தேனி: அண்மைக்காலமாக பெண்கள் தங்கள் வீடுகளில் இருந்து சிறு தொழிலை தொடங்கி அதனை மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைய செய்கிறார்கள் என்பதற்கு உதாரணமான பல செய்திகளை நாம் பார்த்து வருகிறோம். அந்த வகையில் தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண் சத்து மாவு விற்பனையில் கலக்கி வருகிறார். அவரை பற்றி இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
தேனி மாவட்டம் அரண்மனை புதூர் பகுதியை சேர்ந்தவர் தான் ஹேமா. இளங்கலை பட்டப்படிப்பு முடித்த இவர், படிப்பை முடித்த உடனே வேலைக்கு செல்லவில்லை. மாறாக, சுய தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இவருக்கு தோன்றியது. தன்னுடைய திட்டத்தை தாயாரிடம் தெரிவித்தார். இதனை எடுத்து ஹேமாவுக்கும் அவரது தாயாருக்கும் புதுமையான முறையில் மக்களுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடிய வகையிலான ஊட்டச்சத்து பொடிகளை தயார் செய்து விற்கலாம் என்ற யோசனை இவர்களுக்கு தோன்றியது.

இதனை அடுத்து ஹேமா வேளாண் அறிவியல் மற்றும் பயிற்சி மையத்தில் இணைந்து சிறுதானியங்கள் மற்றும் சிறுதானியங்களில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை எப்படி தயாரிப்பது என்பது குறித்து பயிற்சியில் கலந்து கொண்டார். இதில் ஆரோக்கியமான முறையில் பொடிகளை எப்படி தயாரிக்க வேண்டும், அதனை எப்படி சந்தைப்படுத்த வேண்டும் என்பது குறித்து பயிற்சிகள் வழங்கப்பட்டன.
முழுமையாக பயிற்சி பெற்ற ஹேமா தனது தாய்க்கும் இதனை கற்று தந்து தற்போது சிறுதானியங்கள் மூலம் ஊட்டச்சத்து பவுடர்கள் மற்றும் கம்பு, கேழ்வரகு மால்ட் உள்ளிட்டவறை தயார் செய்து விற்பனை செய்து வருகிறார். கருப்பு கவனி, சிவப்பரிசி, கம்பு ,நிலக்கடலை உள்ளிட்ட பல்வேறு வகையான தானியங்கள் மூலம் இவர்கள் ஊட்டச்சத்து கலவையை தயார் செய்கின்றனர்.
அது மட்டும் இல்லாமல் சிறுதானியங்களில் இருந்து பால் பவுடர் தயாரித்தும் அசத்துகிறார்கள். தற்போதைக்கு நாளொன்றுக்கு 3 கிலோ முதல் 5 கிலோ வரை ஊட்டச்சத்து பொடிகளை உற்பத்தி செய்து வரும் இவர்கள் தங்களின் தொழிலை விரிவு படுத்துவதற்காக பெரிய அளவிலான உற்பத்தி நிறுவனத்தை தொடங்க இருப்பதாக கூறுகின்றனர். கூடிய விரைவில் ஈ காமர்ஸ் தளங்களிலும் தங்களின் பொருட்களை விற்பனை செய்ய இருப்பதாக கூறுகின்றனர்.
இந்தியாவை பொறுத்தவரை மத்திய மாநில அரசுகள் சிறு தொழில்களை வெகுவாக ஊக்குவித்து வருகின்றன. சிறு தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய கடன் உதவிகள் கூட வழங்கப்படுகின்றன. இவற்றை சாமர்த்தியமாக பயன்படுத்துபவர்கள் தொழிலிலும் வாழ்க்கையிலும் வெற்றி பெறுகிறார்கள்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications