கடந்த சில ஆண்டுகளாக ஆன்லைனில் பண பரிமாற்றம் செய்வது பொதுமக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது என்பது தெரிந்ததே.
வங்கிகளில் மணிக்கணக்கில் காத்திருந்து பணம் எடுப்பது அல்லது பணம் செலுத்துவதற்கு பதிலாக டிஜிட்டல் முறையில் பண பரிமாற்றம் செய்வதை மக்கள் விரும்புகின்றனர்.
எந்த அளவுக்கு டிஜிட்டல் முறையில் மிக எளிதாக, வசதியாக இருக்கிறதோ அந்த அளவுக்கு மோசடி நடக்கிறது என்பது அதிர்ச்சிக்குரிய தகவல் ஆக உள்ளது.
வங்கி மோசடிகள்
வங்கிகள் ஏற்கனவே தங்களது வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் மூலம் பண பரிமாற்றம் செய்யும் போது என்னென்ன மோசடி நடைபெறும் என்பதை என்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில் ஐசிஐசிஐ வங்கி தங்கள் வாடிக்கையாளர்கள் தற்போது நூதன முறையில் நடந்து வரும் மோசடி குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
சமூக வலைத்தளங்கள்
முதல் கட்டமாக வங்கி வாடிக்கையாளர்களின் சமூக வலைதளங்களை ஹேக் செய்யும் மோசடியாளர்கள் தங்கள் நண்பர் மற்றும் உறவினர்கள் கேட்பதுபோல் சமூக வலைதளங்கள் மூலம் பணம் கேட்கின்றனர். நமக்கு தெரிந்த ஒருவர் தான் பணம் கேட்கிறார் என்று சமூக வலைத்தளத்தில் தோன்றும் மெசேஜ்ஜை வைத்து உடனடியாக சிலர் பணம் அனுப்பி விடுகின்றனர். ஆனால் அதன்பிறகு தான் அந்த சமூக வலை தளங்கள் ஹேக் செய்யப்பட்டு பண மோசடி செய்திருப்பது பலருக்கு தெரிய வந்துள்ளது.
ஐசிஐசிஐ அறிவுறுத்தல்
எனவே ஃபேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பணம் கேட்டால் உடனடியாக அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்களது பணத்தேவையை உறுதி செய்து கொண்டு அதன் பிறகு பணத்தை அனுப்புமாறு ஐசிஐசிஐ வங்கி தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
புகார்கள்
தற்போது ஐசிஐசிஐ வங்கியின் பல கிளைகளில் இதுபோன்ற புகார்கள் அதிகம் வந்துள்ளதை அடுத்து இந்த எச்சரிக்கையை வாடிக்கையாளர்களுக்கு ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாகம் அனுப்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பரிவர்த்தனை விவரங்கள்
மேலும் வாடிக்கையாளர்களின் பரிவர்த்தனை விவரங்கள், மொபைல் எண்கள், முகவரிகள், டெபிட் கார்டு எண்கள், கிரெடிட் கார்டு எண்கள், சிவிவி எண்கள், பிறந்த தேதிகள், தாய் தந்தையின் பெயர்கள், பாஸ்போர்ட் எண்கள் ஆகியவற்றை வங்கிகள் ஒருபோதும் கேட்காது என்றும் இவற்றைக் கேட்டு வரும் மெசேஜ்கள் மற்றும் இமெயில்களை உடனடியாக டெலிட் செய்ய வேண்டும் என்றும் ஐசிஐசிஐ வங்கி தங்களது வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துள்ளது.
தொழில்நுட்பம்
மேலும் மோசடி செய்பவர்கள் மின்னஞ்சல் ஃபிஷிங், குரல் ஃபிஷிங் மற்றும் எஸ்எம்எஸ் ஃபிஷிங் ஆகியவற்றையும் பயன்படுத்துகின்றனர் என்றும், ஆன்லைன் வங்கியின் பயனர்களை ஏமாற்றுவதற்கு அதிநவீன சமூக பொறியியல் நுட்பங்களையும் தொழில்நுட்பத்தையும் உருவாக்கியுள்ளனர் உள்ளனர் என்றும் வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விழிப்புணர்வு
இதுபோன்ற மோசடிகள் மூலம் பணத்தை இழந்தால் மீண்டும் பெறுவது மிக கடினம் என்பதால் மோசடி நடைபெறுவதற்கு முன் வாடிக்கையாளர்கள் தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications