பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நாடு முழுவதும் ஒரு மாதிரியான வரி விதிப்பை அமல்படுத்தும் நோக்கில், 2017 ஜூலை 1ம் தேதி சரக்கு சேவை வரி (ஜிஎஸ்டி) அறிமுகப்படுத்தியது. தற்போது ஜிஎஸ்டி வாயிலாக மாதந்தோறும் சராசரியாக ரூ.1.50 லட்சம் கோடிக்கு மேல் வருவாய் வந்து கொண்டு இருக்கிறது. 2021 செப்டம்பரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான மற்றும் மாநில நிதியமைச்சர்கள் கொண்ட ஜிஎஸ்டி கவுன்சில், ஜிஎஸ்டி விகிதங்களை மதிப்பாய்வு எளிமைப்படுத்தவும், வரி அடுக்குகளில் மாற்றங்களை பரிந்துரைக்கவும் ஒரு அமைச்சர்கள் குழுவை அமைத்தது. இந்த குழுவில் 6 மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் உள்ளனர். அமைச்சர்கள் குழு தனது பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த சூழ்நிலையில், ஜிஎஸ்டி விகிதங்கள் மேலும் குறையும் என்றும், வரி விகிதங்கள் மற்றும் அடுக்குகளை பகுத்தறிவு செய்யும் பணிகள் கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நிர்மலா சீதாராமன் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: 2017 ஜூலை 1ம் தேதியன்று ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டபோது வருவாய் நடுநிலை விகிதம் 15.8 சதவீதமாக இருந்தது. இது 2023ல் 11.4 சதவீதமாக குறைந்தள்ளது.

இது இன்னும் குறையும். வரி விகிதங்கள் மற்றும் அடுக்குகளை பகுத்தறிவு செய்யும் வேலை கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தை எட்டி விட்டது. அமைச்சர்கள் குழு சிறப்பாக செயல்பட்டிருக்கும் என்று நான் கருதுகிறேன். ஆனால் ஒவ்வொரு குழுவின் பணிகளையும் மீண்டும் ஒரு முறை முழுமையாக பதிப்பாய்வு செய்து, இது குறித்து இறுதி முடிவுக்கு வர முடியுமா என்பதை பார்க்க கவுன்சிலுக்கு எடுத்து செல்ல வேண்டிய பொறுப்பை நான் எடுத்துக் கொண்டேன்.
நாங்கள் அதை அடுத்த கவுன்சில் கூட்டத்துக்கு எடுத்துச் செல்வோம். மிக முக்கியமான சில பிரச்சினைகள், குறைப்பு, விகிதங்களை பகுத்தறிவு செய்தல், அடுக்குகளின் எண்ணிக்கையை பார்ப்பது போன்றவற்றில் இறுதி முடிவுக்கு வருவதற்கு நாங்கள் மிக அருகில உள்ளோம். மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளில் பொது மக்களின் பங்குகளை அதிகரிக்க உறுதி பூண்டுள்ளது. பொதுத்துறை வங்கிகளில் அதிக சில்லரை முதலீட்டாளர்கள் இருப்பதை நாங்கள் விரும்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Story written by: Subramanian


Click it and Unblock the Notifications