மகாராஷ்டிராவில் பிரபலமான கூட்டுறவு வங்கிகளில் ஒன்று நியூ இந்தியா கூட்டுறவு வங்கி. இந்த வங்கிக்கு மொத்தம் 28 கிளைகள் உள்ளன. இதில் பெரும்பான்மையானவை மும்பை பகுதியில் அமைந்துள்ளன. புனேவில் ஒரு கிளையும், குஜராத் மாநிலம் சூரத்தில் 2 கிளைகளும் உள்ளன.
இந்த வங்கியின் கணக்குகளை தணிக்கை செய்தபோது, வங்கியின் பிரபாதேவி மற்றும் கோரேகான் கிளைகளில் மொத்தம் ரூ.122 கோடிக்கு மோசடி நடந்திருப்பது தெரியவந்தது. இது தொடர்பான விசாரணையில், இந்த மோசடியின் பின்னணியில், அந்த வங்கியின் பொதுமேலாளரும், கணக்கு பிரிவு தலைவருமான ஜிதேஷ் மேத்தா இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து, மும்பையில் தாதர் காவல் நிலையத்தில், நியூ இந்தியா கூட்டுறவு வங்கியில் ரூ.122 கோடி மோசடி செய்ததாக அந்த வங்கியின் பொது மேலாளர் மற்றும் கணக்கு பிரிவு தலைவரான ஹிதேஷ் மேத்தா மீது நியூ இந்தியா கூட்டுறவு வங்கியின் செயல் தலைமை நிர்வாக அதிகாரி தேவர்ஷி கோஷ் புகார் அளித்தார்.
அந்த புகாரில், மேத்தாவும் அவரது கூட்டாளிகளும் சேர்ந்து சதித்திட்டம் தீட்டி, பிரபாதேவி மற்றும் கோரேகான் வங்கி அலுவலகங்களின் பெட்டகங்களில் இருந்து ரூ.122 கோடியை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.
இந்த புகாரின் பேரில், கடந்த சனிக்கிழமையன்று ஹிதேஷ் மேத்தாவை மும்பை போலீசார் கைது செய்தனர். சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக அவரிடம் விசாரணை நடத்திய பிறகு, மும்பை காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (இஓடபுள்யூ) மேத்தாவை கைது செய்தது.
விசாரணையின் போது, கோவிட்19 தொற்றுநோய் பரவிய தொடங்கிய காலத்திலேயே இந்த நிதி முறைகேடு தொடங்கியது தெரியவந்தது. பிரபாதேவி கிளையின் பெட்டகத்திலிருந்து ரூ.112 கோடியும், கோரேகான் கிளையின் பெட்டகத்திலிருந்து ரூ.10 கோடியும் மோசடி செய்தது தெரியவந்தது.
ஹிதேஷ் மேத்தா கைது செய்யப்படுவதற்கு ஓரு நாள் முன்புதான் (வெள்ளிக்கிழமையன்று) இந்திய ரிசர்வ் வங்கி, நியூ இந்தியா கூட்டுறவு வங்கியின் இயக்குனர்கள் குழுவை ஒரு வருடத்திற்கு மாற்றியமைத்தது. மேலும் அதன் விவகாரங்களை நிர்வகிக்க ஒரு நிர்வாகியையும் நியமித்தது. கடந்த வியாழக்கிழமையன்று, வங்கியின் டெபாசிட்தாரர்களின் நலனை பாதுகாக்க மற்றும் குளறுபடிகளை சரிசெய்யும் நோக்கில், டெபாசிட்தாரர்கள் பணத்தை திரும்ப பெறுவது உள்பட பல கட்டுப்பாடுகளை இந்த வங்கிக்கு ரிசர்வ் வங்கி விதித்தது.
நியூ இந்தியா கூட்டுறவு வங்கிக்கு எதிரான ரிசர்வ் வங்கியின் இந்த அதிரடி நடவடிக்கைகள், அந்த வங்கி வாடிக்கையாளர்களுக்கு மத்தியில் பீதியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் அந்த வங்கியின் கிளைகளில் தங்கள் சேமிப்புகளை திரும்ப பெறுவதற்காக குவிந்தனர்.
Story written by: Subramanian


Click it and Unblock the Notifications