அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு விசா நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறார். குறிப்பாக வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறுவதை தடுக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
ஹெச்1பி விசாவுக்கான கட்டணம் உயர்வு, அமெரிக்க தூதரகங்களில் விசாவுக்காக விண்ணப்பம் செய்தவர்களுக்கான நேர்காணல்கள் திடீரென நிறுத்தி வைப்பு என அடுத்தடுத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன . இது அமெரிக்கா செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கக்கூடிய இந்தியர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சூழலில் அமெரிக்க தூதரகம் ஒரு அதிர்ச்சியான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில் சுற்றுலா விசா தொடர்பான ஒரு புதிய கட்டுப்பாட்டினை வெளியிட்டு இருக்கிறது. இதன் படி அமெரிக்கா சென்று குழந்தை பெற்றால் குழந்தைக்கு நிரந்தர குடியுரிமை கிடைக்கும் என்ற நோக்கத்திற்காக அமெரிக்காவுக்கு சுற்றுலா விசா வேண்டி விண்ணப்பம் செய்கிறார்கள் என்பது கண்டறியப்பட்டால் தூதரக அதிகாரிகள் அந்த இடத்திலேயே விசா விண்ணப்பத்தை நிராகரிப்பார்கள் என தெரிவித்திருக்கிறது.
தங்களுடைய குழந்தையை அமெரிக்க மண்ணில் பெற்றெடுத்தால் அந்த குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை இயற்கையாகவே கிடைத்துவிடும் என்பதற்காக பி1 மற்றும் பி2 ஆகிய சுற்றுலா விசாக்களை பலர் விண்ணப்பம் செய்கிறார்களாம். இதனை birth tourism என அழைக்கிறார்கள். இவ்வாறு அமெரிக்க மண்ணில் குழந்தை பெற்று கொள்வதை மட்டுமே நோக்கமாக கொண்டு சுற்றுலா விசா விண்ணப்பம் செய்வது அனுமதிக்கப்படாது என கூறியுள்ளது.

தூதரக அதிகாரிகள் இந்த நோக்கம் இருப்பதை உறுதி செய்தால் இத்தகைய விசா விண்ணப்பங்கள் உடனடியாக நிராகரிப்பார்கள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது . இதன்படி பி1 மற்றும் பி2 விசா விண்ணப்பங்கள் இனி மிகத் தீவிரமாக கண்காணிக்கப்பட உள்ளன . இது தொடர்பாக அமெரிக்க அரசாங்கம் அனைத்து தூதரக அதிகாரிகளுக்கும் 2020 ஆம் ஆண்டிலேயே அதிகாரம் வழங்கி வெளியிட்ட உத்தரவு சுட்டிக்காட்டப்படுகிறது.
பெரும்பாலான வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் டூரிஸ்ட் விசாவில் வருகை தருகிறார்கள் . ஆனால் இவ்வாறு டூரிஸ்ட் விசாவில் அவர்கள் வருகை தருவது சுற்றுலா செல்வதற்கு அல்ல தங்களுடைய குழந்தையை அமெரிக்க மண்ணில் பெற்றெடுத்து குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை பெற்றுவிடலாம் என்ற என்பதே பிரதான நோக்கமாக இருக்கிறது என அமெரிக்க அரசு அதிகாரிகள் கூறுகின்றனர். இவர்கள் சுற்றுலா விசாவில் வந்து அமெரிக்கர்களின் வரிப்பணத்தை பயன்படுத்தி குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள் என தொடர்ந்து அமெரிக்க அரசாங்கம் கூறி வருகிறது.
ஏற்கனவே ஹெச்1பி விசா விண்ணப்பம் செய்பவர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்கள் அமெரிக்காவிற்கு வருவதற்கு விசாவின் விண்ணப்பம் செய்தால் அவர்களின் சமூக வலைதளங்களை கண்காணிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது சுற்றுலா விசாவுக்கும் கடிவாளம் போடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications