ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் காதல் மனைவி நீதா அம்பானி. இவர் ரிலையன்ஸ் பவுன்டேஷனின் நிறுவனர் மற்றும் தலைவராக உள்ளார். நீதா அம்பானி தனது 60வது பிறந்தநாளில் மும்பையில் புதிதாக ஜூனியர் பள்ளியை தொடங்கியுள்ளார்.
இந்த பள்ளி மும்பையின் பாந்த்ரா குர்லா வளாகத்தில் நீதா அம்பானி ஏற்கனவே நடத்தி வரும் திருபாய் அம்பானி சர்வதேச பள்ளி (டி.ஏ.ஐ.எ.எஸ்.) வளாகத்துக்கு அருகில் அமைந்துள்ளது. 2003ல் திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியை நீதா அம்பானி தொடங்கினார். இன்று இந்தியாவின் நம்பர் ஒன் சர்வதேச பள்ளியாகவும், உலகின் சிறந்த 20 ஐ.பி. பள்ளிகளில் ஒன்றாக அந்த பள்ளி விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, குழந்தைகளுக்கு நவீன தனித்துவமான மற்றும் உலகம் தரம் வாய்ந்த கல்வியை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் நீதா முகேஷ் அம்பானி ஜூனியர் பள்ளியை நீதா அம்பானி ஆரம்பித்துள்ளார். கடந்த புதன்கிழமையன்று பள்ளியின் தொடக்க விழாவில் முகேஷ் அம்பானி, நீதா அம்பானி, குடும்பத்தினர், நண்பர்கள், நலம் விரும்பிகள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
அவர்கள் முன்னிலையில் நீதா முகேஷ் அம்பானி ஜூனியர் பள்ளியின் வாஸ்து பூஜை நடைபெற்றது. நீதா முகேஷ் அம்பானி ஜூனியர் பள்ளி திறப்பு விழாவில் நீதா அம்பானி பேசுகையில், திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியின் (டி.ஏ.ஐ.எஸ்.) நோக்கம் கற்றல் மற்றும் கற்பித்தலுக்கு மகிழ்ச்சியான சூழலை உருவாக்குவது.
இரண்டு தசாப்தங்களுக்குள் திருபாய் அம்பானி சர்வதேச பள்ளி, ஏராளமான குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்களின் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சிறந்த கலாச்சாரத்தை கட்டியெழுப்புவதற்கான வலுவான அர்ப்பணிப்புடன், புதிய தலைமுறை முன்னணியில் இருப்பதால் மிகப்பெரிய நன்றியுணர்வு மற்றும் நம்பிக்கையுடன் நாம் எதிர்காலத்தை நோக்குகிறோம். இந்த புதிய கற்றல் கோயிலான நீதா முகேஷ் அம்பானி ஜூனியர் பள்ளியை (என்.எம்.ஏ.ஜே.எஸ்.) மும்பை நகரத்துக்கும் முழு தேசத்துக்கும் அர்ப்பணிப்பதில் நான் பெருமைப்படுகிறேன் என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications