ஒவ்வொரு மாதம் பிறக்கும் போதும் ஒரு சில முக்கிய விதிகள் அமலுக்கு வரும். அதன்படி 2025-ஆம் ஆண்டின் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள குடிமக்களை பாதிக்கும் வகையில் பல்வேறு மாற்றங்கள் நடைமுறைக்கு வரவுள்ளது. வரி அடுக்குகளில் ஏற்படும் மாற்றங்கள் முதல் யுபிஐ கட்டண முறைகளில் ஏற்படும் மாற்றங்கள் வரை அனைத்தையும் இந்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம்.
புதிய வரி ஸ்லாப்-கள்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த போது புதிய வரி அடுக்குகள் மற்றும் விகிதங்களை அறிவித்தார். இந்த திருத்தப்பட்ட வரி விகிதங்கள் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. ஆண்டுதோறும் ரூ. 12 லட்சம் வரை வருமானம் ஈட்டும் தனிநபர்கள் புதிய வரி அமைப்பின் கீழ் வரி விலக்கு பெற தகுதியுடையவர்கள்.

புதிய வருமான வரி விகிதங்கள்:
0 முதல் ரூ.4 லட்சம் வரை - வரி இல்லை
ரூ.4 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை - 5 சதவீதம்
ரூ.8 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை - 10 சதவீதம்
ரூ.12 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரை - 15 சதவீதம்
ரூ.16 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை - 20 சதவீதம்
ரூ.20 லட்சம் முதல் ரூ.24 லட்சம் வரை - 25 சதவீதம்
ரூ.24 லட்சத்திற்கும் மேல் - 30 சதவீதம்
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்: மத்திய அரசு யூனிஃபைட் பென்ஷன் ஸ்கீமை 2024-ஆம் ஆண்டு தொடங்கியது. ஆனால் ஏப்ரல் 1-ஆம் தேதி தான் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நாளை முதல் இந்த ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வரவுள்ளது. இந்த ஓய்வூதிய திட்டம் சுமார் 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் சேவை செய்தவர்கள் ஓய்வுக்கு பின்னர் நிதி பாதுகாப்பை உறுதி செய்ய கடைசி 12 மாத அடிப்படை சம்பளத்தில் 50 சதவீதத்திற்கும் சமமான ஓய்வூதியத்தை பெற தகுதியுடையவர்கள்.
யூபிஐ: மோசடிகள் அதிகரித்து வருவதால் அதைத் தடுக்கும் பொருட்டு இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் புதிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. அதன்படி போன் பே, கூகுள் பே போன்ற எந்த ஒரு அப்ளிகேஷனை பயன்படுத்தினாலும், அதற்கு செயலில் உள்ள நம்பரை பயன்படுத்தி தான் ரெஜிஸ்டர் செய்ய வேண்டும்.
அப்படி யூபிஐ உடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பர் செயலற்றதாக இருந்தால் அவர்களின் யூபிஐ கணக்குகள் செயலிழக்கப்படும். உங்கள் மொபைல் நம்பர் நீண்ட காலமாக செயலற்றதாகவோ அல்லது பயன்படுத்தப்படாமலோ இருந்தால் யுபிஐ கட்டணங்களை செலுத்த முடியாது. இந்த புதிய விதி ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வர உள்ளது.
GST: இந்தப் புதிய நிதியாண்டு முதல் ஜிஎஸ்டி செலுத்துவதிலும் சில மாற்றங்கள் வரவுள்ளது. ஜிஎஸ்டி போர்ட்டலில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மல்டி ஃபாக்டர் ஆத்தெண்ட்டிகேஷன் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கூடுதலாக 180 நாட்களுக்கும் மேல் பழமையான அடிப்படை அட்டவணைகளுக்கு மட்டுமே ஈ-வே பில் உருவாக்க முடியும். ஜிஎஸ்டிஆர் 7 தாக்கல் செய்தால் எந்த ஒரு மாதத்தையும் தவிர்க்கவோ அல்லது செயலிழந்த மாதங்களுக்கு தாக்கல் செய்யவோ முடியாது.


Click it and Unblock the Notifications