2026-ஆம் ஆண்டு முடிவதற்கு இன்னும் ஒரு மாதமே இருக்கிறது. இந்நிலையில் வருகின்ற டிசம்பர் மாதத்தில் இருந்து சில முக்கியமான மாற்றங்கள் வரவுள்ளன. நுகர்வோர், கடன் பெற்றவர்கள், முதலீட்டாளர்கள், ஓய்வூதியதாரர்கள் என பலரும் வரவிருக்கும் மாற்றங்கள் குறித்து தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம்.
எஸ்பிஐ கிரெடிட் கார்டு பரிவர்த்தனைக்கு 1 சதவீத கட்டணம்: டிசம்பர் 1-ஆம் தேதி முதல் எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயன்படுத்தி வரும் பயனர்கள் போக்குவரத்து மற்றும் எரிபொருள் பரிவர்த்தனைக்கு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். அக்டோபர் 27-ஆம் தேதி அன்று எஸ்பிஐ கார்டு வெளியிட்ட அறிவிப்பின்படி ரூ. 30,000-த்திற்கும் மேல் செய்யப்படும் போக்குவரத்து தொடர்பான பரிவர்த்தனைகளுக்கு 1 சதவீதம் வரை கட்டணம் விதிக்கப்படும்.

அதேபோல ஒரு பில்லிங் சைக்கிளில் SBI கிரெடிட் கார்டு மூலம் செய்யப்படும் எரிபொருள் தொடர்பான பரிவர்த்தனை ரூ.50,000-த்தை தாண்டினால் அதற்கும் 1 சதவீத கட்டணம் மற்றும் வரிவிதிப்பு இருக்கும். உதாரணமாக ஒரு நபர் எரிபொருள் நிரப்ப ரூ. 60,000 வரை செலவு செய்தால் 600 ரூபாய் கூடுதல் கட்டணமாக விதிக்கப்படும்.
ஆதாரில் ஈ-மெயில் முகவரியை இலவசமாக புதுப்பிக்க டிசம்பர் 31 கடைசி நாள்: ஆதார் வைத்திருப்பவர்கள் ஆதார் மொபைல் ஆப் மூலம் தங்களுடைய ஈமெயில் முகவரியை வருகின்ற டிசம்பர் 31-ம் தேதி வரை இலவசமாக அப்டேட் செய்து கொள்ளலாம். இந்தியத் தனித்துவ அடையாள அணையம் கடந்த ஜூன் மாதம் இந்த அறிவிப்பை வெளியிட்டது. இதற்கு ஏற்கனவே 75 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால் ஜூலை 1-ஆம் தேதி முதல் தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு இந்த கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்தச் சலுகை ஆதார் மொபைல் ஆப் வழியாக ஈ-மெயில் முகவரியை அப்டேட் செய்யும் நபர்களுக்கு மட்டுமே பொருந்தும். அனைத்து ஆதார் திருத்தங்களுக்கும் பொருந்தாது.
ஓய்வூதியதாரர்களுக்கு லைஃப் செர்டிபிகேட்டை சமர்ப்பிக்க நவம்பர் 30 கடைசி தேதி: மத்திய அரசு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் ஓய்வூதியதாரர்கள் தங்களுடைய பென்ஷன் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வதற்காக லைஃப் சர்டிபிகேட்டை நவம்பர் 30-க்குள் சமர்ப்பிக்க வேண்டும். இதை செய்யாத நபர்களுக்கு டிசம்பர் மாதத்தில் ஓய்வூதியம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும் வாய்ப்புள்ளது. இது டிசம்பர் 1-ஆம் தேதி முதல் வரும் புதிய விதி அல்ல. ஏற்கனவே நடைமுறையில் உள்ள விஷயம் தான். வருடத்திற்கு ஒருமுறை பென்ஷன் பெறுபவர்கள் இதை செய்ய வேண்டும்.
ஆர்பிஐ-யின் கொள்கை கூட்டம்: இந்திய ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கை குழு கூட்டம் டிசம்பர் 2 முதல் டிசம்பர் 4 வரை கூட உள்ளது. இதில் வட்டி விகிதங்கள் குறித்து முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும். இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் ரெப்போ வட்டி விகிதத்தின் அடிப்படையில் தான் ஹோம் லோன், கார் லோன் மற்றும் பர்சனல் லோன் வாங்கியவர்களுக்கு மாதாந்திர வட்டி குறைகிறதா? அல்லது கூடுகிறதா? என்பது தெரிய வரும்.
வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான கேஒய்சி செயல்முறை: 2026-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14-ஆம் தேதி அன்று செபி சில தளர்வுகளை அறிவித்தது. அதன் படி வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்திய வம்சாவளியினர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கேஒய்சி ஆவணங்களை நேரடியாக சமர்ப்பிப்பதற்கு இந்தியா வராமலேயே டிஜிட்டல் முறையில் முடிக்க முடியும். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எளிதாக கேஒய்சி செயல்முறையை முடிக்க வேண்டும் என்பதற்காக இந்த புதிய வசதி வருகின்ற டிசம்பர் 3-ஆம் தேதி முதல் கொண்டுவரப்படுகிறது.


Click it and Unblock the Notifications
