இந்தியாவின் மிகப்பெரிய ஹோட்டல் புக்கிங் சேவை நிறுவனமான ஓயோ, தனது நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் ஹோட்டல்களில், குறிப்பாக டவுன்ஹவுஸ் பை ஓயோ என்ற பிராண்டில் இயங்கும் ஹோட்டல்களில் இன் ஹவுஸ் கிட்சன் மற்றும் QSR வண்டிகள் மற்றும் சிறிய அளவிலான கடைகளை அறிமுகப்படுத்தி, உணவு மற்றும் குளிர்பான தொழிலில் நுழைய உள்ளதாக வியாழக்கிழமை அறிவித்தது.
ஓயோ ஹோட்டல் புக்கிங் சேவை பிரிவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வந்தாலும், பல நகரங்களில் வளர்ச்சியில் மந்த நிலையை எதிர்கொண்டு வருகிறது. இதேபோல் வெளிநாட்டு வர்த்தக விரிவாக்கத்தில் எதிர்பார்த்தப்படி வளர்ச்சியும் வருமானமும் கிடைக்காத காரணத்தால் புதிய வர்த்தகத்தை நோக்கி நகர துவங்கியுள்ளது.

2026 நிதியாண்டில், இந்நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் 1500 ஹோட்டல்களில் இந்த உணவு சேவைகளை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது ஓயோ. இந்த முயற்சி, தனது வாடிக்கையாளர்களுக்கு உயர்தர, புதிய மற்றும் வசதியான உணவுகளை பட்ஜெட் விலைில் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இது ஹோட்டல் வருவாயை 5-10% அதிகரிக்கும் என ஓயோ எதிர்பார்க்கிறது.
ஜனவரி 2025 முதல் டெல்லி, குர்கான், ஹைதராபாத், பெங்களூரு ஆகிய நகரங்களில் 100 ஹோட்டல்களில் சோதனை திட்டமாக தொடங்கியது, இது பெரிய அளவில் வெற்றி அடைந்த காரணத்தால் தற்போது நாட்டின் பிற நகரங்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட முடிவு செய்யப்பட்டு உள்ளது.
2026 நிதியாண்டின் முடிவுக்குள் நாட்டில் 1500 ஹோட்டல்களில் இந்த உணவு சேவைகளை வழங்க வேண்டும் என்ற இலக்கை கொண்டுள்ளது. மேலும் ஹோட்டல்களில் மெனு ஒவ்வொரு இடத்திற்கும் மாறுப்படும் என்பதையும் ஓயோ தெரிவித்துள்ளது.
இதுதவிர, ஓயோ 'டவுன்ஹவுஸ் கஃபே' என்ற பெயரில் க்யூஎஸ்ஆர் வண்டிகள் மற்றும் சிறிய அளவிலான கடைகளை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த கஃபேக்கள், அந்த பகுதியில் பிரபலமாக இருக்கும் உள்ளூர் உணவு வகைகள் மற்றும் கான்டினென்டல் உணவுகளை மலிவு விலையில் வழங்கவும் ஓயோ திட்டமிட்டு உள்ளது.
சரி, நீங்க ஓயோ நிறுவனத்தின் சேவையை பயன்படுத்தியுள்ளீர்களா..? ஓயோ சேவை குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்ட் ஆக பதிவிடுங்கள்.


Click it and Unblock the Notifications