முதலில் வெங்காயத்துக்கு ஒரு வணக்கத்தைச் சொல்லிக் கொள்வோம். வெங்காயமின்றி அமையாத இந்திய சமையலுக்கு பழக்கப்பட்ட நாம், என்ன விலை வந்தாலும் ஒரு குறைந்தபட்ச வெங்காயத்தையாவது தினசரி பயன்படுத்தியே ஆக வேண்டி இருக்கிறது.
இப்போது இந்தியாவில் ஏற்பட்டு இருக்கும் வெங்காய விலைப் பிரச்னையைச் சமாளிக்க, மத்திய அரசு பல்வேறு நாடுகளில் இருந்தும் வெங்காயத்தை இறக்குமதி செய்ய இருக்கிறார்கள்.
ஆனால் விவசாயிகளும் விவசாய சங்கங்களும், இந்த வெங்காய இறக்குமதியைச் செய்ய வேண்டாம் என அலறுகிறார்கள்..! ஏன்..?
வெங்காய வரத்து
கடந்த டிசம்பர் 05, 2019 அன்று 1,17,000 குவிண்டால் வெங்காயம் மட்டுமே சந்தைக்கு வந்தது. ஆனால் டிசம்பர் 05, 2018 அன்று சுமாராக 3,00,000 - 3,50,000 குவிண்டால் வெங்காயம் சந்தைக்கு வந்ததாம். இவ்வளவு கடுமையாக வெங்காய வரத்து குறைந்ததற்கு கன மழையும், வெங்காய உற்பத்தி குறைவினால் ஏற்பட்ட சப்ளை குறைவும் தான் காரணமாம்.
பயிரிடுதல்
தற்போது ஒரு கிலோ வெங்காயம் 120 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை வியாபாரம் ஆகி வருகிறது. எனவே பல விவசாயிகளும் கூடுதல் செலவு செய்து, கூடுதல் ஆட்களைப் பயன்படுத்தி வெங்காயத்தை பயிர் செய்து வருகிறார்கள். இந்த வெங்காயம் அடுத்த ஜனவரி 2020-ல் சந்தைக்கு வரத் தொடங்கும்.
இறக்குமதியும் அதே காலம்
தற்போது மத்திய அரசு வெங்காயத்தை இறக்குமதி செய்ய, இறக்குமதி ஆர்டர்களை எல்லாம் கொடுத்தால் கூட, ஜனவரி 2020-ல் தான் இறக்குமதி வெங்காயமும் வரும். ஆக இந்திய விவசாயிகளின் வெங்காய விளைச்சல் அதிகமாக இருக்கும் ஜனவரி (2020) காலத்தில் தான் இறக்குமதி சரக்குகளும் வரும். இப்படி வந்தால் வெங்காய விலை சரிவைச் சந்திக்க வேண்டி இருக்கும் என்கிறார்கள் விவசாய தரப்பினர்கள்.
வெங்காய வரத்து
"அடுத்த 15 நாட்களுக்கு வெங்காயம் கிலோ 80 -110 ரூபாய் வரை இருக்கலாம். அதற்கு அடுத்த ஜனவரி முதல் இரண்டு வாரங்களில் வெங்காய விலை கிலோவுக்கு 50 - 80 ரூபாயாக இருக்கும். ஜனவரி கடைசி வாரங்களில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 35 - 60 ரூபாயாக குறையும்." என மூன்று தலைமுறையாக வெங்காய வியாபாரம் செய்து வரும் தானிஷ் ஷா, வெங்காய வரத்து பற்றிப் பேசி இருக்கிறார்.
வழக்கம் போல
அதனைத் தொடர்ந்து, 2020 பிப்ரவரி மாதத்தில் வெங்காயத்தின் விலை மீண்டும் பழைய படி, ஒரு கிலோவுக்கு 20 - 30 ரூபாய்க்கு விற்பனை ஆகத் தொடங்கும் எனச் சொல்லி இருக்கிறார் பரம்பரை பரம்பரையாக வெங்காய வியாபாரம் செய்து வரும் தானிஷ் ஷா. இவர் சொல்வது போல நடந்துவிட்டால் ஓகே..!
அரசு தயாராக இருக்க வேண்டும்
அதோடு இந்திய விவசாயிகளின் வெங்காய விளைச்சல், பிப்ரவரி 2020-ல் ஏற்றுமதியும் ஆகத் தொடங்கி விடும். எனவே "இந்தியாவில் இருந்து வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய, அரசு தன் இறக்குமதி கொள்கைகளை மாற்றிக் கொள்ள தயாராக இருக்க வேண்டும்" எனச் சொல்லி இருக்கிறார் விவசாய பொருட்கள் சந்தைப்படுத்துதல் குழு இயக்குநர் ஜெயதத்தா ஹோல்கர்.


Click it and Unblock the Notifications