யெஸ் பேங்கில் என்ன ஆச்சு..? ஏன் இந்த 50,000 கட்டுப்பாடு? யெஸ் பேங்கில் வாரா கடன்கள் அதிகரித்துவிட்டது. மறு பக்கம் புதிதாக கடன் கொடுக்க போதுமான காசு இல்லை.
புதிதாக கடன் கொடுக்க பணத்தை திரட்டச் சொன்னது ஆர்பிஐ. ஆனால் குறித்த நேரத்தில் யெஸ் பேங்கால் பணத்தை திரட்ட முடியவில்லை.
நிறைய டெபாசிட் பணம் வேறு தொடர்ந்து வெளியேறிக் கொண்டு இருந்தது. அதனால் தான் 50,000 ரூபாய் மட்டுமே டெபாசிட்டர்கள் பணத்தை எடுக்கலாம் எனச் சொல்லி இருக்கிறது ஆர்பிஐ.
50,000 கட்டுப்பாடு
யெஸ் பேங்க் வாடிக்கையாளர்கள் 50,000 ரூபாய் மட்டுமே பணத்தை எடுக்க முடியும் என்கிற கட்டுப்பாடு வரும் ஏப்ரல் 03, 2020 வரை இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. சரி ஒருவேளை யெஸ் பேங்கில் சம்பளக் கணக்கு இருந்தால் என்ன செய்வீர்கள்..? என்ன செய்ய வேண்டும் என்பதைத் தான் இந்த கட்டுரையில் விரிவாகப் பார்க்க இருக்கிறோம்.
பத்திரிகையாளர் சந்திப்பு
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று பத்திரிகையாளர் சந்திப்பில், யெஸ் பேங்க் குறித்து பேசினார். அதில், கடந்த 2018-ம் ஆண்டு முதல் யெஸ் பேங்கைச் சுத்தப்படுத்தும் வேலை தொடங்கிவிட்டது. கடந்த செப்டம்பர் 2018-லேயே யெஸ் பேங்கின் தலைமையை மாற்றச் சொல்லி ஆர்பிஐ சொன்னதாகச் சொன்னார்.
பணம்
கடந்த செப்டம்பர் 2019-லேயே, யெஸ் பேங்கின் புரோமோட்டார்கள், தங்களின் பங்குகளை விற்று வெளியேறிவிட்டார்கள். அதன் பின் வங்கியை நடத்த பணம் தேவையாக இருந்தது. இந்த பணத்தை பெற பல முயற்சிகள் எடுக்கப்பட்டும் பலன் கொடுக்கவில்லை. கடந்த நவம்பர் 2019-ல் புதிய சி இ ஓ நியமிக்கப்பட்டார். அவர் ஆர்பிஐ உடன் தொடர்ந்து பணியாற்றினார். அப்போதே புதிதாக பணம் வருவது சிரமம் எனத் தெளிவாகத் தெரிந்தது.
மதிப்பீடு
யெஸ் பேங்கின் இந்த பிரச்சனைகளுக்கு என்ன காரணம், யாரால் என்ன மாதிரியான பிரச்சனைகள் வந்தது என்பதையும் மதிப்பீடு (Assessment) செய்ய மத்திய ரிசர்வ் வங்கிக்கு, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்லி இருக்கிறாராம். அதோடு மத்திய அரசு யெஸ் பேங்க் டெபாசிட்டர்களின் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்யும் எனவும் சொல்லி இருக்கிறார்.
மறு சீரமைப்பு
யெஸ் பேங்கின் டெபாசிட்டோ அல்லது கடன்களோ பாதிக்கப்படாது. புதிய இயக்குநர் குழு அமைக்கப்படும். குறிப்பிட்ட 30 நாளுக்குள், யெஸ் பேங்கில் மறு சீரமைப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும். எனவே டெபாசிட்டர்கள் பயப்பட வேண்டாம் எனச் சொல்லி இருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
யெஸ் பேங்க் ஊழியர்களுக்கு
இதுவரை சொன்னது எல்லாம் வங்கியில் பணம் போட்டவர்களுக்கு. ஆனால் யெஸ் பேங்க் ஊழியர்களுக்கு என்று ஒரு நல்ல விஷயத்தைச் சொல்லி இருக்கிறார். "ஒரு வருடத்துக்கு யெஸ் பேங்க் ஊழியர்களுக்கான வேலை மற்றும் சம்பளம் உறுதி செய்யப்படும்" எனச் சொல்லி இருக்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
எவ்வளவு பெரிய வங்கி
யெஸ் பேங்கை நம்பி பல லட்சக் கணக்கான வாடிக்கையாளர்கள் சுமாராக 2.09 லட்சம் கோடி ரூபாயை டெபாசிட் செய்து இருக்கிறார்கள். சுமார் 2.25 லட்சம் கோடி கடன் கொடுத்து இருக்கிறார்கள். வாரா கடன் 17,134 கோடி ரூபாயாக இருக்கிறது. இந்த் அவங்கியை நம்பி சுமாராக 18,000 ஊழியர்கள் வேலை பார்க்கிறார்களாம். 1,337 ஏடிஎம்களும் 1,122 வங்கிக் கிளைகளும் இருக்கின்றன. திடீரென இத்தனை பெரிய வங்கியின் செயல்பாடு தடைபட்டால் முதலில் பாதிக்கப்படுவது ஊழியர்கள் தானே.! நல்ல வேளையாக வர்களின் வேலை மற்றும் சம்பளத்தை நிதி அமைச்சர் உறுதி செய்யப்படும் எனச் சொல்லி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications