தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பானி பூரி விற்பனையாளருக்கு ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டதால் சமூக ஊடக தளங்களில் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது. பானி பூரி விற்பனையாளர் 2023 முதல் 2024-ஆம் ஆண்டில் ஆன்லைன் மூலம் பானி பூரி விற்பனை செய்து ரூ.40 லட்சம் வருமானம் பெற்றுள்ளார். இதனால் அவருக்கு ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவருக்கு அனுப்பப்பட்ட ஜிஎஸ்டி நோட்டஸ் சமூக ஊடக தளங்களில் பகிரப்பட்டது.
இதற்கு முன்னர் பல்வேறு பதிவுகளில் ஒரு நிதியாண்டுக்கு எவ்வளவு பரிவர்த்தனை செய்யலாம் என்றும், எந்த வரம்பிற்கு மேல் இருந்தால் ஜிஎஸ்டி நோட்டீஸ் வரும் என்றும் பார்த்தோம். வரி செலுத்தாமல் தப்பிக்க முயலும் நபர்களுக்காக வருமானவரித்துறை பல்வேறு நடவடிக்கைகளை கையாண்டுள்ளது. அந்த வகையில் அதிகமான பணப்புழக்கம் வைத்துள்ள நபர்களின் விவரங்களை வங்கிகள் வருமானவரித்துறைக்கு வழங்க வேண்டும். இப்படி பல்வேறு வழிகளின் மூலம் நீங்கள் செய்யும் பரிவர்த்தனை வருமான வரித்துறையைச் சென்றடைகிறது.

வங்கிகள் மட்டுமின்றி யுபிஐ அப்ளிகேஷன்களில் அதிக பரிவர்த்தனை செய்த நபர்களின் விவரங்களும் வருமான வரித்துறையைச் சென்றடையும். அப்படித்தான் தான் இந்த விற்பனையாளரின் வருமானத் தகவல்கள் வருமானவரித்துறையை சென்றடைந்துள்ளது. 2024-ஆம் ஆண்டின் டிசம்பர் 17-ஆம் தேதியை குறிப்பிட்டு தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் மற்றும் மதிய ஜிஎஸ்டி சட்டத்தின் பிரிவு 70-இன் கீழ் பானி பூரி விற்பனையாளரை நேரில் வந்து ஆஜராகும்படி கூறி, ஆவணங்களை சமர்ப்பிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
அதோடு வரம்பை தாண்டிய பிறகு ஜிஎஸ்டி பதிவு பெறாமல் சேவைகளை வழங்குவது குற்றம் என்றும் அந்த வருமானவரித்துறை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. சமூக ஊடக தளங்களில் நோட்டீஸ் பரவலாக பகிரப்பட்டது. அந்த போஸ்டுக்கு பலர் தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்க தொடங்கினார். ஒரு பயனர் ரூ.40 லட்சம் என்பது அவர் பெற்ற தொகையாக கூட இருக்கலாம் அல்லது வருமானமாக இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம். அதிலிருந்து நீங்கள் வேலை கூலி ,செலவுகள் ஆகியவற்றை கழிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார்.
டாக்டர் தீரஜ் என்பவர், பல மருத்துவ கல்லூரிகளில் வழங்கப்படும் சம்பளத்தை விட இந்த தொகை அதிகம் என்று கமெண்ட் செய்திருந்தார். அவர் ஜிஎஸ்டி-யின் கீழ் பதிவு செய்து கொள்வது நல்லது என்று மற்றொரு ரெட்டிட் பயனர் கூறியிருந்தார். சில பயனர்கள் பானி பூரி மூலம் இவ்வளவு தொகை சம்பாதிக்க முடியுமா? இது உண்மையானதா அல்லது போட்டோஷாப் செய்யப்பட்டதா? என்று கேள்வி எழுப்பி இருந்தனர். இந்த நோட்டீஸ்-இன் உண்மைத்தன்மை குறித்து குட்ரிட்டன்ஸ் தமிழ் சரி பார்க்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications