மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடாரின் தலைநகர் சான் சால்வடாரில் இந்த ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி (மிஸ் யூனிவெர்ஸ்) போட்டி நடைபெற்றது. உலகம் முழுவதிலும் இருந்து 84 நாடுகளை சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியின் முதல் 20 போட்டியாளர்களில் ஒருவராக இந்தியாவின் சுவேதா ஷர்தாவும் இருந்தார்.
இந்த போட்டியில் நிகராகுவா நாட்டை சேர்ந்த ஷெய்னிஸ் பலாசியோஸ் பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டார். தாய்லாந்தின் அன்டோனியா பார்சில்ட் இரண்டாவது இடத்தையும், ஆஸ்திரேலியாவின் மொரயா வில்சன் மூன்றாவது இடத்தையும் பெற்றனர்.

மிஸ் யூனிவெர்ஸ் போட்டியில் ஷெய்னிஸ் பலாசியோஸ் மகுடம் சூட்டியதன் மூலம் அவர் மட்டுமல்ல அவரது நாடும் ஒரே இரவில் பிரபலமாகி விட்டது. கடந்த சனிக்கிழமை வரை நிகராகுவா என்றவொரு நாடு இருப்பதையே பலரும் அறிந்திருக்க மாட்டார்கள்.
ஷெய்னிஸ் பலாசியோஸ் மிஸ் யூனிவெர்ஸ் பட்டம் வென்றதன் மூலம், அவரோடு நிகராகுவா நாடும் உலகின் மூலை முடுக்கெல்லாம் தெரிந்து விட்டது. இந்த நாட்டின் பொருளாதாரம், தொழில் உள்பட இதுவரை பலரும் அறிந்திராத விஷயங்களை பார்ப்போம்.
லத்தீன் அமெரிக்காவில் உள்ள ஏழ்மையான நாடுகளில் ஒன்று நிகராகுவா. இந்நாட்டை நெருப்பு மற்றும் நீரின் நாடு என்று அழைப்பர். இங்கு ஏராளமான எரிமலைகள், ஏரிகள் மற்றும் இரண்டு கடற்கரைகள் அமைந்துள்ளதே இதற்கு காரணம். அந்நாட்டின் பசிபிக் பகுதியில் 19 செயலில் மற்றும் அழிந்துபோன எரிமலைகள் உள்ளன. நிகராகுவா நாட்டின் அதிகாரப்பூர்வ மொழி ஸ்பானிஷ். அந்நாட்டில் பெரும்பாலான மக்கள் அந்த மொழியை பேசுகிறார்கள்.
இந்நாட்டின் முக்கிய பொருளாதார ஆதாரமே விவசாயம் தான். இந்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 64.5 சதவீதம் பேர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் அந்நாடு உணவு பற்றாக்குறையால் அவதிப்படுகிறது. அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்களிப்பு 8.1 சதவீதம் மட்டுமே. நிகராகுவா மக்களில் பெரும் பகுதியினர் குறைந்த வருமானம் கொண்டவர்கள், பெரும்பகுதியினர் வறுமையில் வாடுகின்றனர்.
அதிக வேலையின்மை விகிதம் மற்றும் வெளிநாட்டு கடனால் பாதிக்கப்படுகிறது. 1990களில் இருந்து சுற்றுலா வாயிலாக வருமானம் அதிகரித்துள்ள போதிலும், வெளிநாட்டில் வேலைபார்க்கும் நிகராகுவா மக்கள் அனுப்பும் பணம் மற்றும் வெளிநாட்டு உதவி ஆகியவை தான் இந்த நாட்டின் முக்கிய வெளிநாட்டு வருமான ஆதாரங்களாகும்.
1961ல் தொடங்கப்பட்ட அந்நாட்டின் ரிசர்வ் வங்கியான சென்ட்ரல் பேங்க் ஆஃப் நிகராகுவா, அந்நாட்டின் நாணயமான கார்டோபாவை வெளியிடுவதற்கான முழு உரிமையும் கொண்டுள்ளது. அந்நாட்டின் நிதி துறையில், அரசுக்கு சொந்தமான பைனான்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் நிகராகுவா ஆதிக்கம் செலுத்துகிறது. 21ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சில தனியார் வங்கிகளும், குறுநிதி நிறுவனங்கள் தொடங்கப்பட்டன.
நிகராகுவா நாடு காபி, மாட்டிறைச்சி, தங்கம், சர்க்கரை, வேர்க்கடலை, இறால், புகையிலை, சுருட்டுகள், ஆட்டோமொபைல் வயரிங் சேணம், ஜவுளி உள்ளிட்டவை ஏற்றுமதி செய்கிறது. அந்நாட்டின் முக்கிய ஏற்றுமதி சந்தையாக அமெரிக்கா உள்ளது. நுகர்வோர் பொருட்கள், எந்திரங்கள் மற்றும் உபகரணங்கள், மூலப்பொருட்கள், பெட்ரோலிய பொருட்களை அந்நாடு அதிகளவில் இறக்குமதி செய்கிறது. இறக்குமதிக்கு அமெரிக்கா மற்றும் சீனாவை அதிகளவில் நம்பி உள்ளது.
நிகராகுவா அரசாங்கம் நிறுவன வரி மற்றும் தனிநபர் வருமான வரி, வாட் மற்றும் மூலதன ஆதாய வரி ஆகியவற்றின வாயிலாக பெருமளவு வருமானத்தை ஈட்டுகிறது. சர்வதேச அளவில் பொருளாதார தரவரிசை பட்டியலில் 128வது இடத்தில் உள்ளது. அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு ரூ.1.44 லட்சம் கோடி. இது நம்ம ஊரு மெகா கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பை (சுமார் ரூ.8 லட்சம் கோடி) காட்டிலும் பல மடங்கு குறைவு.


Click it and Unblock the Notifications