வங்கி சேவைகளை இலக்கு வைத்து நடத்தப்படும் சைபர் குற்றங்கள் மற்றும் பிஷிங் தாக்குதல்களின் பாதிப்புகளை குறைக்கும் வகையில், மத்திய உள்துறை அமைச்சகம், எஸ்பிஐ கார்டு பேமெண்ட்ஸ் அண்ட் சர்வீசஸ் லிமிடெட் (எஸ்பிஐ கார்டு) மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இணைந்து புதுமையான தீர்வை உருவாக்கி வருகிறது.
கடந்த சில வருடங்களாக சைபர் குற்றங்கள் பெரிய அளவில் அதிகரித்துள்ளது, படித்தவர்கள், படிக்காதவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என எந்த விதமான வித்தியாசமும் இல்லாமல் மோசடிகள் நடந்து வருகிறது.

இதில் முக்கியமாக களவாடப்பட்ட ஒன் டைம் பாஸ்வேர்டு (OTP) மூலம் எக்கசக்கமான மோசடிகள் நடந்து வருகிறது. இதை எப்படியாவது கட்டுப்படுத்த வேண்டும் என முடிவு செய்த இந்திய வங்கி துறை மத்திய உள்துறை அமைச்சகம், எஸ்பிஐ கார்டு மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இணைந்து மோசடியை தடுக்கும் புதிய கட்டுப்பாட்டு தளத்தை உருவாக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
ஒரு வங்கி வாடிக்கையாளரின் பதிவு செய்யப்பட்ட முகவரி மற்றும் அவரது இருப்பிடத்தைக் (geolocation) கண்காணித்து, ஒன் டைம் பாஸ்வேர்டு (OTP) எந்த இடத்திற்கு அனுப்பப்படுகிறது அதாவது டெலிவரி செய்யப்படுகிறது என்பதை வங்கிகள் கண்காணிக்கும் முறையை மத்திய அரசு சோதனை செய்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இரண்டு இடங்களுக்கும் இடையே வேறுபாடு இருந்தால், வாடிக்கையாளருக்கு மோசடி நடக்க வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை அனுப்பப்படும்.
"இந்த தீர்வு இன்னும் சோதனை கட்டத்திலேயே உள்ளது. இது ஆரம்ப கட்டம் தான். தொலைத்தொடர்பு நிறுவனங்களின் தரவுத்தளத்தின் மூலம் வாடிக்கையாளரின் இருப்பிடத்தைக் கண்காணித்து, ஒன் டைம் பாஸ்வேர்டு சரியான இடத்திற்குச் சென்றடைகிறதா என்பதை உறுதிப்படுத்துவது தான் இந்த செயல்முறையின் நோக்கம்," என்று ஒரு மூத்த வங்கி அதிகாரிதெரிவித்தார்.
டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளில் மோசடிகளைக் கட்டுப்படுத்த, இந்திய ரிசர்வ் வங்கி கூடுதல் அங்கீகரிப்பு காரணி (Two factor of authentication) பரிந்துரை செய்திருந்தது.
ஆனால், காலப்போக்கில், மோசடி செய்பவர்கள் வங்கி வாடிக்கையாளர்களைக் குழப்பி ஒன் டைம் பாஸ்வேர்டுகளைத் திருடவோ அல்லது முறையற்ற வகையில் வாடிக்கையாளரின் ஸ்மார்ட்போன்களுக்கு செல்ல வேண்டிய ஒன் டைம் பாஸ்வேர்டுகளை தங்கள் போன்களுக்கு திருப்பி விடும் திறன்களை வளர்த்துக் கொண்டுள்ளனர். இதனால், சைபர் குற்றங்களை எதிர்த்துப் போராடும் போது, இரண்டாம் கட்ட பாதுகாப்பு காரணி பயனற்றதாகிவிடுகிறது.


Click it and Unblock the Notifications