தங்கம் விலை அதன் உச்ச விலையான 1.83 லட்சம் ரூபாயில் இருந்து 1.27 லட்சம் ரூபாயாகக் குறைந்திருந்தாலும், பெரும் பகுதி மக்களுக்கு இன்னும் தங்கம் விலை எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது.
இன்னும் சிலர் தங்க நகை வாங்க வேண்டும் என ஆசையில் இருந்தாலும் கையில் இருக்கும் சேமிப்பைப் பயன்படுத்த மனமில்லாமல் இருப்பார்கள். இப்படி புது நகை வாங்க ஆசைப்படும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் வழி கையில் இருக்கும் பழைய நகையைக் கொடுத்து புது நகையை வாங்குவது தான்.
ஆனால் இதில் வருமான வரி விதிப்பு சிக்கல், நகைக் கடைகளின் தந்திரம் நிறைந்துள்ளது.

சட்டம் என்ன சொல்கிறது..?
பழைய நகையைக் கொடுத்து புது நகையை வாங்குவது என்பது எளிதாக இருக்கும், ஆனால் இதில் பல கட்டணங்களை ஒளிந்துகொண்டு மக்களின் சேமிப்பைக் கரைக்கிறது.
வருமான வரித்துறையின் விதிகள் படி, எக்ஸ்சேஞ்ச் என்பது 2 கட்ட வர்த்தகம். அதாவது நகைக் கடையில் பழைய நகையைக் கொடுத்து பணம் பெறுவது ஒரு வர்த்தகம், அதே கடையில் புதிய நகையை வாங்குவது ஒரு வர்த்தகம்.
இரண்டுக்கும் வருமானம், வரி கணக்கீடு உண்டு என்பது எத்தனை பேருக்குத் தெரியும்.
வரி கணக்கீடு..
தங்க நகைகள் என்பது ஒரு சொத்தாகக் கருதப்படுவதால், இதை விற்கும்போது கேப்பிடல் கெயின்ஸ் டாக்ஸ் விதிக்கப்படும். அதாவது ஒரு நகையை நீங்கள் 24 மாதத்திற்கும் அதிகமாக வைத்திருக்கும் பட்சத்தில் அதை விற்கும் போது லாங்க் டேர்ம் கேப்பிடல் கெயின்ஸ் டாக்ஸ் விதிக்கப்படும்.
அதாவது நகையை விற்றுப் பெறப்படும் தொகைக்கு 12.5 சதவீத வரி + 4 சதவீத செஸ் சேர்ந்து மொத்தம் 13 சதவீதம் வரி செலுத்த வேண்டும்.
உதாரணமாக 15 வருடத்திற்கு முன்பு 7 லட்சம் ரூபாய்க்கு வாங்கிய தங்கத்தின் மதிப்பு இன்று 40 லட்சம் ரூபாய். இதில் வாங்கிய தொகையைக் கழிக்கும் பட்சத்தில் 33 லட்சத்திற்கு 13 சதவீத வரி வீதம் 4.29 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும்.
பழைய தங்க நகையை விற்ற 40 லட்சம் ரூபாய் தொகைக்கு புதிய நகையை வாங்கும் போது அதற்கு 3 சதவீதம் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும்.
ஜிஎஸ்டிக்காக தனியாக 1.2 லட்சம் ரூபாய் என மொத்தம் 40 லட்சம் ரூபாய்க்கு 5.49 லட்சம் ரூபாயை வரியாக மட்டுமே செலுத்த வேண்டும்.
நகை கடைகள் செய்வது என்ன..?
ஆனால் பெரும்பாலான நகை கடைகள் இதை செய்வது இல்லை என பி.என்.காட்கில் அண்ட் சன்ஸ் நகை கடையின் தலைவர் அமித் மோன்டால் தெரிவித்துள்ளார்.
அமித் பழைய நகை கொடுத்து புதிய நகைகளை வாங்குவது குறித்து விளக்கமாகப் பேசுகையில் சில நகை கடைகள் பழைய நகை 50 கிராம் எனில், புதிய நகை 55 கிராம் கொண்டது என வைத்துக்கொள்வோம். இதில் கூடுதலாக வாங்கப்படும் 5 கிராமுக்கு மட்டுமே ஜிஎஸ்டி வசூலிக்கின்றனர்.
இன்னும் சில நகை கடைகள் 55 கிராம் கொண்ட புதிய நகை முழுவதுக்கும் ஜிஎஸ்டி வசூலிக்கிறது என விளக்கம் கொடுத்தார்.
எனவே நீங்கள் பழைய நகையை எக்ஸ்சேஞ்ச் செய்யும் போது நகைக் கடைகளிடம் முதலில் விசாரித்து விட்டு வாங்கும் போது, வரியாகச் செலுத்தப்படும் தொகையைப் பெரிய அளவில் குறைக்க முடியும். கூடுதலாக வாங்கப்படும் தங்கத்திற்கு மட்டும் ஜிஎஸ்டி செலுத்தும் போது நமக்குப் பெரியளவில் நன்மை உண்டு.
இந்த 5.49 லட்சம் வரியை வெறும் 36,000 ரூபாயாக குறைக்க வழி இருக்கிறது தெரியுமா..?
பழைய முறை
நகை கடைகளில் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்கள் வருவதற்கு முன்பு மக்கள் தங்களிடம் இருக்கும் பழைய தங்கத்தை, நகை செய்யும் ஆசாரிகளிடம் கொடுத்து, அதே தங்கத்தில் புதிய நகைகளை செய்து வாங்குவார்கள்.
இந்த வர்த்தக முறையில் LTGC வரியும் இல்லை, மொத்த நகையின் மதிப்புக்கு GST-யும் இல்லை. கொடுக்கப்பட்ட தங்கத்திலேயே புது தங்க நகையை வாங்கும் பட்சத்தில் இதற்கு LTCG வரி இல்லை. தங்க நகை செய்வதற்கான செய்கூலி வசூலிக்கப்படும், அதற்கு மட்டுமே ஜிஎஸ்டி உண்டு, ஆனால் இது 18 சதவீதமாக கணக்கிடப்படுகிறது.
உதாரணமாக 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகையை செய்ய 2 லட்சம் செய்கூலியாக வசூலிக்கும் பட்சத்தில் 18 சதவீதம் ஜிஎஸ்டி எனில் 36000 ரூபாய் மட்டுமே வரியாக செலுத்த வேண்டும்.
ஆனால் இந்த முறையில் கூடுதல் காலம் தேவைப்படும், நகை கடைக்கு சென்று டக்கென நகை வாங்குவது போல் இந்த முறை இருக்காது. இந்த முறையில் கூடுதலாக வாங்கப்படும் தங்கத்திற்கு 3 சதவீதம் மட்டுமே ஜிஎஸ்டி. இந்த முறையில் தான் பெரும்பாலான நகை கடைகள் பழைய தங்கத்தை எக்ஸ்சேஞ்ச் செய்கிறது.


Click it and Unblock the Notifications