இந்திய வர்த்தக சந்தையின் வளர்ச்சியை அளவிடும் குறியீடாக விளங்கும் ஜிஎஸ்டி வரி வசூல் தகவல்களை ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் அறிக்கையாக அதிகாரப்பூர்வமாக வெளியிடும் நடைமுறையை மத்திய நிதி அமைச்சகம் பல வருடங்களாகப் பின்பற்றி வந்தது.
இந்த நிலையில் ஜூன் மாத தரவுகள் மாலை வரையில் மத்திய நிதியமைக்கம் வெளியிடவில்லை, இந்த சூழ்நிலையில் இதுகுறித்து நிதியமைச்சகத்திடம் விசாரிக்கையில், மாதம் மாதம் ஜிஎஸ்டி வரி வசூல் அளவீட்டை வெளியிடும் வழக்கத்தை நிறுத்தி வைத்திருக்கலாம் எனத் தகவல் கிடைத்துள்ளது.

அதே நேரத்தில், ஜிஎஸ்டி வசூல் அளவீட்டை முன்பு வெளியிடுவது போல் விரிவான தகவல்களுடன் வெளியிடும் அறிக்கையின் வடிவத்தை மாற்றப்பட்டு, சுருக்கமான தகவல்களுடன் புதிய வடிவம் அறிமுகப்படுத்தப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜூன் மாதத்தில் நாட்டின் மொத்த ஜிஎஸ்டி வரி வசூல் 1.74 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, மே 2024ல் வசூலிக்கப்பட்ட 1.73 லட்சம் கோடி ரூபாயைக் காட்டிலும் அதிகமாகும். மேலும், ஜூன் 2023ல் வசூலிக்கப்பட்ட ரூ.1.61 லட்சம் கோடியுடன் ஒப்பிடுகையில் 8 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இதுவரையில் மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக வரி வசூல் அறிக்கையை இதுவரை வெளியிடப்படவில்லை.
ஜிஎஸ்டி வரி வசூல் வெளியிட்டில் "தெளிவு" வேண்டும் என்பதற்காக இந்த மாற்றத்தை நிதி அமைச்சகம் முன்வைக்கிறது. இதன் விளைவாக, மாதாந்திர ஜிஎஸ்டி வரி வசூல் குறித்த சுருக்கமான அறிக்கையை வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.

இந்தியாவின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியன் சமூக வலைத்தளங்களில் ஜிஎஸ்டி வரி அளவீடுகளை வெளியிடுவது குறித்து விமர்சனம் செய்திருந்தார். அர்விந்த் சுப்ரமணியன் கூறுகையில் மொத்த வரி வசூல் தகவல்களை வெளியிட்டு பெருமை பேசுவதை விட, திருப்பிச் செலுத்தப்படும் தொகையைக் கழித்த பின்னர் கிடைக்கும் வருவாயில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் நிதியமைச்சகம் உருவாக்கி வரும் புதிய மாற்றியமைக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி வடிவத்தில், மொத்த வரி வசூல், மத்திய ஜிஎஸ்டி மற்றும் மாநில ஜிஎஸ்டி வரி வசூல் ஆகிய முக்கிய தகவல்கள் மட்டுமே இடம்பெறக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், சுருக்கமான அறிக்கையை வெளியிடுவது குறித்து இறுதி முடிவு இதுவரை எடுக்கப்படவில்லை.


Click it and Unblock the Notifications