சென்னை-பெங்களூரு இரு மாநிலங்களின் தலைநகரை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எப்போதும் வாகன போக்குவரத்தால் பரபரப்பாக இருக்கும். இந்த சாலையில் தினமும் 75 ஆயிரத்துக்கும் அதிகமான வாகனங்கள் பயணிப்பதாக ஆய்வுகள் கூறுகிறது.
சென்னை-பெங்களூரு இடையில் நகர பகுதிக்குள் தேசிய நெடுஞ்சாலை செல்லும் ஒரே நகரம் ஆம்பூர் மட்டுமே. இதனால் எப்போதும் அந்நகர பகுதியில் அதிகப்படியான போக்குவரத்து நெரிசல் காணப்படும். இதனால் பயண நேரம் அதிகரிக்கிறது. மேலும், ஆம்பூரில் அதிக எண்ணிக்கையில் சாலை விபத்துக்கள் நடந்து உயிரிழப்புகளும் நடப்பது தொடர் கதையாக இருந்து வந்தது.

இதனையடுத்து, தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், விபத்துக்கள் நடப்பதை தவிர்க்கவும், சாலை விரிவாக்கம் மற்றும் உயர்மட்ட மேம்பாலம் கட்ட வேண்டும் என்று அந்நகர மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதன் படி ரூ.130 கோடி செலவில் ஆம்பூரில் 6 வழிச்சாலை உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பாக தனியார் உள்கட்டமைப்பு நிறுவனம் 1.5 கி.மீ. நீளமுள்ள உயர்த்தப்பட்ட மேம்பால கட்டுமான பணிகளை மேற்கொண்டு வந்தது.
ஆம்பூர் நகர மக்கள் அதிகம் எதிர்பார்த்த இந்த மேம்பால பணிகள் அண்மையில் நிறைவடைந்தது. இதனையடுத்து கடந்த 2ம் தேதியன்று ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலை 6 வழிச்சாலை மேம்பாலம் திறக்கப்பட்டது. நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட மேம்பாலம் திறக்கப்பட்டதால் இனி ஆம்பூர் நகரத்தில் போக்குவரத்து நெரிசல் பெருமளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து வாகனங்களும் இனி மேம்பாலம் வழியாக சென்னை மற்றும் பெங்களூரு செல்லும் வசதி ஏற்பட்டுள்ளது.
புதிய உயர்த்தப்பட்ட மேம்பாலம் பயன்பாட்டுக்கு வந்துள்ளதால் வாகனங்களின் பயண நேரம் சிறிது குறையும். ஆம்பூர் அருகே வெங்கிலி, கிரிசமுத்திரம் மற்றும் மின்னூர் கிராமங்களில் குடியிருப்பாளர்கள் பாதுகாப்பாக சாலையை கடக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தலா மூன்று வாகன சுரங்கபாதைகளை அமைத்துள்ளது. ஒவ்வொரு சுரங்கப்பாதையும் 12 மீட்டர் அகலமும், 5.5 மீட்டர் உயரமும் கொண்டது. எனவே பஸ்கள் மற்றும் லாரிகள் அதைப் பயன்படுத்த போதுமானது.
நெடுஞ்சாலையை பராமரிக்கும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், நெடுஞ்சாலையின் சார்பாக தனியார் நிறுவனத்தால் கட்டப்பட்ட 1.5 கி.மீ நீளமுள்ள இந்த உயர்த்தப்பட்ட மேம்பாலம், உள்ளூர் மற்றும் நீண்ட தூர பயணிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும். ஏனெனில் இந்த மேம்பாலம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்தை தொந்தரவு செய்யாமல் உள்ளூர் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த உதவுகிறது என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications