பெங்களூரு: இந்தியாவின் புகழ்பெற்ற ஆன்லைன் கல்வி தளமாக இருந்த பைஜூஸ் பெரும் அளவிலான வீழ்ச்சியை கண்டுள்ளது. பைஜூஸ் நிறுவனரான ரவிச்சந்திரன் திவாலானதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பைஜூஸுக்கு கடன் வழங்கிய நிறுவனங்கள், தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயத்தில் அடுத்தடுத்து மனு தாக்கல் செய்வதால் அந்நிறுவனத்திற்கு சிக்கல் அதிகரித்துள்ளது.

சீனாவை சேர்ந்த எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியாளரான ஓப்போ மொபைல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், பைஜூஸுக்கு எதிராக ஒரு திவால் நிலை மனுவை தாக்கல் செய்துள்ளது.
பைஜூஸ் நிறுவனம் தங்களிடம் வாங்கிய கடனை மீட்டு தருமாறு கூறி இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயத்தின் பெங்களூரு அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
ஓப்போ தாக்கல் செய்துள்ள மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதில் அளிக்குமாறு தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் பைஜூஸுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வரும் 28ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என தெரிகிறது.
பைஜூஸ் நிறுவனம் தங்களுக்கு எவ்வளவு கடன் தொகையை திரும்ப தர வேண்டி உள்ளது என்பதற்கான விவரங்களை ஓப்போ நிறுவனம் வெளியிடவில்லை. ஏற்கனவே பைஜூஸ் நிறுவனத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள பல்வேறு திவால் மனுக்களையும் நீதிபதிகள் பிஸ்வால் மற்றும் மனோஜ் குமார் துபாய் அமர்வு விசாரித்து வருகிறது.
பிசிசிஐ, டெலி பெர்ஃபார்மன்ஸ் பிசினஸ் சர்வீசஸ், சர்ஃபர் டெக்னாலஜிஸ் மற்றும் ஓப்போ ஆகிய நிறுவனங்கள் தற்போது வரை பைஜூஸ் நிறுவனத்திற்கு எதிராக மனு தாக்கல் செய்துள்ளன.
இதில் டெலி பெர்ஃபார்மன்ஸ் நிறுவனத்துடன் பைஜூஸ் செட்டில்மெண்ட் தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. இது பாசிட்டிவான முறையில் செல்வதாகவும் கூறியுள்ளது.
முன்னதாக டெலி பெர்ஃபார்மன்ஸ் நிறுவனத்தின் மனுவை விசாரித்த தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் பைஜூஸ் நிறுவனத்தோடு 15 நாட்களுக்குள் செட்டில்மெண்ட் பேச்சுவார்த்தை முடிக்க வேண்டும் என அறிவுறுத்தியது.
கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி டெலி பெர்ஃபார்மன்ஸ் நிறுவனமானது 5 கோடி ரூபாய் கடனை திரும்ப செலுத்தவில்லை எனக் கூறி தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் பைஜூஸுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது. இதனை அடுத்து இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுத்துக் கொள்ளுமாறு நீதிமன்றம் சட்ட தீர்ப்பாயம் அறிவுறுத்தியது .
முன்னதாக சஃர்பர் டெக்னாலஜிஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்க தவறியதாக பைஜூஸுக்கு 20,000 ரூபாய் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் அபராதம் விதித்துள்ளது. ஒரு காலத்தில் 22 பில்லியன் டாலர் அளவுக்கு மதிப்பு கொண்ட நிறுவனமாக இருந்த பைஜூஸ், தற்போது ஊழியர்களுக்கு ஊதியம் கூட செலுத்த முடியாத நிலையில் உள்ளது.
அண்மையில் இந்நிறுவனம் திரட்டிய 200 மில்லியன் டாலர்களை நீதிமன்ற ஆணையின் காரணமாக பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. கடந்த மாதம் இதன் தலைமை செயல் அதிகாரியான அர்ஜுன் மோகன் தனது பதவியில் இருந்து விலகினார்.
பைஜூஸ் நிறுவனத்தின் கடன் மதிப்பானது இந்தியாவில் 200 மில்லியன் டாலர்கள் என்று அளவிலும் அமெரிக்காவில் 200 முதல் 250 மில்லியன் டாலர் என்ற அளவிலும் இருக்கிறது. இதனால் மீண்டும் எழுந்து வர முடியாத சூழலுக்கு பைஜூஸ் நிறுவனம் தள்ளப்பட்டுள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications