இந்திய பங்குச்சந்தை வாரத்தின் கடைசி நாள் வர்த்தகத்தில் தடுமாற்றத்தை கண்டாலும் உயர்வுடன் முடிந்தது. இன்றைய வர்த்தகத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஐடி பங்குகள் தடாவடியாக உயர்ந்து என்வீடியாவின் அதிகளவிலான வளர்ச்சியின் தாக்கத்தை இந்திய சந்தையில் உறுதி செய்தது.
இன்றைய வர்த்தகத்தில் டிசிஎஸ், ஹெச்சிஎல், இன்போசிஸ் போன்ற முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் அதிரடியாக உயர்ந்து நிஃப்டி ஐடி குறியீட்டை 3 சதவீதம் வரையில் உயர்த்தியது. இன்று ஐடி சேவை நிறுவனங்களின் பங்குகள் அதிரடியாக உயர மிக முக்கியமான காரணம் என்விடியாவின் அதிரடியான காலாண்டு முடிவுகளும், ஏஐ துறையின் மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது தான்.

என்விடியா வெளியிட்ட காலாண்டு முடிவில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 106 சதவீத வருடாந்திர வளர்ச்சியில் ஜூன் காலாண்டில் சுமார் 96.2 பில்லியன் டாலர் வருவாயை ஈட்டியுள்ளது. இதில் டேட்டா சென்டர் வர்த்தகத்தில் இருந்து மட்டுமே 89 பில்லியன் டாலர் தொகை வருமானமாக ஈட்டியுள்ளது.
இதே காலாண்டில் என்விடியா சுமார் 75 சதவீத லாப விகிதத்துடன் 68 பில்லியன் டாலர் லாபத்தை பதிவு செய்துள்ளது. மேலும் என்விடியா ஐடி சேவை பிரிவிலும் இறங்குவதற்காக Hugging Face என்ற ஓப்பன் சோர்ஸ் ஏஐ மாடல் நிறுவனத்தை முழுமையாக வாங்கவும், இதற்காக 12.9 பில்லியன் டாலர் தொகையை அளிக்கவும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் ஏஐ துறையின் மீதான நம்பிக்கை என்பது மீண்டும் பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
ஏற்கனவே ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு ஐடி சேவை துறை மிகவும் முக்கிய தூணாக இருக்கும் என சந்தை கணிப்புகள் இருந்தாலும், ஏஐ துறையில் முதலீடு குறைந்துள்ளது என்ற கருத்து இருந்து வந்தது.
இதனாலேயே இந்திய ஐடி நிறுவன பங்குகள் அனைத்தும் அதிகப்படியான தடுமாற்றத்தை எதிர்கொண்டதாக இருந்தது. இந்த நிலையில் ஏஐ துறையில் முதலீடுகள் தொடர்ந்து அதிகரிக்கும் என்பது என்விடியாவின் நடப்பு காலாண்டு வருவாய் 108 பில்லியன் டாலராக இருக்கும் எனவும் கணிப்பை வெளியிட்டு உள்ளது.
இதன் எதிரொலியாக இந்திய சந்தையில் இன்று எல்டிஐ மைண்டுட்ரீ 5 சதவீதமும், ஹெச்சிஎல் டெக், டிசிஎஸ் ஆகியவை தலா 4 சதவீதமும். கோபோர்ஜ், டெக் மஹிந்திரா, பெர்சிஸ்டென்ட் சிஸ்டம்ஸ், இன்போசிஸ், போன்றவை 3 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது. விப்ரோ, மெப்சிஸ் தலா 2 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது.
இந்திய ஐடி சேவை துறை பங்குகள் இந்த ஆண்டு முழுவதும் தொடர்ந்து அதிகப்படியான தடுமாற்றத்தை எதிர்கொண்டு வருகிறது, குறிப்பாக முதல் 6 மாதம் அதிகப்படியான விற்பனையை எதிர்கொண்டது.
ஆனால் தற்போது நிலைமை மாற்றி விற்பனையில் இருந்து ஹோல்டு என்ற நிலைக்கு வந்துள்ளது. இதேவேளையில் ஏஐ மூலம் இத்துறையில் பெரும் தாக்கம் எதிர்கொள்ள நேரிட்டாலும் அடுத்த சில வருடத்தில் இந்த தடுமாற்றத்தை சமாளித்து இயல்பு நிலைக்கு திரும்பும் என்ற கணிப்பு நிலவுகிறது.


Click it and Unblock the Notifications