இனி தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் கண்டிப்பாக இன்சூரன்ஸ் வைத்திருக்க வேண்டும். இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டி வந்தால் அவர்களை டோல் பிளாசாவில் கண்டுபிடிக்கும் புதிய தொழில்நுட்பத்தை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சோதனை செய்து வருகிறது.
இந்த புதிய நடைமுறையின் கீழ் தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் ஒவ்வொரு ஓட்டுநரிடமும் செல்லுபடியாகும் இன்சூரன்ஸ் இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அந்த வாகனத்தை ஓட்டி வரும் உரிமையாளருக்கு ஒரு SMS அனுப்பப்படும். தற்போது டெல்லியில் உள்ள அர்பன் எக்ஸ்டென்ஷன் ரோடு-II சாலையில் உள்ள முண்ட்கா டோல் பிளாசாவில் இந்த திட்டம் முன் முயற்சியாக தொடங்கப்பட்டுள்ளது.

இதை நாடு முழுவதும் விரிவு படுத்தினால் போக்குவரத்து அதிகாரிகள் உதவி இல்லாமல்.. ஒவ்வொரு வாகனத்தையும் தனித்தனியாக சோதனை செய்யாமல்.. இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களைக் கண்டுபிடிக்க முடியும். முதலில் முண்ட்கா டோல் பிளாசாவில் சோதனை செய்துவிட்டு தொழில்நுட்பம் நன்றாக வேலை செய்கிறதா? என்பதை உறுதி செய்த பிறகு நாட்டின் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்த இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டுள்ளது. மோட்டார் வாகனச் சட்டம் 1988-இன் கீழ் தேர்ட் பார்ட்டி இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றமாகும்.
இந்த புதிய தொழில்நுட்பம் எவ்வாறு செயல்படும்?: தேசிய தகவல் மையத்தால் பராமரிக்கப்படும் இணையதளம் தான் வாகன். இதில் உள்ள வாகனங்களின் பதிவு விவரங்களை ஒப்பிட்டு பார்த்து இன்சூரன்ஸ் செயல்பாட்டில் இருக்கிறதா என்பதை வரவிருக்கும் புதிய தொழில்நுட்பம் சரிபார்க்கும்.
ஒரு வாகனம் டோல் பிளாசாவை தாண்டும் போது அதன் விவரங்கள் அனைத்தும் வாகன் தளத்திற்கு அனுப்பப்பட்டு அங்குள்ள ஆட்டோமேட்டிக் அமைப்பின் மூலம் வாகனத்திற்கு இன்சூரன்ஸ் இருக்கிறதா? அல்லது காலாவதி ஆகிவிட்டதா? என்பது சரி பார்க்கப்படும். ஒரு வேளை இன்சூரன்ஸ் இல்லை என்றால் வாகனத்தின் உரிமையாளருக்கு SMS அனுப்பப்படும்.
அனுப்பப்படும் SMS-இல் வாகனத்தின் ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர், டோல் ப்ளாசாவை கடந்த தேதி மற்றும் நேரம், இன்சூரன்ஸ் காலாவதியான தேதி ஆகிய விபரங்கள் அனைத்தும் இருக்கும்.
செல்லுபடியாகும் இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் எவ்வளவு அபராதம்?: மோட்டார் வாகனச் சட்டம் 1988 பிரிவு 196-இன் கீழ் செல்லுபடியாகும் தேர்ட் பார்ட்டி இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றமாகும். இந்தியாவின் பொதுச்சாலைகளில் பயன்படுத்தும் எல்லா வாகனங்களுக்கும் இந்த இன்சூரன்ஸ் கட்டாயம்.
தேர்ட் பார்ட்டி இன்சூரன்ஸ் என்றால் என்ன?: தேர்ட் பார்ட்டி இன்சூரன்ஸ் என்பது நீங்கள் உங்கள் காரை ஓட்டி செல்கிறீர்கள்.. எதிர்பாராத விதமாக எதிரே இருக்கும் இருசக்கர வாகனத்தில் மோதி விட்டால் அந்த பைக்கை பழுது பார்க்கும் செலவுக்கு நீங்கள் பணம் செலுத்தத் தேவையில்லை. உங்களிடம் இன்சூரன்ஸ் இருந்தால் அதற்கு இன்சூரன்ஸ் நிறுவனமே பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்கும்.
விபத்து ஏற்படுத்தியவர் வசதி இல்லாதவராக இருந்தால் பாதிக்கப்படும் அப்பாவி மக்களுக்கு உரிய நேரத்தில் இழப்பீடு கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் அரசு இந்த இன்சூரன்ஸை கட்டாயம் ஆக்கியுள்ளது.
சட்டத்தை மீறி எத்தனை முறை வாகன ஓட்டுனர் செயல்படுகிறாரோ அதற்கு ஏற்ப அபராதம் விதிக்கப்படும். முதல் முறை விதி மீறி வாகனம் ஓட்டுபவர்களுக்கு வாகனத்தின் பேஸ் இன்சூரன்ஸ் ப்ரீமியம் எவ்வளவோ அதைவிட 3 மடங்கு அல்லது 5000 ரூபாய் வரை அபராதமாக விதிக்கப்படும்.
தொடர்ந்து 2-வது முறையும் விதி மீறி இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் வாகனத்தின் பேஸ் இன்சூரன்ஸ் ப்ரீமியத்தை காட்டிலும் 5 மடங்கு அல்லது ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும் வாய்ப்புள்ளது. அடுத்தடுத்த முறையும் விதி மீறுபவர்களுக்கு ரூ.10,000-த்திற்கும் மேல் அபராதம் செலுத்த நேரிடலாம்.
வாகன ஓட்டிகள் தங்களுடைய இன்ஷூரன்ஸ் எக்ஸ்பைரி ஆவதற்கு முன்பே அதை ரினிவல் செய்ய வேண்டும் என்பதற்காகவும், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நேரத்தில் இழப்பீடு கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இத்தகைய முயற்சியை எடுத்து வருகிறது.


Click it and Unblock the Notifications
