு செய்ய வேண்டும். அதிலும் குறிப்பாக வரியை குறைக்கும் திட்டமிடும் அனைவரும் இந்த மாற்றங்களை முழுமையாக தெரிந்துக்கொள்ள வேண்டும்.
சம்பளதாரர்களுக்கு டிடிஎஸ் மாற்றம்!
மாத சம்பளதாரர்களுக்கு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் புதிய வருமான வரி முறையில் டிடிஎஸ் (TDS) குறைக்கப்படலாம். அதாவது ஆண்டுக்கு 7 லட்சம் ரூபாய்க்குள் வருமானம் ஈட்டி, புதிய வருமான வரி முறையை தேர்வு செய்திருந்தால், டிடிஎஸ் வரி பிடித்தம் செய்யப்படாது.
அதுமட்டுமின்றி ஆண்டு வருமானம் ரூ.5 கோடிக்கு மேல் உள்ள தனிநபர்களுக்கு, புதிய வரி விதிப்பின் கீழ் பொருந்தக்கூடிய கூடுதல் கட்டணமான 37 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாகக் குறைக்கப்படலாம்.
முன்னதாக இருந்த 6 வரி அடுக்குகளை 5 ஆக குறைக்கப்பட்டுள்ளன. பழைய வருமான வரி விதிப்படி ரூ. 3 லட்சம் வரை வருமானம் இருந்தால் வரி தேவையில்லை.
ஆனால் இனி தனிநபர் ஈட்டும் வருமானம் ரூ.3 முதல் 6 லட்சம் வரை எனில் 5% வரி, ரூ.6 முதல் 9 லட்சம் வரை 10%, ரூ.9 லட்சத்தில் இருந்து 12 லட்சம் வரை 15%, ரூ.12 லட்சத்தில் இருந்து 15 லட்சம் வரை 20%, ரூ.15 -க்கு மேல் 30% வரை வரி செலுத்த வேண்டும். இந்த புதிய விதிகள் புதிய நிதியாண்டான ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
தங்கம் மீதான வரிகள்!
ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நிஜத் தங்கத்தை மின்னணு தங்க ரசீதுகளாக (Electronic Gold Receipt) மாற்றிக்கொள்வதற்கும், மின்னணு தங்க ரசீதை நிஜத் தங்கமாக மாற்றிக்கொள்வதற்கும் மூலதன ஆதாய வரி (Capital gains tax) விதிக்கப்படாது.
NOR - பரிசுக்கு வரி!
இந்தியாவில் உள்ள RNOR (resident but not ordinarily resident) ஆக இருப்பவர்கள் பரிசுத்தொகையாக ரூ.50,000 மேல் பெற்றால் அதற்கு வரி விதிக்கப்படும்.
வருமான வரிச் சட்டம், 1961 இன் படி, தனிநபர் ஒருவர் சென்ற ஆண்டிற்கு முந்தைய 10 ஆண்டுகளில், 9 ஆண்டுகள் இந்தியாவில் வசிக்காதவராக இருந்தாலோ அல்லது ஏழு நாட்கள் முதல் 729 நாட்கள் அல்லது அதற்கும் குறைவாக இந்தியாவில் இருந்தாலோ அவர் NOR ஆக கருதப்படுவார்.
ஆன்லைன் விளையாட்டுகள்
ஏப்ரல் 1 முதல் ஆன்லைன் ரம்மி போன்ற ஆன்லைன் விளையாட்டுகளில் இருந்து கிடைக்கும் வெற்றித் தொகைக்கு வருமான வரிச் சட்டத்தின் புதிய 115BBJ பிரிவின் படி 30% வரி விதிக்கப்படும். வெற்றித் தொகையில் இருந்து நேரடியாகவே 30% வரி பிடித்தம் செய்யப்படும்.
மூலதன ஆதாயங்களுக்கு வரி விலக்கு!
வரபோகும் ஏப்ரல் 1 முதல், ITA பிரிவு 54 மற்றும் 54F விதிகளின் கீழ் ரூ.10 கோடி வரையிலான ஆதாயங்களுக்கு மட்டுமே வரி விலக்கு அளிக்கப்படும். மீதமுள்ள மூலதன ஆதாயங்கள், அதாவது ரூ.10 கோடிக்கு மேல் சென்றால் 20 சதவீதம் பிளாட் விகிதத்தில் வரி விதிக்கப்படும்.
கடன் பத்திரம் மூலதன ஆதாயங்கள்!
சந்தையுடன் இணைக்கப்பட்ட கடன் பத்திரங்கள் (Market-linked debentures - MLD) மூலம் ஈட்டப்படும் வருமானத்திற்கு 10 -15 சதவீதம் வரி விதிக்கப்படும்.


Click it and Unblock the Notifications