இந்தியா முழுக்க டோல் பிளாசாக்கள் நவீனமயமாக்கப்பட்டு வரும் வேளையில், பல முறைகளில் ஏமாற்று வேலைகளும் நடந்து வருகிறது. இந்த மோசடிகளைத் தவிர்க்க நிதின் கட்கரி தலைமையிலான தேசிய நெடுஞ்சாலை துறை ஏஐ தொழில்நுட்ப உதவியுடன் கடுமையான அபராதம் விதிக்க தயாராகி வருகிறது.
மத்திய நெடுஞ்சாலை துறை டோல் பிளாசாவில் காத்திருப்பு நேரத்தையும், எரிபொருள் செலவுகளையும் குறைக்கத் தடையற்ற சுங்கச்சாவடி முறையைச் செயல்படுத்தி வருகிறது.

பொதுவாக நாம் காரில் செல்லும் போது டோல்களில் காத்திருந்து பாஸ்டேக் மூலம் பணத்தை செலுத்தி விட்டு செல்வோம். ஆனால் இந்த தடையற்ற சுங்கச்சாவடி அதாவது barrierless toll plaza-வில் எவ்விதமான வாகன நிறுத்தமும் இல்லாமல் எலக்ட்ரானிக் முறையில் கட்டணத்தை வசூலிக்கும் Multi-Lane Free Flow தொழில்நுட்பம் மூலம் இயங்கும்.
இந்த புதிய தொழில்நுட்பத்தில் இயங்கும் டோல் பிளாசாக்களில் வாகனங்கள் 80 கிலோமீட்டர் வேகத்தில் வந்தாலும் சரியாக டிராக் செய்து டோல் கட்டணத்தை பாஸ்ட்டேக் வாயிலாக வசூலிக்கும்.
பல வாகன ஓட்டிகள் டோல் கட்டணத்தைச் செலுத்துவதைத் தவிர்க்க நம்பர் பிளேட்டை மறைப்பது, மாற்றுவது அல்லது நம்பர் பிளேட்டை சேதப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய பணிகளில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு இனி அதிக அபராதம் விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அதாவது முழுமையான நம்பர் பிளேட் இல்லாத வாகனங்கள், வழக்கமான செலுத்தும் டோல் கட்டணத்தை காட்டிலும் 4 முதல் 8 மடங்கு வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் விதிமுறையைச் செயல்படுத்த மத்திய நெடுஞ்சாலை துறை திட்டமிட்டு வருகிறது.
பொதுவாக இந்திய மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, நம்பர் பிளேட்டை சேதப்படுத்துவது அல்லது மாற்றுவது போன்ற குற்றங்களுக்காக 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும், இதே தவறை அடுத்த முறை செய்தால் 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
இந்த வரிசையில் புதிதாக டோல் அபராதம் வர உள்ளது. மேலும் 4-8 மடங்கு அதிக அபராத தொகையை விதிக்கும் முன்பு டோல் பிளாசாக்களில் எடுக்கப்படும் வாகனப் புகைப்படங்கள் மற்றும் விவரங்களை செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் ஆய்வு செய்து அதன்பின்பு அபராதம் விதிக்கப்பட உள்ளது.
இந்த புதிய டோல் கட்டண அபராதம் என்பது தடையற்ற சுங்கச்சாவடிகளில் மட்டுமே, மற்ற டோல் பிளாசக்களில் இல்லை. இந்தியாவில் மொத்தம் 9 இடத்தில் தடையற்ற சுங்கச்சாவடி இயங்கி வருகிறது. இதில் 3 தமிழ்நாட்டில் இயங்கி வருகிறது.
அக்டோபர் 1ஆம் தேதி முதல் பரனூர், நவம்பர் 12 முதல் ஸ்ரீபெரும்புதூர் நெமிலி, நவம்பர் 21 ஆம் தேதி முதல் வாலாஜாவில் சென்னசமுத்திரம் ஆகிய இடங்களில் நடைமுறையில் உள்ளது. எனவே இவ்வழித்தடத்தில் செல்லும் போது ஒரு முறைக்கு இரு முறை உங்களுடைய நம்பர் பிளேட் சரியாக உள்ளதா என்பதை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications
