டெல்லி: ஒரு காலத்தில் பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைந்த குடும்பங்கள் மட்டுமே வீடுகளில் ஏசி பயன்படுத்தி வந்தன. ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. நகரப் பகுதிகளில் பெரும்பாலான வீடுகளில் ஏசி பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பணப்புழக்கம் அதிகரிப்பு என்பது ஒரு புறம் இருந்தாலும் தற்போது ஏசி என்பது அடிப்படை தேவையாக மாறிவிட்டது. இதற்கு முக்கிய காரணம் நமது காலச்சூழல்களில் ஏற்பட்டுள்ள மாற்றம்.

பருவநிலை மாற்றம் நமது வானிலையை வெகுவாக மாற்றி அமைத்துள்ளது. திடீரென மழை பெய்வதும் திடீரென அதிக வெயிலடிப்பதும் என பருவநிலை மாற்ற பாதிப்புகளை நாம் தற்போது அனுபவித்து வருகிறோம்.
நடப்பாண்டில் கூட இதற்கு முன்பு இல்லாத அளவிற்கு கடுமையான வெயிலை நாம் சந்தித்து வருகிறோம். இந்த சூழலில் ஏசி பயன்பாடு என்பது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. வீடு மட்டுமல்லாது அலுவலகங்கள் , வணிக ரீதியான கடைகள் ஆகியவற்றில் ஏசி பயன்படுத்தாமல் இருக்க முடியவில்லை.
இந்த நிலையில் தான் சமூக வலைத்தளங்களில் தற்போது மத்திய அரசுக்கு பலரும் வலுவான ஒரு கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். ஏசி என்பது ஆடம்பரம் கிடையாது அது அத்தியாவசிய பட்டியலில் இணைந்துவிட்டது எனவே, ஏசியை அதிகபட்ச ஜிஎஸ்டி வரம்பான 28% இருந்து குறைத்து, 18 % வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை சமூக வலைத்தளங்களில் பரவலாக முன்வைக்கப்பட்டு வருகிறது.
தற்போது கடுமையான வெப்பம் வாட்டி வரக்கூடிய சூழலில் தயவுசெய்து ஏசி-க்கான ஜிஎஸ்டியை 28 சதவீதத்திலிருந்து 18 சதவீத வரம்புக்குள் கொண்டு வாருங்கள் என சமூக வலைதள வாசிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ஏனெனில் தற்போது சாமானிய குடும்பமும் ஏசி பயன்படுத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு இதன் ஜிஎஸ்டி வரம்பை மாற்றி அமைக்க வேண்டும் என நெட்டிசன்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்தியாவில் தற்போது நிலவும் வெப்பநிலை தொடர்பான தகவல்களை பகிர்ந்து இணையதளவாசதிகள் இந்த கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.
மத்திய நிதித்துறை அமைச்சகத்தை டேக் செய்து பெரும்பாலானவர்கள் ஏசி என்பது தற்போது ஆடம்பர பொருட்களின் பட்டியலில் வராது அத்தியாவசிய பொருளில் சேர்ந்து விட்டது எனவே நிதி துறை அமைச்சகம் இதனை கவனத்தில் கொண்டு ஜிஎஸ்டி வரி அளவினை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான அபிஷேக் மனு சிங் இது தொடர்பாக தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியா போன்ற வெப்பம் மிகுந்த ஒரு நாட்டில் ஏசிக்கு 28% ஜிஎஸ்டி விதிப்பது என்பது மிகப்பெரிய குற்றம் எனக் கூறியுள்ளார். வெப்பநிலை உயரும் போது புரொடெக்டிவிட்டி குறையும். வெப்பம் மக்களை மனரீதியாகவும் பாதிக்கிறது என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார்.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications